10.ஆதலினால் காதலித்தேன்.! பொள்ளாச்சி அபி.

"உண்மை யொளிர்க" வென்று பாடவோ? - அதில்
உங்களருள் பொருந்தக் கூடுமோ?
வண்மை யுடையதொரு சொல்லினால் - உங்கள்
வாழ்வு பெற விரும்பி நிற்கிறோம்."
---------------பாரதியார் -----------------

இப்போது நான் பாடமாட்டேன் என்று சொல்லி,அவளின் எதிர்பார்ப்பை முறியடிக்க விரும்பவில்லை.நானும் பாடிவிடவே ஆசைப்பட்டேன்.ஆனால்,எனது உள்ளக் கிடக்கையை முழுதாய்க் கொட்டிவிடும் வகையில்,அந்தப்பாடல் இருக்கவேண்டும் என்றும்,நாம் இதுவரை எழுதிய பாடல்களில் அதுபோன்ற பாடல் எது இருக்கிறது.? என்று என் மனதுக்குள் ஒரு மிகவேகமான
‘ரீ வைண்டு’ ஓடியது.நான் பாடத்தயாரானேன்.

அப்போதெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த,,எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பாடலான ‘முதல்பார்வை பார்க்கும்போது..மனம் பாடும் நூறு பாட்டு...”, என்ற பாடலை அடிக்கடி நான் முணுமுணுப்பது வழக்கம். -படத்தின் பெயர் நினைவில்லை-

அந்தப்பாடலின் ராகமும்,பின்னனி இசையும்,பாடலில் சொல்லப்படும் உணர்ச்சிகரமான வார்த்தைகளும் என்னை மிகவும் கவர்ந்ததில்
அந்தப்பாடலின் ராகத்திலேயே நானும் ஒரு பாட்டு எழுதிவைத்து பாடி வந்தேன்.ஏறக்குறைய அந்தப்பாட்டு,இப்போது பாட மிகப் பொருத்தமாகவும் இருக்கும் என்றும் தோன்றியது.முடிவு செய்ததையடுத்து அதனைப் பாடத் துவங்கினேன்.

நீங்களும் கேட்கலாம்..,

“மனமெல்லாம் நூறு கனவு
தினந்தோறும் உந்தன் நினைவு

உனை எண்ணிப் பார்க்கும்போது..
ஒரு கவிதை சொல்லும் மனது..
ஒரு கவிதை சொல்லும் மனது..,

கண்கள் இரண்டிலும் காதல் உள்ளதோ என்று..
காத்து நின்றிடும் காளை தவிக்குதே இன்று..

உனக்கென மனம் உள்ளதோ..?
எனக்கதில் இடம் இல்லையோ..?

கண்ணே காதல் சொல்ல
காலம் வருமோ மெல்ல…

உன்னை எண்ணி வாடும்
நாளும் உன்னைத் தேடும்.. .. - மனமெல்லாம்

பேதை நெஞ்சமே ஊஞ்சலாடுமோ என்று..
புதிய சஞ்சலம் என் மனதிலே இன்று..

உறவிலே ஒரு பாடமே
உன்னிடம் நான் சொல்லவோ..

உலகம் அதனைத் தொடர..
உரைகள் எழுதி வைக்கவோ..,

காதல் கீதம் பாடும்-அந்த
நாளும் என்று வருமோ..?..- மனமெல்லாம்..,

தான் காதலிக்கும்,தன்னை இதுவரை காதலிக்காத பெண்ணைப் பார்த்து,ஒரு காதலன் உருகிப் பாடும் பாட்டாய் அமைந்த, திரைப்படப் பாடலின் உணர்ச்சிக்கு,சற்றும் குறையாமல் எனது பாடலையும் என் குரலில் இழைத்தேன்.அதிலிருந்த எதிர்பார்ப்பும்,தவிப்பும் எனது நெஞ்சை எப்படிப் புலம்ப வைத்திருந்ததோ..அதனை முழுமையாக வெளிக்காட்டி விட்டதாகவே நான் உணர்ந்தேன்.

தாகீராவும்,சரோவும் சில நிமிடங்கள் எதுவும் பேசவேயில்லை.,சரோவின் கண்கள் நீரில் மிதுப்பது தெரிந்தது.தாகீராவின் முகமோ சலனமற்று இருந்தது.அவள் மனதிற்குள் என்ன நினைத்திருந்தாள் என்று கண்டுபிடிக்க எனக்கும் வேறு மார்க்கம் தெரியவில்லை.

மேலும் சில விநாடிகள் அமைதியில் கழிந்தன.அந்தப் பேரமைதியை என்னால் தாங்க முடியவில்லை. “ஹேய்..என்ன பாட்டு நல்லாருக்கா.? இல்லையான்னு ஒண்ணுமே சொல்லலையே.?”

“சூப்பர்டா..ரொம்ப நல்லாருக்கு..எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு.., ஆனா மவனே..இதுவரைக்கும் ஒரு பாட்டாவது எனக்கே எனக்குன்னு நீ பாடிக் காமிச்சிருக்கியா..?” கிரீச்சிட்டாள் சரோ.அவள் குரலில் இருந்த அங்கலாய்ப்பு உண்மைதான்.இதுவரை எனது அம்மா,அப்பா,அத்தை மாமா என இருந்த உறவினர் கூட்டத்தில் மட்டுமே பாடியிருக்கிறேன்.அதுவும் எனது அப்பா,அத்தை,அப்புறம் நான் என மூவர் மட்டுமே,தமிழ்,ஹிந்தி திரைப்படப்பாடல்கள்,மற்றும் தனிஆல்பங்களாக வந்த பாடல்கள் எனப் பாடுவோம்.

“அட..உனக்காகன்னு இதுவரை நீ எப்பவாவது தனியா இப்படிக் கேட்டிருக்கியா..?.நீ கேட்கலை நான் பாடலை.!”

தாகிராவின் முகத்தில் இப்போது மெல்லிய தீற்றலாய் புன்னகை அரும்பியது.

மேலும் சில நிமிடங்கள் வேறு ஏதேதோ பேச்சுக்கள்…சரோ வைத்துத் தந்த டீ..என நேரம் கழிந்தது.

“சரி..எனக்கும் நேரமாகிவிட்டது.நான் கிளம்புகிறேன்” தாகீராவின் குரல்,அதுவரை எனக்குள் இருந்த மகிழ்ச்சியை சட்டெனப் பறித்தது.எனது முகம் வாடிப் போனதை சரோ கவனித்திருக்க வேண்டும். “அப்புறம் ஒண்ணுமே சொல்லாமப் போற..?”தாகீராவைப் பார்த்து கேட்டாள் சரோ.

தாகீராவின் முகத்தில் ஏராளமான உணர்ச்சிக் குவியல்கள் புதிதாய் தோன்றுவதை இப்போதுதான் பார்க்கிறேன்.எனது கண்களை நேராகப் பார்த்தாள்..,தனது குரலையும் செருமிக் கொண்டாள்.அவள் மிக நீளமாய்ப் பேசுவதற்கு தன்னை ஆயத்தப்படுத்துகிறாள் போலும்.ஆனால் என்ன சொல்லப்போகிறாள்.? என்றுதான் தெரியவில்லை.மிகுந்த ஆர்வத்துடன் அவள் பேச்சைக் கேட்க நானும் சரோவும் ஆயத்தமாகினோம்..!

ஆதலினால் காதல் செய்தேன்.. மீண்டும் தொடர்கிறேன்.!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி.B +ve (31-Aug-12, 9:35 pm)
பார்வை : 234

மேலே