11.ஆதலினால் காதலித்தேன்.! பொள்ளாச்சி அபி.

"கிறுக்கலாய் வீழ்ந்து கிடந்தவனைப் பற்றி
இறுக்கமாய்த் தூக்கி எடுத்து -பொறுப்புடனே
சீராட்டி ஊக்கச் சிறகளித்து வானேற்றிப்
பாராட்டிப்பார்க்க "வரும் பாவையவள்.! "
==========காளியப்பன் எசேக்கியல்======
-தாகீராவின் முகத்தில் ஏராளமான உணர்ச்சிக் குவியல்கள் புதிதாய் தோன்றுவதை இப்போதுதான் பார்க்கிறேன்.எனது கண்களை நேராகப் பார்த்தாள்..,தனது குரலையும் செருமிக் கொண்டாள்.அவள் மிக நீளமாய்ப் பேசுவதற்கு தன்னை ஆயத்தப்படுத்துகிறாள் போலும்.ஆனால் என்ன சொல்லப்போகிறாள்.? என்றுதான் தெரியவில்லை.மிகுந்த ஆர்வத்துடன் அவள் பேச்சைக் கேட்க நானும் சரோவும் ஆயத்தமாகினோம்..!
“நீங்கள் என்னைக் காதலிப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி.அந்த மகிழ்ச்சிக்கு காரணம் நீங்கள் காதலிக்கும் தகுதியுடையவளாக என்னை தேர்ந்தெடுத்தது.அதற்காக நானும் உங்களிடம் எனது காதலை தெரியப்படுத்திவிட்டு சென்றுவிடுகிறேன் என்றே வைத்துக் கொள்வோம்.இதற்கு அடுத்தது என்ன.?”
நானும்,சரோவும் உடனடியாக இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்தோம்.தாகீராவே தொடர்ந்தாள். “நாம் காதலிக்கலாம்.,அடுத்த கட்டமாகத் திருமணம். அது சுலபமாக நடந்துவிடுமா.? உங்கள் தற்போதைய வயது,வேலை,வருமானம், குடும்பத்தில் உங்களுக்கு இருக்கும் பொறுப்பு.., இத்தனையும் நிறைவேற்றி விட்டுத்தானே நாம் திருமணம்செய்து கொள்ளமுடியும்.?.”
எனது முகத்தை மையமாக நோக்கி அவள் கேட்டபோது,எனக்கும் மனதிற்குள் யதார்த்தநிலை அனைத்தும் ஓடியது.அப்போதைய நிலையில், ஒரு குடும்பத்தின் அனைத்து பாரத்தையும் சுமக்க வேண்டிய கடமை இருந்தது.என்னைவிட மூன்று வயது குறைந்த தங்கையும்,அதற்கு அடுத்தபடியாக இரு தம்பிகளும் இருந்தனர்.அவர்களின் எதிர்காலம் எனது பொறுப்பில்தான் இருந்தது.அதில் எவ்வித அதிசயமும் திடீரென நடந்து மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை என்பதும் தெளிவாகவே புரிந்தது.
அதனை எண்ணியபடியே..,தாகீராவிற்கு பதிலிறுத்தேன். “ஆமாம் நீ சொல்வது சரிதான்”,
“நாம் காதலிப்பது நமக்கு மிக மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.அதனால்,உங்களின் பொறுப்புக்களை சரியாக நிறைவேற்ற முடியாத பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.அது நிறைவேறாமல் பின்னாளில் நாம் திருமணம் செய்து கொள்வது, காதலில் வேண்டுமானால் வெற்றியாய் முடியும். ஆனால்,நமக்கு இருக்கும் கடமையில்..,?."
" உங்களுக்கு இருக்கும் இதேபோன்ற நிலைமை எனக்கும் மற்றொரு வடிவத்தில் இருக்கிறது.இதில் யாரும் எதனையும் தவிர்த்துவிட்டு வரமுடியாது. இருவரும் நமது பொறுப்புக்களை நிறைவேற்றுவோம். அதற்குப் பின் நேரடியாக நமது திருமணம் குறித்து அப்போது பேசுவோம். அதுவரை..காதல் என்ற பெயரால் அல்லாது நாம் தொடர்ந்து நண்பர்களாயிருப்போம்.”
தாகீராவின் நீண்ட ‘பிரசங்கம்’ என்னை அசரடித்தது.இவ்வளவு நேரம் அவள் அதிகம் பேசாமல் இருந்தது,ஒரு வேளை நம்மைப் பிடிக்கவில்லையோ என்ற அச்சத்தைக் கூட எனக்கு ஏற்படுத்தியிருந்தது.ஆனால்,அப்பொதெல்லாம் அவள் இவற்றைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்திருப்பாள் என்றே தோன்றியது.
மேலும்,தனது நிலைகுறித்து தெளிவாக எடுத்துரைப்பதற்காக முன்னமே அவள் திட்டமிட்டிருக்க வேண்டும்.அதற்காகவே இந்த சந்திப்புக்கும்கூட அவள் ஒத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் புரிந்தது.
வெகு சுலபமாக சரோவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு,என்னுடனான சந்திப்பையும் அவள் தவிர்த்திருக்க முடியும்.அவ்வாறு செய்யாமல் அவள் நேரில் வந்தது,அவளுடைய பொறுப்புணர்ச்சியையே எனக்குக் காட்டியது. அதனால் அவள் மீது மிகுந்த மதிப்பு கூடியது. அவளின் அறிவின் மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கையும் ஏற்பட்டது.
எனது பதிலுக்காக அவள் காத்திருந்தாள்.
‘அதைப்பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை, பிரச்சினைகள் என்று வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிடலாமா.?’ அவ்வாறு சொல்லிவிட்டால்,இவ்வளவு அறிவாய்ப் பேசுபவள்,என் பொறுப்புணர்ச்சி குறித்து என்ன நினைத்துக் கொள்வாள்.?.தனது குடும்பத்தின் மீது அக்கறையில்லாதவன்,நாளை தன்னிடம் மட்டும் எப்படி அக்கறை காட்டுவான்.? அவன் காதல் நிலையாக இருக்குமா.? அது உண்மையாக இருக்குமா.?, என்றெல்லாம் நினைத்துக் கொண்டால்..?’
‘காதல் என்பது என்ன.? ஒரு ஆணும் பெண்ணும் தனக்குப் பிடித்தவர்களைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து பழகி,திருமணபந்தம் வரை ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் முயற்சிதானே.?.இந்தப் புரிதல்,அவர்களின் திருமணத்திற்குப் பின்னான வாழ்க்கையை மேலும் அழகாய் செழுமைப் படுத்திச் செல்லத்தானே.? இதனைத்தாண்டி காதல் என்பதில் வேறு ஏதேனும் இருக்கிறதா.?.
இலக்கியங்களும்,திரைப்படங்களும் இன்ன பிற படைப்புகளும் காதல் என்பதை சித்தரிக்கும் விதம்,காதலினால் ஏற்படும் மகிழ்ச்சி, துயரம்,பிரச்சினைகள்,எதிர்கொள்ளும் விதம்,இன்னும் ஏனைய விஷயங்கள் என்பதைத்தானே.!
காதல் ஒரு தவம்.., அது தரப்போகும் வரம் என்பது நீடித்த,மகிழ்ச்சியான திருமண பந்தம், தொடரப்போகும் ஒரு சந்ததியின் தழைப்பு.!
காதல் புனிதமானது.எப்போது.? அது வெற்றிகரமாக நிறைவேறும்போது.!
காதல் அசிங்கமானது.எப்போது.? அது சரியான புரிதல் இல்லாதபோது.!,
தனது இணையுடன் உடலால் கூடுவதற்கான முகாந்திரத்தை மட்டுமே ஏற்படுத்தும் விதமாக,ஏதோ ஒரு விதத்தில் -அது இலக்கியமாகவும் இருக்கலாம்.இன்ன பிற சங்கதிகளாயும் இருக்கலாம்-தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் போதும்,அதனையே காதல் என்று நம்பும்போதும்.,காதல் எனும் உணர்வு அசிங்கப்பட்டுவிடாதா என்ன.?
கல்யாணத்திற்கு முன் காமத்தைத் தொட்டவர்களின் காதல்,கடலிலும் கிணற்றிலும்,மதுக்கடையிலும் மூழ்கித் தொலைந்துபோன உதாரணங்கள் நிறையப் படித்திருக்கிறோமே..!
அவ்வாறான தேவைகள் எதுவும் இப்போது எனக்கில்லை.
தாகீரா சுலபமான தீர்வாக,காதல் என்ற பெயரால் அல்ல..திருமணம் வரை,நாம் தொடர்ந்து நண்பர்களாயிருப்போம் என்று அவள் சொன்னது,பிரச்சினையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான ஏற்பாடு நிச்சயம் இல்லை.காதலினால் ஏற்படுத்திக் கொள்ளும் அதீத உரிமைகளைத் தவிர்ப்பதற்காகவும்,அதனால் மனரீதியாகவும்,சமூகத்தின் பார்வையிலும் அசிங்கப்பட்;டுப் போகாமல் இருக்க.., என்பதற்காகவும் இருக்கலாம்.!
அவள் சொன்னதை நான் இவ்வாறாகவே புரிந்து கொள்ள விரும்பினேன்.இது ஒரு ‘ஜென்ட்டில்மேன் அக்ரிமெண்ட்’டாகவே எனக்குத் தோன்றியது.இப்போது அது எனக்கு நல்லதாகவும் பட்டது.
ஒரு அடிப்படையான விஷயம் குறித்து அவள் வைத்த தீர்வே அவளைப் பற்றி முழுவதுமாகப் புரிந்து கொள்ள எனக்குப் போதுமானதாயிருக்கிறதே.! இந்தப்புரிதல் காதல் இல்லையா.?.’
‘மேலும்,என் மனதிற்குள் அவள் ஒரு காதலியாகவே நீடிப்பதற்கு தடையொன்றும் விதிக்கவில்லையே.இப்போது வரை நான் அவளை எவ்வாறு காதலித்து வந்தேனோ.? அதுவே இன்னும் அதிகபட்சம் நான்கு வருடங்களுக்கு தொடரப்போகிறது.அவ்வளவுதானே.! அதுவரை அவசியம் பேசவேண்டுமென தோன்றினால்..,இதுபோல சந்தித்துக் கொள்ளலாமே..!’
எனது நீண்ட மௌனத்தினால்,அங்கு அமைதி நிலவிக் கொண்டிருந்தது.நான் சொல்லப் போகும் பதில் என்ன என்பது தனக்கு முன்பே தெரியும் என்பதைப் போல,தாகீராவின் முகத்தில் ஒரு மந்தகாசப் புன்னகை மலர்ந்திருந்தது.ஆனால் சரோவின் கண்களில் இருந்த பாவை அலைபாய்ந்து கொண்டிருப்பதிலிருந்து,அவள் மிகுந்த பரபரப்பிற்கு ஆளாகியிருக்கிறாள் என்பதும் தெரிந்தது.
ஆதலினால் காதலித்தேன்…! மீண்டும் தொடர்கிறேன்....