தெருவில் எரிந்த கற்பூரம்

இனம்படு பாட்டை எண்ணி
=====இமைபடு உறக்கம் கெட்டு
தினம்படு பாட்டி னாலே
=====தன்னையே எரித்துக் கொண்டான்!
வனம்படு முல்லை யொன்று
=====வீழ்ந்தது மரணக் காட்டில்!
மனம்படு பாட்டை எந்த
=====மொழியினால் உரைப்பேன் அம்மா!

ஈழமே சாக்கா டாகி
=====இனமுமே அழிவிற் பட்ட
ஓலமே எடுத்து வந்து
=====உரைத்திடக் கடல லைகள்
நாளமே துடிது டித்து
=====நல்"முத்துக் குமரன்" என்பான்
நாளுமே பட்ட துன்போர்
=====நாளிலே முடித்துக் கொண்டான்!

தன்னுடல் கருக்கும் தீயைத்
=====தமிழர்க்கோர் தீபம் என்றான்!
தன்னுடல் கொரிக்கும் தீயைத்
=====தமிழர்க்கோர் விடியல் என்றான்!
தன்னுடல் எரிக்கும் தீயைப்
=====புரட்சியின் தீபம் என்றான்!
என்னுடல் நடுங்கு தம்மா
=====எவனவன் இவனுக் கீடு?

உரிமைகள் இருந்தும் கூட
=====உவப்புறு தமிழர் என்றும்
பிரிவினை பேச வில்லை
=====பிரிக்குமோர் நினைப்பும் இல்லை!
ஒருமையில் நெஞ்சம் வைத்து
=====ஒற்றுமை காக்க நின்றும்
சிறுமையில் பிறந்து வந்த
=====சிங்களர் மறுத்தார்; ஏனும்

சிங்கள இனத்தை நாங்கள்
=====சிதைத்திட நினைத்தோ மில்லை!
"எங்களுக் கென்றோர் தேசம்"
=====அதையுமே ஏற்றா ரில்லை!
பங்கிடா உரிமை யாலே
=====புரட்சிகள் வெடிக்கும் என்ற
மங்கிடா உண்மை தன்னை
=====மடையர்க்குப் புரிய வைப்போம்!

எரிந்தவா "முத்து"! உன்போல்
=====எவருமே எரிதல் வேண்டாம்!
எரிந்தது போதும்; ஆமாம்
=====வாழ்வொடு வயிறும் இங்கே!
புரிந்துமே தியாகம் கோடி
=====புன்மதி அசையா தென்றால்
எரிவதில் லாப மில்லை
=====எரிப்பது ஒன்றே நீதி!


(தமிழினத்திற்காக தீக்குளித்த தோழர் முத்துக்குமாருக்கு ஈது சமர்ப்பணம்)

------------ரௌத்திரன்

எழுதியவர் : ரௌத்திரன் (4-Sep-12, 12:57 pm)
சேர்த்தது : ரௌத்திரன்
பார்வை : 133

மேலே