கோவையில் கண்ட காட்சி

காலை வெயில் கதகதக்கவில்லை. கண்ட காட்சி கண் மயக்கியது. ஒரு பையன் சுமார் 18 லிருந்து 20 வயது இருக்கும். கடைத் தெருவில் பிளாட்பாரத்தில் ஒரு 18 வயதிருக்கும் பெண்ணோடு உரையாடிக் கொண்டிருந்தான். காரில் காத்துக் கொண்டிருந்த நான் கவனித்துப் பார்த்தேன்.
அந்தப் பெண்ணின் தோளில் ஒரு பை. காலேஜ் படிப்பாள் என்பது யூகம். பையன் கையில் இரு நோட்டுப் புத்தகம்.
அவன் ஒரு நிமிடம் பேசினால் அந்தப் பெண் நாலு வார்த்தை பதில் சொன்னாள். பதிலுக்கு முன்னும் பின்னும் ஒரு சின்ன சிரிப்பு. அவ்வப்போது முடியை கோதிக் கொண்டாள் ஒரு புறமாக. சரியாக இருந்த துப்பட்டாவை சரி செய்து கொண்டாள். இருவருக்கும், இடையே ஒரு அடி தூரம். அவர்கள் நெருங்கவில்லை. அவன் சுற்றுப் புரத்தை பார்த்துக் கொண்டான் - பயத்தால் பார்த்த மாதிரி தெரியவில்லை. பருவம் கொடுத்த வாய்ப்பால் பாவையை கவர்ந்த பெருமிதத்தால் ஒரு கண்ணோட்டம். நான் இன்னும் கவனித்துப் பார்க்கிறேன். பேசுவது கேட்கவில்லை. கேட்க விரும்பவும் இல்லை. அவன் கண்ணில் ஒரு ஒளி. அவள் கண்ணில் ஒரு மயக்கம். அரும்பும் காதலின் ஆரம்பமா. அப்படித் தான் தோணியது எனக்கு. காரெடுக்கும் நேரம் வந்து விட்டது. நாங்கள் நகர்ந்து விட்டோம். திரும்பிப் பார்த்தேன். அவர்கள் நகரவில்லை. வெயில் எதற்கு கதகதக்க வேண்டும்!

எழுதியவர் : நா.குமார் (8-Sep-12, 11:50 pm)
சேர்த்தது : kavikumar09
பார்வை : 402

மேலே