பயங்கர பூகம்பம்
டோக்கியோ : பயங்கர பூகம்பம், அதைத் தொடர்ந்த சுனாமியால் ஏற்பட்ட பேரழிவில் சிக்கித் தவிக்கும் ஜப்பானில், வெடித்த அணுஉலையில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சால் ஏற்படும் அபாயம் பல மாதங்கள் நீடிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையே, 2வது அணுஉலை நேற்று வெடித்ததில் 11 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் 2 உலைகள் வெடிக்கும் அபாயத்தில் உள்ளன.
பியூகுஷிமா டைச்சி அணு மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் இருந்து பல லட்சம் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பூகம்பம் & சுனாமி & எரிமலை சீற்றம் & அணு உலையில் வெடிப்பு என அடுக்கடுக்காக ஜப்பானை ஆபத்து சுற்றி வளைத்துள்ளது. தொடரும் இந்த ஆபத்துகளால் வெளிநாட்டினர் தாயகம் திரும்ப விமான நிலையங்களை முற்றுகையிட்டுள்ளனர்.
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மிக மோசமான அழிவை ஜப்பான் இப்போது சந்தித்துள்ளது. அப்போது அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளின் பாதிப்பு, ஜப்பானில் இன்றும் தொடரும் நிலையில், பூகம்பத்தால் வெடித்த அணுஉலையில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் ஆபத்து அதிகரித்துள்ளது. விஞ்ஞானிகள் முயற்சி: மியாகி மாநிலம், பியூகுஷிமா டைச்சி அணுஉலையின் அணுவை பிளக்கும் கருவிகள் (ரியாக்டர்ஸ்) பூகம்பத்தின் சக்தியால் அதிக வெப்பம் அடைந்தன. அவற்றை குளிர்விப்பதில் ஜப்பான், அமெரிக்க அணு விஞ்ஞானிகள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
எனினும், நேற்று முன்தினம் வெடித்த ஒரு கருவியில் இருந்து கதிர்வீச்சு நீடிக்கிறது. அதனால், பூகம்பம், சுனாமிக்கு அதிர்ஷ்டவசமாக தப்பிய ஜப்பானி யர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு பலி அல்லது நிரந்தர செயலிழப்பை சந்திக் கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் ஆய்வு: அமெரிக்க ராணுவ அதிகாரிகள் குழு, ஜப்பானின் பியூகுஷிமா டைச்சி அணுஉலை பகுதி மீது ஹெலிகாப்டரில் பறந்து கதிர்வீச்சின் தீவிரம் பற்றி நேற்று கணக்கிட்டது. உலையில் இருந்து சுமார் 100 கி.மீ. தள்ளி பறந்தபோது காற்றில் சேகரிக்கப்பட்ட கதிரியக்க துகள்களில் உடல்ந லனை பாதிக்கும் சீசியம்&137, அயோடின்&121 என்ற அளவில் பரவியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பூகம்பத்தால் அதிக வெப்பமடைந்த டைச்சி அணுஉலை உடனடியாக மூடப்பட்ட நிலையில், முதல் அணுஉலை கடந்த 11ம் தேதி வெடித்தது. அதனால் கதிரியக்கம் வெளிப்பட்டு பெரும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில், 2வது அணுஉலையின் வெப்பம் அதிகரித்ததால் அது வெடிக்கக்கூடும் என்று நேற்று முன்தினம் எச்சரிக்கப்பட்டது. அதை குளிர்விக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
உலை வெடித்தது: எனினும், பூகம்பத்தால் ஏற்பட்ட வெப்பம் கட்டுப்படாமல் நேற்று காலை 2வதாக ஹைட்ரஜன் அணுஉலை வெடித்துச் சிதறியது. அப்போது பணியில் இருந்த 11 பேர் தூக்கியெறியப்பட்டு படுகாயம் அடைந்தனர். அது வெடித்த சத்தம் 40 கி.மீ. தூரம் கேட்டது. அங்கிருந்து 160 கி.மீ. தூரத்தில் உள்ள ரீகன் விமான தளத்தில் அதன் கதிர்வீச்சு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அணுஉலையில் இருந்து வெண்புகை வெளிப்பட்டு அந்தப் பகுதியை மூடியது.
வெடிக்கும் நிலையில் 2 உலைகள்: யூனிட் 2ன் மேலும் 2 ரியாக்டர்களின் எரிபொருள் கம்பிகள் (கோர்) வெப்பம் குறையாமல் வெடிக்கும் நிலைக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை உருகி விரைவில் வெடித்து சிதறக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதுபற்றி பியூகுஷிமா டைச்சி அணுமின் நிலைய செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘’மேலும் 2 ரியாக்டர்களின் எரிபொருள் கடத்தும் கம்பிகளின் வெப்பம் கடல் நீரால் குளிரவில்லை. அவை தொடர்ந்து அதிக வெப்பத்துடன் உருகும் நிலையில் உள்ளன’’ என்றார்.
பியூகுஷிமா டைச்சி பகுதியில் இருந்து பல லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால், அப் பகுதியே மயான பூமி போல் காட்சியளிக்கிறது.
அணுஉலைகளின் வெப்பமூட்டு கருவிகள் கடல் நீரால் தொடர்ந்து குளிர்விக்கப்பட்டு வந்தாலும், அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு முற்றிலும் நிற்க பல மாதங்கள் ஆகும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அணுஉலையின் வெப்பத்தைக் குறைக்க, தொடர்ந்து கடல் நீரை ரியாக்டர் கருவியில் செலுத்துவார்கள். வெப்பத்தில் அது கொதித்து ஆவியாகும். அதன் அழுத்தத்தால் கருவி வெடிக்காமல் தடுக்க, ஆவியை வெளியேற்றுவார்கள். அதில் அணுக்கதிர்கள் வெளியாகும். கருவி முற்றிலும் குளிரும் வரை இந்த பணி தொடரும். இதற்கு சில வாரங்கள் பிடிக்கும். அதுவரை வெளியேற்றப்படும் கதிரியகத்தின் பாதிப்பு, ஜப்பானில் நீண்ட காலம் பாதிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
சமாளிப்பாரா பிரதமர்
ஜப்பானில் பூகம்பம், சுனாமி ஏற்படுத்தியுள்ள வரலாறு காணாத அழிவில் இருந்து நாட்டை மீட்பதில் பிரதமர் நவ்டோ கான் சமாளிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி குறைவு, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு ஆகியவற்றை கான் சந்தித்து வந்தார். பிரதமரின் செயல்பாடு குறித்து வெளியான ரேட்டிங்கிலும் அவரது செல்வாக்கு கடும் சரிவில் இருந்தது.
இந்த நிலையில், பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமிக்கு கிழக்கு ஜப்பான் சின்னாபின்னமாகி இருக்கிறது. சர்வதேச உதவிகளைப் பெறுதல், மிக விரைவாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கி விடுதல், குறுகிய காலத்தில் மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றில் அவரது பங்கு பற்றி ஒட்டுமொத்த நாடே கண்காணிக்கிறது.
விமான நிலைய நெரிசல்
ஜப்பானைத் துரத்தும் பேரழிவுகளால் அங்கு வசிக்கும் வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அணுஉலைகள் வெடித்து பேராபத்து ஏற்பட்டு வருவதால் தாயகம் திரும்ப விமான நிலையங்களை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் டோக்கியோ, ஹனேடா விமான நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது. ஜப்பானுக்கு செல்ல வேண்டாம் என்றும், அங்கிருக்கும் தங்கள் நாட்டினரும் உடனடியாக தாயகம் திரும்புமாறும் பல நாடுகள் தூதரகங்கள் மூலம் வலியுறுத்தி வருகின்றன.