போராட வா !

தோழா!
என்று பெறுவாய்
மீண்டும் உன் சுயத்தை
மழுங்கிப் போன உணர்வும்
மறைந்துப் போன மனிதமும்
மீண்டும் என்று வரும் !

மொழிக்காக பொங்கி எழுந்தவன் நீ
இன்று
அழியும் மனித இனத்தைக்
கண்டும் காணாமல் இருக்கிறாய்
சொல்
என்று பெறுவாய்
மீண்டும் உன் சுயத்தை !

எங்கோ எவரோ பரிதவித்தாலும்
இங்கு நீ கண்ணீர் வடிப்பாயே ?
இன்று உன் கண்முன்
குழந்தைகளும் பெண்களும் பரிதவிக்க
உணர்வற்று இருக்கிறாயே
சொல்
எங்கே போனது
உன் மனிதப் பண்பு !

நிலத்தில் உள்ள சாம்பலில்
மின்சாரம் எடுத்தாலே
"இயற்கையை காப்போம் "என
எதிர்த்துப் போராடியவன் நீ
இன்று
மனிதனை சாம்பலாக்க போகும் மின்சாரதிற்க்காய்
காத்துக் கொண்டு இருக்கிறாயே
சொல்
இது நியாயம் தானா?

இப்போதும் தாமதமாகவில்லை
உனக்காய் இல்லையெனினும்
உன் சந்ததிக்காய் போராடு !

மனதில் வைத்து போராடு
அணுஉலை -
மனிதனை அணு அணுவாய் கொல்லும் உலை !

மாய வலையில் நீ விழவேண்டாம்
அதற்கு பதிலாக
உன்னை அவர்கள்
மயானத்தில் விழவைப்பார்கள் !

தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும்
நீ கொலைக்கு உடந்தை என்பதை தெளிவாக்கும் ,
தெரியாமல் செய்ய நீ குழந்தை அல்ல !
தெரிந்தே செய்கிறாய் கொலையை !
கொலைக்கு உடந்தையா ?
யோசித்துப் பார் !

அணு உலை !
வேண்டாம் - அபாய உலை
அணுவை பிளக்கும்
ஒவ்வொரு முறையும் அவர்கள்
அகிலத்தைப் பிளக்கிறார்கள் !
நீ
உலகை அழிக்க உடன் பயணிக்காதே !

பெரியோர் சொல் கேட்கிறாய்
ஒரு முறை சிறியோர் எம்
சொல்லையும் கேட்டுப்பார் !

அணு உலை வேண்டாம்
அது நம்மை
அடியோடு அழிக்கும்
அக்கினி தேவனின் அவதாரம் !

நரகாசுரனின் அவதாரத்தை அழிக்க
அனைவரும்
புது அவதாரம் எடுப்போம் !
போராட உடன் வா
உணர்வோடு உடன் வா !

எழுதியவர் : வில்லியம்ஸ் ( விசா ) (21-Sep-12, 10:22 am)
பார்வை : 199

மேலே