19.ஆதலினால் காதலித்தேன்.! பொள்ளாச்சி அபி..
இந்த ஜென்மத்தை
கழித்துவிட்டுப்
போக..... பழைய
நினைவுகள் போதுமாக
இருக்கையில்..... இன்னொரு
கதை எழுதவேண்டாம்.......!!
------------------------------ தம்பு ----------
மரணத்தின் மடியில் தாரை வார்க்கப்பட்ட என் வணக்கத்திற்குரிய காதலியின் பெயர் பூமா.. என்பதைத் தவிர தங்களிடம் கடந்த தொடர்குறித்து சொல்வதற்கு எதுவுமில்லை..,
கேரளத்தின் மகத்தான சோகத்தின் அனுபவங்களை மட்டும் எடுத்துக்கொண்டு,மீண்டும் நான் தமிழகத்தில் எனது சொந்த ஊருக்கே திரும்பினேன்.
இனி தெரியாத புதியவேலைக்கு செல்வதைவிட, தெரிந்த பழைய வேலைக்கே சென்றுவிடவும் முடிவு செய்திருந்தேன்.பட்டறைகள், தொழிற்சாலைகள்,நிறுவனங்கள் என பல இடத்திலும் பல்வேறுவிதமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று கடைசல் யந்திரத்தில் தொடர்ந்து வேலைசெய்து அனுபவங்களைப் பெற்றுக் கொண்டேன்.
“உனக்காக மட்டுமல்ல, யாருக்காகவும் காத்திருப்பது எனது இயல்புமல்ல..இணைந்து என்னுடன் வந்தால் வா..,நீ தேங்கிவிட்டால் அது என் குற்றமுமல்ல..,என்னை யாராலும் பிடித்து நிறுத்தவும் முடியாது..என்று அறிவித்தபடி.., என்னைக் கடந்துசென்றுவிட்டிருந்த இரண்டு ஆண்டுகளின் காலஓட்டம்,அன்றாடமும் தனக்குள் நிகழ்த்திக் கொண்டிருந்த வௌ;வேறு மாற்றங்களால்,எனது துக்கங்களையெல்லாம், விரும்பும்போது உள்ளத்தை வருடிச் செல்லும் ஒரு கற்பூரத்தின் மணம் போல எனக்குள் உறைந்து போகச் செய்திருந்தது.
அவ்வப்போது அலைக்கழிக்கப்படும் உணர்ச்சிகளிலி ருந்து என்னை பொதுநிகழ்ச்சிகளே மீட்டெடுத்துக் கொண்டிருந்தன. அரசியல்,இசை,ஓவியம் உட்பட கலைநிகழ்ச்சிகள்,கவியரங்கம் என எதுவானாலும் வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் பார்வையாள னாக ஓடிச்சென்று வாய்ப்பிருந்தால் முன் வரிசை யில் அமர்ந்துகொண்டு விடுவதும்,குறிப்புகள் எடுப்பதுமாக.. என கழிந்துசெல்லும் பொழுதுகளை ஏதோ ஒருவிதத்தில் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளவே விரும்பினேன்.கடுமையான உழைப்பும் இதுபோல கழிந்துசெல்லும் பொழுதுகளும் என்னைத் துயரங்களிலிருந்து மீட்டெடுத்துக் கொள்ளும் ஒரு முயற்சியாகவும் இருந்தது என்பதுதான் உண்மை.!
அந்தக்கால கட்டத்தில்தான் எனது வீட்டிலிருந்து நான்கு கி.மீ தள்ளி புதிய தொழிற்சாலை ஒன்று துவங்கப்பட்டிருந்தது.அங்கே அனுபவமுள்ள பணியாளர்கள் தேவைப்படுவதாகவும், நல்ல சம்பளம் கிடைக்கும் என்றும் அங்கே பணியாற்றும் நண்பன் மூலம் கேள்விப்பட்டு,அங்கே சென்றேன் .உதிரிபாகம் ஒன்றின் மாதிரியைக் கொடுத்து, அதேபோல செய்து தரச் சொன்னார்கள்.அங்கிருந்த அனைத்து கடைசல் யந்திரங்களும் புதியவை யாகவும் இருந்ததால்,அவர்கள் எதிர்பார்த்த குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே எனது பணியை முடித்துக் கொடுத்தேன்.வேலை உறுதியாயிற்று.ஆனால் பாவம் என்னைச் சேர்த்துவிட்ட என் நண்பன் முருகேசனுக்கு என்னைவிடக் குறைவான சம்பளம் நிர்ணயிக்கப்பட்டதில் அவனுக்கு கொஞ்சம் வருத்தமாயும் போயிற்று.
அங்கே செய்யப்பட்டு வந்த இயந்திரங்களுக்கு தேவையான இரும்பு உதிரிபாகங்களைக் கடைசல் யந்திரங்களின் மூலம் செய்துகொடுக்க தனியாக வும், மின்னனு உதிரிபாகங்களைச் செய்வதற்கு பெண்கள் மட்டுமே வேலை செய்யும் பகுதி ஒன்று தனியாகவும் ஒரே கூரையின் கீழ்,இயங்கி வந்தது. பதினைந்து பெண்களும் அங்கே பணியாற்றிக் கொண்டுவந்தனர்.பெண்கள் வேலைசெய்யும் பகுதிக்கு,எங்கள் பகுதியைத் தாண்டித்தான் அவர்கள் சென்று வரவேண்டியதிருந்தது.
வேலைக்குச் சேர்ந்து இருதினங்கள் கழிந்த நிலையில், அன்று மதியஉணவுஇடைவேளை முடித்துவிட்டு,சிலநிமிடங்கள் முன்னதாகவே நான் வேலைசெய்யும் இயந்திரத்தின் அருகே சென்று, அடுத்து துவங்க இருக்கும் வேலைக்கான தயாரிப்பில் இருந்தேன்.எனக்கு அடுத்துவந்த முருகேசன்,எனக்குப் பின்னாலிருக்கும் இயந்திரம் அருகே ஏதோ குடைந்து கொண்டிருந்தான். தொடர்ந்து ஆண்களும் பெண்களும்,ஒருவர் அல்லது இருவராக அல்லது கூட்டமாக இடைவெளிகள் விட்டு பேசிச் சிரித்தபடி தொழிற்சாலைக்குள் வந்து கொண்டிருந்தனர்.
என்னைச் சில பெண்கள் கடந்து சென்றபோது, குனிந்து எதையோ எடுத்துக் கொண்டிருந்த நான்,அப்போதுதான் நிமிர்ந்தேன்.சரியாக அந்த விநாடியில் ஏதோ ஒரு வஸ்து சட்டென்று என் கன்னத்தின்மீது மோதி கீழே விழுந்தது.எனக்கு சுள்ளென்று வலித்தது. மோதி கீழே விழுந்தது என்னவென்று பார்த்ததேன்,அது நன்றாக கசக்கி உருண்டையாக்கப்பட்ட ஒரு காகிதம் என்பது தெரியவந்தபோது எனக்கு முணுக்கென்று வந்த கோபத்துடன்,யார் இந்த வேலையைச் செய்தது..? என்று சுற்றிலும் பார்வையை ஓடவிட்டேன்.
ஆனால்..யாரும் அப்படியொரு சம்பவம் நடந்ததாகவே தெரியாதவாறு அவரவர் வேலையைத் தொடங்கும் முஸ்தீபுகளில் இருந்தனர்.
நம்மைக் கலாய்ப்பதற்காக யாரோ இந்த சில்மிஷத்தை செய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே,அது யாரென்று கண்டுபிடித்துவிட
முடியும் என்ற நம்பிக்கையுடன் ஒரு துப்பறிவாளனின் வேகத்தில் பாய்ந்து அந்தக் காகித உருண்டையை எடுத்துப் பிரித்தேன்.
‘நாளை மறுநாள் புதுவருடப்பிறப்பு..நீங்கள் என்ன’.. என்று அதில் தொடங்கி எழுதப்பட்ட புதிய மசியுடன் கூடிய குண்டுகுண்டான அழகான கையெழுத்து தெரிந்தது.அது எழுதப்பட்ட நேர்த்தியிலிருந்து நிச்சயம் இது ஒரு பெண்ணின் கையெழுத்துத்தான் என்பது எனக்குப் புரிந்தது.
ஆதலினால் காதலித்தேன்..மீண்டும் தொடர்கிறேன்..