கசக்கும் உண்மைகள்

‘பாருக்குள்ளே நல்ல நாடு', 'பாரத நாடு பழம் பெரும் நாடு' என்றெல்லாம் பாடப்பெற்று புகழ் பெற்றது நம் இந்திய துணைக்கண்டம். இந்தியிலும் கூட 'சாரே ஜகான் சே அச்சா இந்துஸ்தான் ஹமாரா' என்று சொல்வர். கல்வி, வான சாஸ்திரம், விஞ்ஞானம், மெய்ஞானம் போன்றவற்றில் இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மேம்பட்டு இருந்ததாக அறிஞர்களும், ஆன்மீக தலைவர்களும் பேசி வருகின்றனர். கலாச்சாரத்தை பற்றி கேட்கவே வேண்டாம். 'இந்தியக்கலாச்சாரம்' தான் உலகில் மிகச்சிறந்த ஒன்று என்பதில் எந்த இந்தியனுக்குமே ஐயம் எழுந்ததில்லை.

கலைகளிலோ கேட்கவே வேண்டாம். அதனை இன்று உலகம் முழுவதும் நம் ஆடல், பாடல், நாடகம், இதிகாசம், புராணம் மூலம் உலகெங்கும் பிரசித்தி பெறச்செய்து கொண்டு இருக்கிறோம். இந்தியாவின் தத்துவ, ஆன்மிக தலைவர்கள் உலகெங்கும் சென்று புகழ் பரப்பி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால், அந்த மாதிரி தலைவர்களுக்கு இந்தியாவை விட வெளி நாடுகளிலேயே புகழ் அதிகம் உள்ளது.

இன்றுள்ள மக்கள் தொகையை பார்த்தால் இந்தியாவில் தான் இளையதலைமுறை சதவிகிதம் அதிகமாக உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 'குடும்ப கலாச்சாரம்', 'ஒன்று பட்ட கூட்டு குடும்பம்' போன்றவை இந்தியாவிற்கே உள்ள தனிச்சிறப்பு. இந்தியாவில் எல்லாவிதமான சீதோஷ்ண நிலைகள் உள்ள இடங்கள் உள்ளதாக நாம் அறிவோம். உலகின் சொர்க்கம் என்று கூறப்படும் காஷ்மீரும், பாலைவனம் நிறைந்த ராஜஸ்தானும் இந்தியாவில்தான் உள்ளன.

உலகில் எந்த பொருளும் மலிவான விலையில் கிடைக்கும் நாடு இந்தியாதான். மனதிற்கு நிம்மதி தரும் ஆலயங்களும், ஆன்மிக ஆசிரமங்களும் இந்தியாவில் ஏராளம். இப்படி நம் நாட்டின் பெருமையை பேசிக்கொண்டே போகலாம். பேசிக்கொண்டும் இருக்கிறோம். ஆனால், இத்தனை சிறப்புகளும், தனி தன்மைகளும் உள்ள நாட்டின் மக்கள்தான் உலகின் எல்லாப்பகுதிகளுக்கும் சென்று வேலை செய்வதுடன், அந்தந்த நாட்டிலேயே நிரந்தரக்குடியுரிமை பெற்று தங்க நினைப்பதில் முதல் இடம் வகிப்பவர்கள்.

ஆச்சர்யமாக இல்லை?

தவிர, இத்தனை பெருமைகள் உள்ள நம் நாட்டிற்கு வெளி நாட்டினர் வந்து நம் நாட்டுக்காரர்கள் அங்கு சென்று நிரந்தரக்குடிமகன் ஆவது போல் 'ஓர் இந்தியக்குடிமகன்' ஆக விரும்புவதில்லை. இந்த முரண்பாடுகளுக்கு என்ன காரணம்? நாம் நம் நாட்டின் சிறப்புகளாகவும், பெருமைகளாகவும் கூறும் சமாச்சாரங்களில் எந்த அளவு உண்மை இருக்கிறது?

எழுதியவர் : காங்கேயன் (26-Sep-12, 4:08 pm)
பார்வை : 838

சிறந்த கட்டுரைகள்

மேலே