மெய்ப்படாத ஏக்கங்கள்
பெண்ணே! உன் கண்ணசைவில் உள்ளாற பூக்குதடி,
மூன்று முழம் மல்லிகைப்பூ உனக்காக வாங்கிவர நினைக்குதடி,
நான் கொடுத்தால் சூடிக்கொள்வாயோ? என்னை சூட்டிவிடச் சொல்வாயா?
இல்ல, என் கைப்பட்ட மல்லிகைப்பூ கசங்கிடத்தான் மண்ணில் எறிவாயோ?
சிட்டுக்குருவியே! உன்னை பார்க்கையிலே உள்ளாற மனம் சிலுசிலுப்படைகிறதடி,
எட்டு முழம் பட்டுச்சேலை உனக்காக வாங்கிவரத் தொன்றுதடி,
நான் கொடுத்தால் கட்டிக்கொள்வாயோ? என்னைக் கட்டிவிடச் சொல்வாயோ?
இல்ல, பட்டுனு வாங்கிவர நான் யாரென சட்டென்று நீயும் எறிவாயோ?
குயிலே! உன் குரல் கேட்டு உள்ளாற குதுகுலமாகுதடி,
குரலோடு இசைக்கத் தங்கக் கொலுசொன்று வாங்கிவர மனம் துடிக்குதடி,
நான் கொடுத்தால் அணிவாயோ? என்னை அணிவிக்கச் சொல்வாயோ?
இல்ல, நான் தோட்டத் தங்கமும் தகரமென தரையில் விட்டெறிவாயோ?
உள்ளாற ஏக்கங்கள் பல, மாமா என்று நீ அழைக்க,
உள்ளாற எதிர்பார்ப்புகள் பல, உன் கை கோர்த்து நானும்,
வீதி உலா போய் வர விதியும் வாய்க்காதோ? நாளும்
பீதியாய் தயக்கத்தோடு அமைதியாக விலகிச் செல்கிறேன் உன்னோடு பேசாது.
சொல்லிய காதல்கள் பல சாகக் கண்டேன்,
சொல்லாத என் காதலோ சாகாவரம் பெற்றுவிட்டது,
சாகாவரமோ கொடுமையானது, காலம் இடும் கோலமெல்லாம்
நான் காண மனதில் வடுவாயின மெய்ப்படாத ஏக்கங்கள்...