என் மனச்சிறையில் கைதான கல்யாணம்!

அதிகாலை நான்கு மணி!
அவர்கள் வீட்டார் வந்திட்டார்கள்!
அத்தனை பேரும் சேர்ந்து!
அவசரப் படுத்தினார்கள்!

பால் தப்ப வேண்டுமென்று!
பாவையென்னைக் கூப்பிட்டார்கள்!
பாதித் தூக்கம் கலைந்து நானும்!
பாகாய் அங்கு வந்து நின்றேன்!

சம்பிரதாயம் சாஸ்திரம்!
சகல வழக்கும் முடித்து விட்டு!
சருவக் குடத்தில் தண்ணீர் அள்ளி!
சருமம் நனைய வார்த்திட்டார்கள்!

அம்மா வீட்டார் எடுத்துத் தந்த!
அழகிய நீலப் பட்டால்!
அலங்கரம் செய்து நல்ல!
அணிகளும் பூட்டி என்னை!
அம்மன் போல மாற்றிட்டார்கள்!


புகைப்படக் கலைஞர் வந்து!
புத்தம் புது அசைவு சொல்லி!
புதுமணப் பெண்ணாம் என்னை!
புகைப்படம் எடுக்கலானார்!

ஏழு மணி ஆனவுடன்!
ஏறி ஒரு மோட்டார் காரில்!
ஏறாவூர் பிள்ளையார் கோயில்!
ஏகி விட்டோம் சில நொடியில்!

சில நேரம் காத்திருக்க!
சித்திரத் தேரில் வந்த!
சிங்கார வேலன் போல என்!
சிந்தை கவர் மணாளன் அவர்!
சிரிப்புடனே வந்து சேர்ந்தார்!

நாதஸ்வரம் மேள இசை!
நாற்றிசையும் ஒலித்து நிற்க!
நாமிருவர் மணமேடையில்!
நால்வர் காண அமர்ந்திருந்தோம்!

நண்பியர் கூட்டம் வந்து!
நன்றாய் என் பக்கம் சாய்ந்து!
நல்ல அதிஸ்டம் உனக்கு என்று!
நக்கல் போல கூறி நிற்க!

குருக்களும் எங்கள் இரண்டு!
குடும்பத்தை அழைத்து வந்து!
குல தெய்வ துணையும் கொண்டு!
குறிப்பிட்ட கிரியை செய்தார்!

நெற்றியிலே கங்கணமும்!
நெஞ்சினிலே சந்தோசமும்!
நெகிழ்ந்து நானும் என்னவர் தந்த!
நெற்றீஸ் பட்டுக் கூறையைப் பெற்றேன்!

கற்களும் மணிகளும் நிறைந்த!
கருஞ்சிவப்பு பட்டு சேலை!
கட்டழகு மேனியில் சுற்றி!
கச்சிதமாய் வந்து நின்றேன்!

பட்டு வேட்டி கட்டிக் கொண்டு!
பருவமகன் வந்து நின்றார்!
பத்து மணி முகூர்த்தத்தில்!
பத்திரமாய் தாலி தந்தார்!

குனிந்து அதை வாங்கி நானும்!
கும்பிட்டேன் கண்ணில் ஒற்றி!
குங்குமமும் சீர் வரிசை!
குறிகளும் எனக்குத் தந்தார்!

அக்கினியை வலமும் வந்து!
அம்மியிலே என் கால் வைத்து!
அழகு வைர மணி மெட்டி!
அணிந்தார் என் கால் விரலில்!

வாரும் கோவில் சுற்றி வர!
வார்த்தை அதை சொல்லி அவர்!
வாஞ்சையோடு அழைத்து வந்து!
வானில் ஏதோ கட்டி நின்றார்!

அருந்ததி என்று ஒரு!
அருமையான பத்தினியாம்!
அவள் வானில் இருந்து எம்மை!
அன்பாய் பார்த்து ஆசீர்வதித்தாள்!

சுற்றத்தார் எல்லோரும்!
சுணங்காமல் வந்து நின்று!
சுலோகங்கள் பலதும் சொல்லி!
சுகமாய் வாழ வாழ்த்தி விட்டார்!

அர்ச்சதைகள் தூவும் அவர்கள்!
அன்பும் கூட அசீர்வாதம்!
அதையும் நாங்கள் புரிந்து கொண்டு!
அழகாக நிற்கும் போது!

சிணுங்கியதென் கைபேசி!
சிந்தை கவர் மணாளன் அவர்!
சில நேரம் கதைக்க அழைத்தார்!
சிதைந்தெழுந்தேன் கனவுலகு விட்டு!

அது தானே நானும் பார்த்தேன்!
அன்று போன்ற சிறந்த நாளை!
அழகு பரிசாய் நானும் பெற!
அதிர்ஸ்டம் ஒன்றும் செய்யவில்லை!

என்னுலகில் கல்யாணமும்!
என்றைக்கும் இடம்பெறாது!
என் மனச்சிறையில் கைதிதான்!
என் கல்யாணம் என்றால் பொருத்தம்!

எழுதியவர் : ரா. அச்சலா சுகந்தினி (26-Sep-12, 5:30 pm)
பார்வை : 156

சிறந்த கவிதைகள்

மேலே