ஏன் போராட்டங்கள் இல்லை?
கடைசி நேரத்தில் சினிமா கதாநாயகன் போல் வந்து கூடங்குளம் நடவடிக்கைகளை வெற்றிகரமாக மீண்டும் ஒரு முறை நிறுத்தி விட்டார் அணு சக்தி வித்தகர் உதயகுமார். நல்லது. அவரைப்போல் பொது மக்களின், குறிப்பாக ஏழைகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராடும் வீரர்கள் இந்தியாவுக்கு மிக மிக அவசியம், அதுவும் பணமே பிரதானமாக போய் விட்ட இன்றைய சூழ்நிலையில். வரவேற்போம். மக்களின், மற்றும் அரசாங்கத்தின் கோடிக்கணக்கான பணம் வீணாகப்போனால் என்ன? பல ஏழை, எளியவர்களின், அதுவும் மீனவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டு விட்டதே?
எனவே சமூக நல காவலர் திரு உதயகுமாருக்கு இன்னொரு வேண்டுகோள். ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பல உயிர்களை பலி வாங்கும் இந்த பட்டாசு தொழிற்சாலைகள் தேவையா? இவைகளால் எத்தனை இன்னல்கள்?
• பட்டாசு வாழ்கையின் அத்தியாவசிய தேவையா? இல்லையே!.
• பட்டாசு வெடித்து தீபாவளி மற்றும் பண்டிகைகள் கொண்டாடுபவர்கள் ஏழைகளா? பணம் படைத்தவர்கள் தானே?
• பெரும்பாலான பட்டாசுகள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய படுகின்றன; அதனால், பயன் பெறுவது யார்? அதன் உரிமையாளர்கள் அன்றி அங்கு வேலை பார்க்கும் ஏழைகள் அல்லவே?
• பட்டாசு தயாரிக்கும் முறையே ஆபத்தானது என்பதை ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நடக்கும் விபத்துகளும், உயிர் சேதங்களும் நிரூபிக்கின்றன. அதை தயாரிக்க பயன் படுத்தும் இரசாயன பொருள்கள் ஒவ்வொன்றும் மிக மிக ஆபத்தான பொருள்கள் என்பதும் தெரிந்ததே.
• இந்த பட்டாசு தயாரிக்கும் போது பின் பற்ற வேண்டிய பாதுகாப்பு சாதனங்களும், பயிற்சியும் அந்த வேலை செய்பவர்களுக்கு தரப்படுவதில்லை என்பதும், அதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர் என்பதற்கு தவறாமல் நடக்கும் இந்த விபத்துகளே சான்று.
• இதை தயாரிப்பவர்கள் மட்டும் இல்லாமல், பயன் படுத்துபவர்களும் பலமுறை விபத்துக்கு ஆளாகி கை, கால் இழப்பது, உயிர் சேதம் நிகழ்வதும் தெரிந்ததே.
• தீபாவளி சமயத்தில் தெருவில் நடக்கவே பயம் தரும் இந்த பட்டாசினால் என்ன லாபம்?
இப்படி அடுக்கி கொண்டே போகலாம். உதயகுமார் குழுவிடம் ஏன் இந்த அதி பயங்கரமான தொழிற்சாலைகள் கண்ணில் படவில்லை? தயவு செய்து அவர்கள் இதில் உடனே கவனம் செலுத்தி, பட்டாசு தயாரிப்பை இந்தியாவில் அடியோடு நிறுத்தி விரட்டி அடிக்க வேண்டாமா? உதயகுமாரின் இந்த போராட்டத்திற்கு கூடன் குளம் போராட்டத்திற்கு கிடைத்த ஆதரவை விட மக்களின், மற்றும் பொது நல விரும்பிகளின் ஆதரவு கட்டாயம் மிக அதிகமாகக்கிடைக்கும். செய்வார்களா?