25.ஆதலினால் காதலித்தேன்..! பொள்ளாச்சி அபி.

கவிதை எழுத நினைதேன்
நினைவுகளாய் உன் முகம்
கலங்கியது என் கண்கள்
மட்டும் அல்ல
என் பேனாவும் தான் .......
---------:பாஷா ஜமீல் --------------

தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைத் தேடும் முயற்சியில் எங்களை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டோம்.இது உள்ளூர எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிப்பதாக இருந்தது.எனக்கான பொறுப்புகள் அதிகரித்துவிட்டதாகவும் தோன்றியது.!.பின்னாளில் நான் ஒரு முழுநேர தொழிற்சங்கவாதியாகவும் மாறிப்போனேன்.

இவ்வாறு நான் மாறியது விருப்பப்பட்டு தேடிச்சென்றதல்ல.! என்னைச்சுற்றி ஏற்பட்ட புறச்
சூழ் நிலைகள்,எனக்குள் ஏற்படுத்திய அகச்சூழ்நிலையால் தானாய் விளைந்தது.

குறிப்பிட்ட ஒருசிலரின் லாபநோக்கால் விளைந்த சுரண்டலின் தன்மையும்,அதிலிருந்து என்னையும், என்னைச்சார்ந்தவர்களையும் தற்காத்துக் கொள்வ தற்கான போராட்டமே,நானும் ஒரு தொழிற்சங்க வாதியாய் மாறிப்போவதற்கு காரணமாயிருந்தது. இதற்குப்பிறகு கம்பெனி நிர்வாகச் சட்டங்களும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர் உரிமை களையும் குறித்து நான் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமும் எனக்கு ஏற்பட்டது.

இதுகுறித்த தேடுதல்கள் அதிகரித்தபோது, அப்போதும் எனக்கு புத்தகங்களே உதவி செய்தன. மேலும்,அகிலஇந்திய அளவில் செயல்பட்டுவரும் தொழிற்சங்கத்துடனான எனது தொடர்பும் இறுகியது.அது மேலும்,மேலும் படிப்பினைகளைத் தருவதாகவும் இருந்தது.

ஒரு தொழிலுக்கான மூலதனம் போடுபவர்களுக்கு மட்;டுமே ஆதரவாக இயங்கிவந்த அரசு,அந்தத் தொழிலின் மறுபாதியான உழைப்பாளர்களை சுரண்டுவது குறித்தும்,நசுக்குவது குறித்தும் கவலைப்படவேயில்லை.இதற்கு ஆதரவாகவே சட்டங்களையும் வகுத்து வைத்துக் கொண்டது. இச்சட்டங்களால் தொழிலாளர்கள் எவ்வித மெல்லாம் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறித்து,அறியவந்தபோது, எனது கம்பெனித் தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் என்னால் இயன்ற உதவிகளைச் செய்வது என்ற தீர்மானம் எனக்குள் இறுகிவிட்டது.

மேலும்,இவ்வாறாக நான் தீர்மானித்துக் கொண்ட போது,எனது வாழ்க்கைக்கு ஒரு புதியஅர்த்தம் ஏற்பட்டுவிட்டதாகவே உணர்ந்தேன். “கோடிக்கால் பூதமாக இருந்துவரும் தொழிலாளி வர்க்கம்” அதன் சக்தியை உணராமல் இருக்கின்ற நிலை,மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியது.அதுவே அவர்களின் மீது எனக்கு மிகவும் பரிவையும்,நேசத்தையும் ஏற்படுத்தியது.அந்த எளிமையான மனிதர்களின் மீதான எனது காதலைச்சொல்ல எனக்கு கவிதைகளும் பாடல்களுமே உதவின. கவியரங்கங்களும் எனக்கு வாய்ப்புகளை அளித்தன.

அதிலும் குறிப்பாக அவ்வப்போது பிரபலமாக இருந்த திரையிசைப் பாடல்களின் மெட்டுகளை எனது சொந்தவார்த்தைகளால் நிரப்பி,என்னைக் காட்டிலும் வலிமையாகவும்,கம்பீரமாகவும் இருந்த தோழர்களிடம் கொடுப்பதும்,அதனை அவர்கள் பொதுமேடைகளில் பாடுவதும்,எனக்கு மிகவும் உதவியாக இருந்தன.இப்படியாக தனிமனிதனாக இருந்த நான்,சமூகத்தோடு ஒன்றிப்போனேன்.
எழுத்தும்,இலக்கியவடிவங்களும் எவ்வளவு உன்னதமான,வலிமையான கருவிகள்..,அவற்றை எப்போது,எதற்காக,யாருக்காகப் பயன்படுத்த வேண்டும்.? என்பதில் நான் தெளிவடைந்தேன். எனது வாழ்க்கைப் பயணம் ஒரு சீரான நேர்கோட்டில் அமைந்துவிட்டது.

இப்போதெல்லாம் எங்கள் கம்பெனி ஊழியர் களிடையே அதிக இணக்கமும், தோழமையும் ஏற்பட்டிருந்தது.இதன்விளைவாக அவர்கள் வீடுகளில் நடைபெறும் நல்லது கெட்டது எல்லாவற்றையும்,தங்களுக்கான சொந்த விஷயமாகப் பாவிக்கும் போக்கு அதிகரித்திருந்தது. படிப்பு,அவசர மருத்துவ உதவி, திருமணம், திடீர்மரணம் ஆகியவற்றிற்கான செலவினங் களைப் பங்கிட்டுக் கொண்டோம்.அனைவரும் இணைந்து செய்வதால்,நிதிச்சுமை என்பதுகூட மிகச்சுலபமான விஷயமாகியிருந்தது. குழுவாயிருந்தவர்கள் இப்போது குடும்பமாக மாறிப்போயிருந்தோம்.!

கம்பெனியில் மதியஉணவு இடைவேளைகள், பாட்டு,நகைச்சுவை என மிகக் குதூகுலமாகப் போய்க் கொண்டிருந்தது.அன்றைக்கும் வழக்கம்போல,பேசிக் கொண்டிருந்தபோது, “சுற்றுலா சென்றபோது,படகில் பாடிய பாட்டு,உங்கள் சொந்த ராகத்தில் பாடினீர்கள் சரி, சினிமாப் பாடல்களும் பாடுவீர்கள்தானே.?” பிரேமா கேட்டபோது,“நீங்கள் கேட்கத்தயாராய் இருந்தால் பாடுவேனே..!”என்றேன்.

“அப்படியென்றால் பாபு படத்தில் வரும் இதோ எந்தன் தெய்வம் பாட்டு தெரியுமா..? எனக்கு மிகவும் பிடித்தபாடல்களில் அதுவும் ஒன்று” என்று சொல்ல, “ஆகா..அந்தப்பாட்டு முழுதாய்த் தெரியாதே..அதை நாளைக்குப் பாடுகிறேன்.இன்று வேறு ஏதாவது பாடட்டுமா.?”

“சரி பாடுங்கள்.” அப்போது வேறு ஒரு பாடல் எழுதுவதற்காக,தொடர்ந்து கேட்டுவந்த மலையாளப்பாடல் ஒன்று எனக்கு மனப்பாடம் ஆகியிருந்தது.அதனையே பாடினேன்.அவர்களுக்கு அர்த்தம் முழுதாய் விளங்காவிட்டாலும் அதன் ராகம் ரசிப்புக்குரியதாக இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன். அதனை முழுதாய்ப் பாடி முடித்தவுடன்,செரியன்,பவுலோஸ், நாயர்,மற்றும் ரேச்சல் ஆகியோர்,"ஹேய்..ஒரு மலையாள காயகன் பாடுந்நது போல அசலாயிட்டுண்டு..! என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.

ஆனால்,பிரேமா கேட்ட அந்தப்பாடலை எப்படியாவது தேடிப்பிடித்து,அடுத்தநாள் பாடிவிடவேண்டும் என்று நினைத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தேன்.எனது நேரம்,அந்தப்படம் வெளிவந்து நெடுநாட்கள் கடந்திருந்ததால்,அதன் பாட்டுப்புத்தகம்,பல இடங்களில் தேடியும் கிடைக்கவேயில்லை.!

ஆதலினால் காதலித்தேன்..! மீண்டும் தொடர்கிறேன்.
-------------------------------

எழுதியவர் : pollachi abi (1-Oct-12, 12:14 am)
சேர்த்தது : பொள்ளாச்சி அபி
பார்வை : 217

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே