நானும்....நீயும்...

உன் பெயர் சொல்லுகையில்
நானும்....
என் பெயர் சொல்லுகையில்....
நீயும்....
அனிச்சையாய்த் திரும்புகிறோம்.

காதல்
கடவுளாகிக் கொண்டிருக்கிறது
நம்மிடம்.
**************************************************************
என் நீர்க்குடுவையில்...
மழைச் சொட்டின் தாள கதியுடன்
நிரம்பிக் கொண்டிருக்கிறது
உன் கண்ணீர்த் துளி.

மெதுவாய்...
எழும்பும் அதன் உயரத்தில்
அமிழ்ந்து கொண்டிருக்கிறாய்
நீ.

கல்லெறியாமல்...
சரிந்த பார்வையுடன்
அலகு நீட்டிக் காத்திருக்கிறது
எனது காகம்....
உன்னை அருந்தும் விழிப்புடன்.
*************************************************************
உன் பெயரைச் சொல்லும் பொழுதோ...
உன்னை நினைக்கும் பொழுதோ,,,
விரிந்து விடுகிறது
எப்போதும் நீ கையில் வைத்திருக்கும்
உன் செல்லக் குடையும் ....
என் கண்களில்.

மடக்கி வைக்கத் தெரியாத
கவிதை...
நடந்து கொண்டிருக்கிறது
அதன் நிழலில்
உன் கை பிடித்தபடி.
*********************************************************************
நீ சொன்ன அடையாளங்களை
வகைப்படுத்தி...
வந்து சேர்ந்தேன்...
நீ சொன்ன இடத்திற்கு.

நீ இருந்தாய்...
நீ சொன்ன அடையாளங்கள்
எதுவும் இல்லை.

இப்போது....ஏதோ ஒன்று...
என்னைத் துன்புறுத்துகிறது
உறுதிப் படுத்தச் சொல்லி....

நீதானா...
நீ சொன்ன நீ என.
*****************************************************************

எழுதியவர் : rameshalam (3-Oct-12, 9:57 am)
சேர்த்தது : rameshalam
பார்வை : 143

சிறந்த கவிதைகள்

மேலே