போராளி
சுதந்திர வேட்கை கொண்டு
சுயம் சிறக்க வேண்டுமென்று
சுற்றி வந்த பகையனைத்தும்
சுவடில்லாமல் அழிக்கத் துடித்து
அகிம்சை வேதம் புறம்தள்ளி
அடிக்கு அடி சித்தாந்தம் சிரமேந்தி
அநியாய வேர்களை அறுத்தெறிய
அக்கினிப் பிழம்பாய் புறப்பட்டு
மாடி மனை விட்டு வந்து
காடு மலை சுற்றித் திரிந்து
பசி உறக்கம் நினைத்துப் பாராது
பகை முடிக்க கர்வம் வைத்து
முந்தி நின்ற முன்கோபம் தடுத்து
மூன்றாம் கரமாய் ஆயுதமெடுத்து
களம் காணக் காத்திருந்து
காலம் கனியப் பார்த்திருந்து
உயிரென்பது துச்சமாக
உறுதியென்பது உச்சமாக
லட்சிய வெறி மிச்சமாக
லட்சியவாதி மட்டும் அனிச்சமாக
காற்றைப் போல சுதந்திரம் கேட்டு
ஆற்றைப் போல சுதந்திரம் கேட்டு
அடிமை விலங்கை உடைக்கக் கேட்டு
சமத்துவப் பூக்கள் மலரக் கேட்டு
மரணம் என்பது மலர்ச்செண்டாய்
கொள்கையோ கொண்ட கடமையாய்
வெற்றியென்பது வீர விருதாய்
சரித்திரம் காணவே போராட்டம்.!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
