மகன் ஒளித்து வைத்த ஓடு!
ஒரு செல்வந்தன் தன் தந்தைக்கு ஒரு ஓட்டிலே கஞ்சி வார்த்துக் கொடுத்துக் கொண்டு வந்தான்.
அவன் பிள்ளை ஒருவன் நீண்ட நாளாக தந்தையின் செயலை பார்த்தபடியே இருந்தான். ஆனால் அவன் இதயத்தில் வேதனை பொங்கி வழிந்தது.
ஒருநாள் அவரின் மகன் அந்த ஓட்டை எடுத்து ஒளித்து வைத்து விட்டான்.
அந்த செல்வந்தத் தந்தை மாலை உணவைத் தன் தந்தைக்கு கொடுப்பதற்காக வந்து ஓட்டைத் தேடிவிட்டு தந்தையாரிடம் “அந்த ஓடு எங்கே?” எனக் கேட்டார்.
அவரோ “நானறியேன்” என்றார்.
உடனே தனது மகனிடம் சென்று “தாத்தாவுக்கு உணவு கொடுக்கும் அந்த ஓட்டைக் காணவில்லை. நீ கண்டாயா?” என அதட்டிக் கேட்டார்.
அவனும் தெரியாது என சொல்ல கோபத்துடன், தந்தையாரின் பக்கம் திரும்பிய செல்வந்தர் தந்தையிடம், “எங்கே உனது ஓடு?” என்று கோபமாகக் கத்தியபடி சண்டையிட்டார்
இதைக் கவனித்துக் கொண்டிருந்த மகன் வேதனையோடு ஓடிச் சென்று, தனது தந்தைப் பிடித்து தடுத்தபடி, “அந்த ஓடு என்னிடம் தான் இருக்கிறது” என்றான்.
“இதை நீ எதற்கு எடுத்து ஒளித்து வைக்கிறாய்?” என்று அந்த செலவந்தர் மகனைச் சத்தம் போட்டார்.
“"நான் பெரியவனான பின் உங்களுக்கும் வயதாகிவிடும். அப்போது நாங்கள் உங்களுக்கு உணவு பரிமாற வேண்டி வரும். அதற்கு ஓடு தேவைப்படுமே. அதற்காக நான் அதை எடுத்து உங்களுக்காக பாதுகாத்து ஒளித்து வைத்திருக்கிறேன்” என்றான்.
அப்போது தான் அந்தச் செல்வந்தனுக்கு தன் தவறான செயலைப் பற்றித் தெளிவு பிறந்தது. அப்போது முதல் தன் தந்தையை நல்ல முறையில் பாதுகாக்கத் தொடங்கினான்.

