தமிழர் பண்பாட்டில் பாலின் பங்கு

தன்னோடு கழனியில் தயங்காமல் உழைத்திட்ட கால்நடைகளுக்கு,தான் பொங்கல் கொண்டாடும் போது நன்றி மறக்காமல் கால்நடைகளுக்கும் பொங்கல் கொண்டாடும் உலகின் மூத்த குடி மக்களான தமிழரின் இலக்கியம்,சமயம் ,பண்பாடு ,கலை ஏனைய வழக்காறுகளில் பாலின் பங்கு தவிர்க்க முடியாததாகியுள்ளது .

வழிபாடுகளில் பால் :-

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் "

"தனித்தனி முக்கனி பிழிந்து வடித்தொன்றாய்க் கூட்டி
தனித்த நறுந்தேன் பெய்து சர்க்கரையும் கற்கண்டின்
பொடியும் மிகக்கலந்தே பசும் பாலும்
தெங்கின் தனிப்பாலும் சேர்த்து ஒரு தீம் பருப்பிடியும் விரவி "

மேற்காணும் பாடல்களில் இறை வழிபாட்டில் பால் குறிப்பிடப்படுகிறது .பால்குடம்,பால்காவடி,பாலாபிஷேகம்,தயிர்சாதம்படையல், வெண்ணெய்சாற்று, வெண்ணெய்த்தாழி, நெய் தீபம், கோவில் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு மோர், பானகம், போன்றவை நேரிடையாகவும், மாடு கன்று ஈன்றபின் முதலில் கடவுளுக்கு கொடுத்தபின்னரே விற்பனைக்கு பால் ஊற்றுதல், நீணட நாட்களாக சினையாகி கன்று ஈனாத கிடேரிகள் கன்று ஈன்றதும் முதல் கன்றினை இறைவனுக்கு விடுதல் போன்ற மறைமுகமாகவும் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.

உலகெங்கிலும் மாமனிதர்களுடன் இருந்து வாழ்ந்த கால்நடைகளுக்கு மனிதர்கள் நன்றிக் கடன் பட்டுள்ளனர்.
ஆடுகள் மேய்த்த இயேசுபிரான் கிறிஸ்தவ மதத்திலும்,ஒட்டகங்கள் மேய்த்த நபிகள் நாயகம் இஸ்லாமிய மதத்திலும்,ஆநிரை மேய்த்த கண்ணபிரான் இந்து மதத்திலும் முறையே பைபிள்,குர் -ஆன்,பகவத் கீதை ஆகிய நீதி நூல்களை போதித்துள்ளனர்.உலகின் பெரும்பகுதி மக்கள் இந்நூல்களை பின் பற்றி வாழ்ந்து வருகின்றனர் .அதனை அடியொற்றி தமிழர் வழக்காறுகளில் பூலோக அமுதமாம் பால் எத்தகைய பங்கு பெற்றுள்ளதென்பதை காண்போம் .
சடங்குகளில் பால்:-
தாயின் சீம்பாலோடு தொடங்கும் மனித வாழ்வில் தாய்ப்பால் நிறுத்தப்பட்டவுடன் பசுவின் பால் கலந்த நிலாச்சோறு ஊட்டுதலில் வளர்ந்து வருகிறது .மனித இனத்தை தவிர வேறு எந்த உயிரினமும் வாழ்நாள் முழுவதிலும் தனது முக்கிய உணவாக பாலைப் பயன்படுத்துவதாக அறியவில்லை. நடை உடை பாவனைகளில் ஒருவரைப்பார்த்து பால்மணம் மாறா பச்சிளம் குழந்தை என்றும் பால் வடியும் முகம் என்றும் கூறக்கேட்கலாம் .
புதிதாய் வீடு குடிபுகுந்தால் முதலில் பால் காய்ச்சும் பழக்கம் இன்றும் இருந்துவருகிறது. பசுவுடன் கன்றும் முதலில் புதுவீட்டிற்கு அழைத்துவரப்பட்டு பின் கோமியம் எனப்படும் பசுவின் சிறுநீர் வீடுமுழுதும் தெளிக்கப்படுகிறது. திருமணம் முடிந்த புதுமணத்தம்பதிகளுக்கு முதலில் பாலும் பழமும் கொடுக்கப்படுகிறது.
பழமொழிகளில் பால்:-
தாயிடம்கூட உரிமையை கேட்டுதான் பெறவேண்டுமென எண்ணி அழுத பிள்ளை பால் குடிக்கும், என்று கூறப்படுகிறது.
ஒருவரின் குண சிறப்பைக் கூற பால் வடியும் முகம், கறந்த பால் கறந்தபடி, என்று கூறப்படுகிறது.
ஒருவரின் நன்றிமறவாமைக்கு பால் கொடுத்த வீட்டிற்கு பாதகம் எண்ணாதே என்றும் இடம் ,பொருள் பார்த்து நடந்து கொள்ள பனை மரத்தடியில் பாலைக் குடித்தாலும் கள் என்று தான் உலகம் சொல்லும்.என்றும் ,உறவு முரிந்து போனதை தெரிவிக்க கறந்த பால் மடிபுகுமா? என்றும் பழமொழிகளில் பால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வழக்காறுகளில் பால்:-
தமிழக கிராமப் பகுதிகள் பலவற்றிலும் ஒருவரிடம் சத்தியம் வாங்கும் போது கறந்த பால் நிறைந்த சொம்பில் கை வைக்க சொல்லி சத்தியம் வாங்குகிறார்கள். அவ்வாறு வாக்குறுதி தவறினால் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் தீங்கு வந்து சேரும் என்பது அவர்களது நம்பிக்கையாக திகழ்வதால் சத்தியத்தை மீறுவதில்லை.
பால்குடி மறந்த குழந்தைகளுக்கு தாய் பால் சோறு பிசைந்து நிலாவைக்காட்டி நிலாசோறு ஊட்டுகிறாள்.தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு ஆவின் பாலே அன்னையின் பாலாகிறது.
பின்னர் அவன் பள்ளி பயிலுங்கால் படிப்பு, விளையாட்டுக்களில் சிறந்து விளங்க காலை ,இரவில் பால் குடிக்க கொடுக்கிறாள் தாய்.
அன்றாட வாழ்வில் மிகவும் குறைந்த செலவில் விருந்தினரை உபசரிக்க ஏழை எளியவர் முதல் பெரிய பணக்காரர் வரை டீ,காபி,லெஸி,பாதாம்பால் ,மில்க்க்ஷேக் ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.
முதல் இரவில் மணப்பெண் முதலில் மணமகனுக்கும் பின்னர் மணமகன் மணப்பெண்ணுக்கும் பால் கொடுக்கும் பழக்கம் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.

நன்றாக வாழ்ந்தவர் முதுமை எய்தி உயிர் பிரியும் தருவாயில் கோழை அடைத்து சேட்டு முகம் இழுக்கிறது என்று சொல்லும் மரணப் போராட்டத்தின் போது போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர உற்றார்,உறவினர்களால் முதுமை பசியடக்க முதியோரின் வாயில் ஊற்றப்படுவது ‘பால்’ தான்.
உயிர் பிரிந்து இறுதி ஊர்வலம் முடிந்து மறுநாள் பால் தெளிப்பு சடங்கு நிறைவேற்றப்படுகிறது.
பால் கொடுத்து முகிழ்த்த முதல் உறவை அவர் இறந்த பின் அவரது மனைவியின் திருமாங்கல்யத்தை கழற்றி பாலில் இட்டு அவரின் மண்ணுலக உறவை முடித்து வைக்கவும் பால் தேவைப்படுகின்றது.
இவ்வாறாக மனித வாழ்வின் ஆதி முதல் அந்தம் முடிய அன்றாடம் பாலின் பங்கு இருப்பதை உணர்ந்து தான் ஐயன் திருவள்ளுவர் அறத்துப்பால் ,பொருட்பால் ,இன்பத்துப்பால் என்று
திருக்குறளை தொகுத்திருப்பார் போலும்.
ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் பலவின்பால்(பசுவின் பால்)
தேவைப்படுகிறது.

எழுதியவர் : ஏகலைவன் (1-Nov-12, 10:25 pm)
பார்வை : 518

சிறந்த கட்டுரைகள்

மேலே