பிறவா வரம் தாரும்...(பிறவாநிலை வேண்டி சிவனிடம் ஒரு விண்ணப்பம்)..

பிறவா நிலை வேண்டி-நான்
........பித்தா உன்னிடம் சரண் புகுந்தேன்.
மறவாமல் அளித்திடுவா யெனக்கு-இம்
........மானிட வாழ்க்கை வேண்டாம்.
உறவாடுமிப் புவியினிலே யெனக்கு
........உறவாட வேறு யாருளரோ.
துறவாழ்க்கை வாழவேண்டி-தூயா
........உன் திருவடியைப் பற்றி நின்றேன்.


பாலையில் இட்ட நீர் போல்-தினம்
........பண்ணும் நற்ச செயல் மறைந்ததுவே.
பாலில் இட்ட மைபோல் -தினம்
........பண்ணும் பாவம் படர்ந்ததுவே
நாளைய வாழ்க்கை நானறியேன்- எந்த
........நரனுமறியார் சிவனே - நினது
காலையே யன்றி வேறொன்றை
........நான் பற்றேன் வேறு கவலயறியேன்

மனதினு ளுன்னை வைத்தேனே-சிவனே
........மறுபிறப் பின்றிக் காப்பாய்
தனம்தினம் நிறைத்திட் டாலும்-சிவனே
........ தவம்கூட அருள் செய்வாயே
குணமனைத்தும் உன்னை வைத்து-சிவனே நீ
........குற்றமற்ற வாழ்வெனக் களிப்பாய்
கணநேரப் பொழுதென் றாலும் சிவனே- உன்னை
........கனவிற்கூட நான் மறக்கிலேனே.


எந்திர வாழ்க்கை தன்னில்-சிவனே
........எத்தனைநாள் நான் வாழ்ந்திருக்க...?
சுந்தர வாழ்வென்றாலும் சிவனே-இனி
........சுதந்திரம் எனக்கிங் கில்லை
மந்திரம் நானறியேனே சிவனே-அதன்
........மகத்துவமும் நானறி யேனே
தந்திரம் பயிற்றுவிப்பாயே சிவனே-நான்
........தக்கபடி உனைவந் தடைய

கருமங்க ளனைத்தும் தீர்த்து-சிவனேயுன்
........கரங்கள்கொண் டென்னைய னைப்பாய்
விருப்பங்கள் விளையுமென் மனதை-சிவனே
........வீடுபேற்றுக் கழைத்துச் செல்வாய்
தருமங்கள் அறிந்து வாழேன் சிவனே-எனக்குத்
........தயை காட்டி அருள் புரிவாயே
திரும்பி நான் பிறக்க நேரின்-சிவனே நின்
........திருவடி கொடுத்துக் காப்பாய்........நின்
........திருவடி கொடுத்துக் காப்பாய்.

....................................................................பசுவைஉமா

எழுதியவர் : பசுவைஉமா (7-Nov-12, 10:45 pm)
பார்வை : 331

மேலே