இருண்ட தீபாவளி வாழ்த்துகள் !
இங்கு இல்லை தீபாவளி !
எங்களுக்கு இல்லை தீபாவளி !
மின்சாரத் தொழிற்சாலைகளில்
மேனி வாட உழைக்கும்
மேதினி பாட்டாளி எங்களுக்கு
இந்த மினுக்கெலாம் எதுவும்
இப்போதைக்குத் தேவை இல்லை !
உலக்களவு அரிசியில்
ஊருக்கெல்லாம் விருந்து
படைக்க நாங்கள் என்ன பகவானா?
இருட்டுக்குள் அமர்ந்து
எரிச்சலை உணர்ந்து
திருட்டுக்கு பறிகொடுத்த
எங்கள் தங்க வாழ்வை
எரித்து விட்ட இருட்டை
விரட்டி அடிக்க
நாங்கள் என்ன பகலவனா ?
மாதம் ஒரு வாரம்
மட்டுமே வேலை
என்ற வரைமுறையால்
நாங்க சோறு வைச்சு
நல்ல குழம்பு வைச்சு
சந்தோஷமாய்ச் சாப்பிட்டு
பல நூறு நாளாச்சு !
இதிலே எங்கடா இனிய தீபாவளி ?
பண்டிகைக்குக் கேட்டான்
ஜீன்ஸ் பேன்ட் ஒண்ணு!
பத்தாம் கிளாஸ் படிக்கிற
எங்க பையன் நல்ல கண்ணு !
அதைக்கூட வாங்கித் தர
வக்கிலாத வாழ்க்கையோடு
வாழும் எங்களைத்
தவிக்க விட்டு
அந்த பச்சை மண்ணு
பாழும் நெருப்பு வைச்சு
பறந்து போனதுதான்
எங்களோட நிலைமை !
இதிலே என்ன பண்டிகை
பலகாரம் இனிப்பு என்னும் இனிமை ?
இருண்ட தீபாவளி!
இதயம் முழுதும் வலி!
அழுவதற்கும் அலைவதற்கும்
பிறந்தவர்கள் நாங்கள்!
இதில் என்ன உங்கள் வாழ்த்துக்கு வேலை
தயவு செய்து போங்கள்!