துளிர் பருவம்:

துள்ளித்திரிந்த பள்ளிப்பருவம் -நினைவுகள்
நெஞ்சில் பல்கிப்பெருகும்

சேவல் எழுப்பும் அதிகாலை நேரம்
நாவல் மரங்களில் பொழுதுகள் விடியும்

சோலை வனங்களின் சுகந்தமெல்லாம்
தென்றலாய் வந்து சாமரம் வீசும்..

ஆடித்திரியும் நண்பர் கூட்டம்
பிறர் அஞ்சும் வகையில் சேட்டைகள் செய்யும்

கடல்போல் விரிந்த கண்மாய்கூட
சிறு நீச்சல் குளமாய் குறுகிப்போகும்

அழகாய் பறக்கும் கொக்குகள் எல்லாம்
எமை ஓரக்கண்ணால் ரசித்துச்செல்லும்

ஓங்கி வளர்ந்த மரங்களெல்லாம்
எமக்காய் ஒற்றைக்கால் தவமிருக்கும்

மலர்ந்து சிரிக்கும் தாமரைக் குளங்கள்
எமது மாலை நேரத்து வேடந்தாங்கல்..

விடுமுறை நாளில் சிறு பணிகளை ஏற்போம்
ஆனந்தக்காட்டில் பசுக்களை மேய்ப்போம்

நூதனமாய் நடக்கும் நுங்கு வேட்டை
அய்யய்யோ!!!! அந்த நினைவுகள் சொல்ல வார்த்தைகளில்லை

பள்ளியில் கற்றதன் சாரம் கொஞ்சம்
வாழ்க்கையின் மடியில் நீந்திக்கற்றதே மிச்சம்

சொல்லச் சொல்ல சிந்தை இனிக்கும்
பொங்கி வழியும் நினைவுகள் இன்னும்

எழுதியவர் : பால கிருஷ்ணா (18-Nov-12, 7:47 pm)
பார்வை : 456

மேலே