கோடுகள் இல்லாத கோலங்கள்
சாமரம் வீசும் பூமரங்கள்
தென்றலின்
சாஸ்வத மந்திரத்துடன்
சல்லாபிக்கின்றன.
சில-பல முக வடிவங்கள்
உலகின் பல திசைகளில்
அறிமுகமாகத் துடிக்கின்றன!
எல்லையில்லாத் தேரோட்டத்தில்
தடுப்புக் கட்டைகளை விரித்து
இலக்கு தேடி அலைகின்றன!
சில யதார்த்தங்களையும்
பல தத்துவங்களையும்
சமைத்துவிடத் துடிக்கும்
இந்த உள்ளங்களுக்கு
பொழுது போக்கு
ஒரு விளையாட்டு!
அஸ்தமனத்தில் தவமிருந்து
உதயத்தில் ஒளியும் பழக்கம்
எளிதில் மறைவதில்லை!
காரணம்----
வெளிச்சத்தின் வேகத்துடன்
சரசமாடும் உயிர்த் துடிப்புகள்
வீரத் துவக்கத்தில்
வெற்றியை
அர்ப்பணித்து விடுகின்றன---
ஆத்மாவின் சஞ்சலத்திடம்!
இவை
சில மணிநேரத் தவத்தில்
முக்காலத்தையும்
அளந்துவிடத் துடிக்கும்
அப்பாவிகள்!
அஸ்தமனத்தின் அந்தரத்தில்
ரகசியத் திருமணங்கள்---
இவை கோடுகள் இல்லாத கோலங்கள்!