மனதுக்குள் புயல் (3)

இவ்வாறாக இருவர் என்னிடம் நகுலனைப் பற்றி பேசிச்சென்றனர். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. அது மதிய உணவு வேளையானதால் அனைத்து நடனமணிகளையும் மாஸ்டர் ஆனந்த் உணவருந்த ஒரு உணவகத்திற்கு அழைத்து சென்றார். நானும் கூடவே சென்றேன். அங்கு நான் மாஸ்டர் அருகில் அமர்ந்து கொண்டேன். உணவு தயாராகும் வரையில் மாஸ்டருடன் பேசிக்கொண்டிருந்தேன்.
என் புதிய வேலையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது மாஸ்டர் என் திருமணத்தைப் பற்றியும் விசாரித்தார். நான் இனிமேல்தான் மாப்பிளை பார்க்க வேண்டும் என்று கூறினேன். இக்குழுவில் யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ.. ஏன் நம்ம நகுலனைக் கல்யாணம் பண்ணிக்கோ என்றார். ஒரு கணம் அதிர்ந்து போனேன். என்ன பேசுவது என்றே தெரியவில்லை. நல்ல வேளை, உணவு பரிமாற ஆள் வந்துவிட்டதால் உணவுபக்கம் எங்கள் சிந்தனை திரும்பியது.
வாய்தான் உணவைச் சுவைத்ததே தவிர மனம் வேறு விஷயத்தைச் சிந்தித்து கொண்டிருந்தது. எனக்குள் ஏதோ ஒரு புரியாத உணர்வு. மாஸ்டர் இப்படி சொல்லிட்டாரே… நகுலனுக்கு என்னைப் பிடிக்குமா? அதை அவர்கிட்ட அவன் சொல்லிருப்பானா? அதனால்தான் இவர் இப்படி சொல்றாரா?? என்னைப் பற்றியே அனைவரிடமும் பேசுகிறான். என்னை விரும்புரானா? ஒன்னுமே புரியலையே…ஆண்டவா… !!
இரவில் தூக்கம் கூட வரவில்லை… நகுலன் என்னுள் வந்துவிட்டானா? ஏன் மனம் அவனைப்பற்றியே நினைக்கிறது? இவ்வாறாக அன்றைய தினம் மனக்குழப்பத்திலே கழிந்தது. நடனவிழா இரண்டு நாட்கள் என்பதால்இரண்டாவது நாளும் அங்கு நான் உதவச் சென்றேன். நகுலன் இன்று சற்று வேறு விதமாக நடந்துகொண்டான். என்னிடம் ஹாய் கூட சொல்லவில்லை. என் அருகில் இருக்கும் மற்ற பெண்களிடம் பேசினான்.
ஏன் என்னை அவன் கண்களுக்குத் தெரியவில்லையா?
மேடை அலங்காரம் சிறிது செய்ய வேண்டி இருந்ததால் நகுலன் திரைச்சீலையை எடுத்துகொண்டு மேலே ஏணியின் மீது ஏற முற்பட்டான்.
காயு இங்க வாங்களேன்.. இதைப் பிடிச்சுக்குங்க-னு கூப்பிட்டதும் சுயநினைவுக்கு வந்தேன். அவனுக்கு உதவ அந்த துணியைப் பிடித்துகொண்டேன்.. இது என்ன புதுசா இருக்கு, வாங்க போங்க-னு சொல்றான்..
மேலே கட்டி முடித்ததும் அவன் கீழே இறங்கினான். என்ன பேச போகிறானோ என்று தவித்து போனேன். இறங்கியவன் வேறு வேலையாக விறுவிறுவென நடந்து எங்கேயோ போய்விட்டான். மனக்கவலையில் ஆழ்ந்து அப்படியே உடகார்ந்துவிட்டேன்.
அதன்பின் எதிலும் எனக்கு நாட்டம் இல்லாததுபோல எனக்குத் தோன்றியது. நேரே உணவருந்தும் அறைக்குச் சென்றேன். அமைதியாக ஓர் உணவுப்பொட்டலத்தை எடுத்துகொண்டு அமர்ந்தேன். நகுலனும் அவ்வறைக்கு வந்து ஒரு பொட்டலத்தை எடுத்துகொண்டு என் அருகில் அமர்ந்தான்.
நான் ஒன்றுமே பேசவில்லை, ஆனால் என் மனம் மிகுந்த கனத்துடன் இருப்பதை உணர்ந்தேன். நகுலனே என்னிடம் பேச்சுக்கொடுத்தான். இன்னிக்கு லீவா நீ? நான் நெனச்சேன் நீ இன்னிக்கு வர மாட்டேனு…
ஓ உனக்கு நான் இப்பதான் கண்ணுக்குத் தெரியிரேனா? முதல்-ல வாங்க போங்க-னு பேசினெ இப்பதான் சுயநினைவு வந்ததா-னு கேட்டே விட்டேன்…
சிரித்துகொண்டே , இல்ல காயு, வேலை முடிஞ்சு நேரா வந்தேனா, அதான் உன்னைக் கவனிக்கல… இங்க வேற நிறைய வேலை, நீயே பார்த்தல…
நகு, அடுத்த தடவை இந்த மாதிரி நடந்துக்காதே…நான் பயந்தே போயிட்டேன்.. அது சரி, நீ என்ன வெஜிடேரியனா? வெஜீ பேக்கட் எடுத்துட்டு வந்துருக்க...??
என்ன வெஜி-யா? ஹேய், அதுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்-மா… இரு, நான் பேக்கேட்-ட மாத்திட்டு வரேனு போனான்… என் மனம் இப்பொழுது ரொம்பவும் லேசாக இருந்தது. என்னையும் அறியாமல் அவனை ஓரக்கண்ணால் பார்த்தேன்… அடடா, காதல்-ல விழுந்துட்டேனோ? எனக்குள் கேள்வி எழுந்தது… ஆனால் பதில்தான் எனக்குத் தெரியவில்லை…
அவன் வந்ததும் நானும் அவனும் சேர்ந்து சாப்பிட்டோம்… நடன தொடர்பாக நிறைய பேசினோம்…. அவனுடன் இருக்கும்போது நான் நானாக இல்லை என்பது மட்டும் எனக்குத் தெள்ளத்தெளிவாகியது…. அவன் நடனமாட தயாராக சென்றுவிட்டான்.
இரண்டாம் தின நடன விழாவும் மிகச்சிறப்பாக நடந்தேறியது. விழா முடிந்து அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தோம். விக்கி ஏதாவது உணவகத்திற்குச் சென்று இன்றைய நாளை ‘செலெப்ரேட்’ பண்ணலாம் எனக் கூற ஒருசிலர் ஒப்புக்கொண்டனர். மாஸ்டர் என்னையும் அழைத்தார். நான் வெகுதூரம் செல்ல வேண்டும் எனவே சீக்கிரம் கிளம்புவதாக சொன்னேன்.
நீ எங்க போகனும்-னு கேட்டான் நகுலன். நான் சீனாய்-க்கு போகனும்-னு சொன்னேன். நான் ஸ்கூடாய்-தான், நான் உன்னை விட்டுட்டு போறேன் என்றான். மனம் குதூகலத்தில் இருந்தது. அவனுடன் தனியாக பேச சந்தர்ப்பம் தானாக வாய்க்கிறதே என்று மிகவும் மகிழ்ந்தேன். உணவருந்திய பின் நாங்கள் அனைவரும் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம். இரவு 1 மணி ஆகிவிட்டது.. அனைவரும் கிளம்ப ஆயத்தமானோம்.. மாஸ்டரிடம் விடைபெற்றுக்கொண்டு நகுலனும் நானும் வாடகை கார் ஒன்றில் ஏறினோம்...