மனதுக்குள் புயல் (2)

வணக்கம் சார். என் பெயர் காயத்திரி . எனக்குச் சிறுவயது முதலே ‘புயல்” நடனக்குழுவில் சேர்ந்துகொள்ள கொள்ளை ஆசை சார்.
சரிமா, நீங்க ஓடிஷன் வாங்க… அப்புறம் பார்ப்போம்…
‘புயல்’ பல நடனங்களை மக்கள் அரங்கிலும் நாடு தழுவிய அளவிலும் அரங்கேற்றும் ஒரு பிரபலமான குழு.

பல கனவுகளுடன் ஓடிஷனுக்குப் போனேன். எனக்குத் தெரிந்த நடனங்கள் அனைத்தையும் ஆடிக்காட்டினேன். என்னையும் ஓர் உறுப்பினராக ஏற்றுகொண்டதும் மட்டற்ற இன்பம் அடைந்தேன்.

பல மாதங்கள் கழித்து, எங்கள் நடன மாஸ்டர் ஆனந்திடமிருந்து அழைப்பு வந்தது. தேசிய அளவிலான நடனவிழா ஒன்றில் ஆட வாய்ப்பு வந்துள்ளதாக கூறினார். நானும் ஆடுவதாக உடனே ஒப்புக்கொண்டேன். முதல் நாளே யார் எந்த இடத்தில் ஆடவேண்டும் என பேசி முடிவாகிவிட்டது. எனக்குப் பிரபல நடனமணிகளுடன் சேர்ந்து ஆடும் வாய்ப்பு கிடைத்தது…ரொம்ப சின்சியராக அனைத்து பிரக்டீஸ்-க்கும் சென்று வந்தேன்.

என் மாஸ்டர் கொஞ்சம் கொஞ்சமாக என்னை வடிவமைத்தார் என்றே கூறலாம். நாளடைவில் பிரபல நடனமணிகளுக்கு நிகராக நான் ஆடுவதாக பலர் பேச நான் கேட்டேன். நான் மிகுந்த பண்புடன் நடந்துகொள்வதைப் பார்த்த என் குழுவின் மேய்ன் டான்ஸர் நகுலன் என்னிடம் வந்து பேசினான்; என்னை வெகுவாகப் பாராட்டினான். அவனுக்கும் என் வயதுதான் என்று என் நடன தோழி சொல்லி அறிந்தேன்.

அதே நேரம், என்னைப் போன்றே புதிதாக வந்த விக்கி-க்கு நான் நெருங்கிய தோழியானேன். அவன் என்னைவிட இரண்டு வயது சிறியவன். அவன் என்னோடு ஜோடியாக ஆடும் பையன். நாங்கள் இருவரும் பயிற்சிக்கூடத்துக்கு வெகு சீக்கிரமே வந்து ஒன்றாகவே பயிற்சி செய்வோம். நகுலனும் சீக்கிரமே வந்துவிடுவான். ஆனால் அவனுடைய ஜோடி சற்று தாமதமாக வருவாள். எனவே, அவள் வரும்வரை அவனுக்கு ஜோடியாக நான் ஆடுவேன்.

ஓய்வு நேரங்களில் நான் விக்கியுடன் பேசிக்கொண்டிருந்தால் நகுலனும் எங்களுடன் சேர்ந்து கொள்வான். ஏனோ விக்கி-க்கு நகுலனைக் கண்டாலே பிடிக்காது. வந்துட்டான் உயிர வாங்க…ம்ம்ம்ம் என முனகிக்கொள்வான். நகுலன் வருகிறான் என்றாலே விக்கி அந்த இடத்தைவிட்டு விலகி வேறு இடத்திற்கு சென்றுவிடுவான். ஆக, பல நேரங்களில் அவனுடன் நான் தனியாக பேசிக்கொண்டிருப்பேன்.

இப்படியாக பல மாதங்கள் நகர்ந்தன. நடனவிழாவும் வந்தது. உயிர் கொடுத்து ஆடினோம் என்றே சொல்ல வேண்டும். நானும் விக்கியும் ஆடிய நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்து விட்டதாக முக்கிய பிரமுகராக வந்த மந்திரி கூறியதாக மாஸ்டர் எங்களைப் பாராட்டினார். அதன் பிறகு, இதுவரை என்னுடன் பேசாத அனைவரும் வந்து பேசினார்கள்; பாராட்டினார்கள். நகுலனும் வந்து என்னைப் புகழ்ந்து தள்ளினான். நான் அமைதியாகவே இருந்தேன்.

அன்றைய தினம் முதல் ஒரு வாரத்திற்கு பேஸ்புக்-கில் வாழ்த்துக்குவியல்கள் வந்த வண்ணமாக இருந்தது. அதோடு நான் என் வேலையில் முழுக்கவனம் செலுத்த ஆரம்பித்தேன். ஒரு மாதம் கழித்து புயல் குழு மேற்கத்திய நிகழ்வில் நடனம் ஆடுவதாக செய்தி வந்தது. நான் புதிய இடத்தில் வேலைக்குச் சேர்ந்து இருப்பதால் விடுப்பு எடுக்க பயமாக இருந்தது.

எனவே, நான் அதில் பங்குகொள்ளவில்லையென கூறிவிட்டேன். சக குழு உறுப்பினரான நான் நடன நிகழ்வு அன்று நடனமணிகளுக்கு உதவிசெய்ய சென்றிருந்தேன். அங்கு நகுலன் என்னைப்பற்றி அனைவரிடமும் புகழ்ந்து சொல்லிக்கொண்டு இருந்தான். உடனே நடனத்தோழி ஒருத்தி எங்கள் இருவரைப் பார்த்து ஒருமாதிரியாக சிரித்தாள். எனக்குச் சுறுக்கென்றது. மனதில் ஏதோ ஒரு நெருடல். என்ன நடக்குது? ஏன் அவன் என்னைப்பற்றியே பேசுகிறான்? எனக்குள் நானே கேட்டுக்கொண்டேன்.

எழுதியவர் : Gulabi Desik Mony (3-Dec-12, 12:12 pm)
பார்வை : 258

மேலே