மனதுக்குள் புயல் (1)
நீ ஏதாச்சும் எங்கிட்டருந்து மறைக்கிறியா ??
இல்லையே….
நீ எங்கிட்ட என்னமோ மறைக்கிற மாதிரியே எனக்குத் தோணுது...
அப்படி ஏதும் இல்லையே, நான் என்ன மறைக்கிறேனு நீயே சொல்லேன்…
ஹேய் சரி, என் இடம் வந்திருச்சு.. நான் வரேன்... உடம்ப பார்த்துக்கோ! - னு அவன்கிட்ட சொல்லும்போது என் மனம் பட்ட பாட்டை யார்கிட்ட சொல்லுவேன்??
அந்த வாடகை வண்டியிலிருந்து கீழே இறங்கும்போது என் மனம் மிகவும் கனத்து இருந்தது. இருப்பினும் அவனிடம் என் முகம் சிறப்பாக சிரித்து நடித்தது…
இன்னொரு நாள் சந்திக்கலாம்….பாய் நகுலன்…
நான் இறங்கிவிட்டேன் ஆனால் என் மனம் அவனுடன் அவன்கூடவே சென்றது. என் கால்கள் மட்டுமே என் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தது…
நான் என்னுடன் பேசிக்கொண்டேன்….
நீ பொய் சொல்றடா!
உனக்கு என்னைப் பிடிக்கும்…
ஆனால் எங்கிட்ட ஒன்னுமே சொல்ல மாட்டுற….
வீட்டை அடைந்ததும் நேரே என் படுக்கை மீது விழுந்தேன்.. என் கைதொலைபேசியை எடுத்து அவனுக்குக் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்ப டைப் செய்தேன்….
“ஹாய் நகு, நீ ஏதாச்சும் என்கிட்டெருந்து ஏதாவது மறைக்கிறியா? உண்மையைச் சொல்லு… நம்ம குழுவுல எல்லோரும் என்னையும் உன்னையும் பற்றியே பேசுராங்க…”
அனுப்பும் பட்டனை தட்டுவதற்கு முன்பே எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொண்டேன்…
அடுத்த நொடியில் அவனிடமிருந்து ‘ரிப்லாய்’ வந்தது.
கண்களை இறுக மூடிக்கொண்டு ‘வியூ’ பட்டனை அழுத்தினேன்.
“என்னை மன்னிச்சிடு, காயு. நான் நடந்துகொண்ட விதத்தால யாராவது நம்ம உறவைத் தப்பா நினைச்சிட்டாங்களோ என்னவோ… அப்படி உன் மனசை நான் புண்படுத்தி இருந்தா என்னை மன்னிச்சிடு. என் மனசுல வேற எதுவும் இல்ல. எனக்கு என் அம்மா பொண்ணு பார்த்துகிட்டு இருக்காங்க, என் அம்மா பார்க்குற பொண்ணைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன். நீ என்னைக்கும் என்னோட பெஸ்ட் பிரெண்ட்.” அது சரி, யார் உன்னையும் என்னையும் பற்றி பேசினது-னு சொல்லு, நான் என்ன-னு கேக்குறேன் அவங்ககிட்ட...”
இதைப் படிச்சதும் என் உயிரே போய்விட்டது…. என்னையும் அறியாமல் கண்ணீர் கன்னத்தைத் தொட்டது…
“அதானே பார்த்தேன்… நீ ஏதோ நினைச்சுகிட்டு இருந்தியோனு நெனச்சேன்… நல்ல வேளை… அப்படி ஏதும் இல்ல... இனிமே என்னைப் பற்றி யார்கிட்டயும் புகழ்ந்து பேசாதே… சரியா? அதனால கூட நம்மல தப்பா நெனச்சிக்க வாய்ப்பு இருக்கு. மீண்டும் சந்திப்போம்… கூட் நைட் நகு…”
இப்படி பொய்யான ரிப்லாய் செய்தவுடன் மீண்டும் மீண்டும் அவனது குறுஞ்செய்தியைப் படித்துப்படித்து பார்த்தேன்… என் கடந்த கால நிகழ்வுகளை அசைப்போட்டது என் நினைவுகள்….