கேள் - கேள்
என்பினை உருக்கும்
அன்பினைக் கேள்
நலமா என்று
நண்பனைக் கேள்
சின்னச் சின்னக்
கனவுகள் கேள்
அனைவரும் சேர்ந்திருக்க
அன்பைக் கேள்
ஒன்றுடன் ஒன்றிணைய
ஓராயிரம் கேள்
அம்மையின் அன்பை
அதிகமாய்க் கேள்
பாரினில் சிறக்க
வழியெது கேள்
பண்புடைக் கேள்விகளைப்
பாங்குடன் கேள்
ஆறறிவைப் பெருக்கிடும்
கேள்வியைக் கேள்
மனிதனாய் வாழ
வழியைக் கேள்
காதல் பயிர் வளர்க்க
வழியைக் கேள்
புனலாய்ப் பெருகும்
தமிழைக் கேள்
பிழையில்லாத் தமிழைக்
கற்கக் கேள்
உன்றன் பண்பினை
நண்பனைக் கேள்
பதரென வாழா
வாழ்வைக் கேள்
துன்பம் வந்தால்
துவளாமையைக் கேள்
மனப் பெருக்கம் நிறைக்க
சுருங்கக் கேள்
விஞ்சும் புகழை
அஞ்சிக் கேள்
அடக்கம்தனை
இணக்கமாய்க் கேள்
உருகும் அன்பினைப்
பெரிதாய்க் கேள்
பகை சினம் கொள்ளாப்
பக்குவத்தைக் கேள்
அறிவின் குரலை
ஆழ்ந்து கேள்
பண்பினில் சிறக்க
அன்பினைக் கேள்
ஆலம் விழுதாய்ச்
சுற்றம் கேள்
இடரொன்றும் செய்யா
இதயத்தைக் கேள்
இங்கும் அங்கும் அலையாக்
கண்களைக் கேள்
பாவைதனின் அன்பினைப்
பாசமாய்க் கேள்
பகல்இரவுபோல் வாழ்ந்திடும்
மனைவியைக் கேள்
எல்லோர் இதயத்திலும்
இடமொன்று கேள்
பெருகும் பொருளைச்
சிறிதாய்க் கேள்
வெஞ்சினம் வேண்டாவென்று
விரும்பியே கேள்
பருவம் தவறா
மழையைக் கேள்
தொடுவானம் செல்லக்
கடுகி வழி கேள்
உற்றுழி உதவும்
உன்னதத்தைக் கேள்
எட்டா அறிவைப்
பட்டெனக் கேள்
பேரறிவு பெற்றிடக்
கூரறிவு கேள்
பகுத்தறிவு பெற்றிட
நூலறிவு கேள்
என்றும் பிறர் மீது
சொல்லாதே கோள்....