சொல்லாமல் விட்ட நன்றிகள்.! பொள்ளாச்சி அபி
![](https://eluthu.com/images/loading.gif)
29.11.12-அன்று நமது நூல் வெளியீட்டு விழாவில் எனக்கு வரவேற்புரை வாசிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஆனால் காலத்தின் அருமைகருதி சற்று சுருக்கமாய் வாசித்து முடித்தேன்.
ஆனாலும் எனது நன்றியை முழுதாய் சொல்லிவிட்டதாய் எனக்குத் திருப்தியில்லை.அதனால் தோழர்களே..வரவேற்புரைக்காக தயாரிக்கப்பட்ட உரையை இங்கு உங்கள் பார்வைக்காக..!
--------------------
வாழ்த்துரை வழங்கத்தான் இங்கு,
வாய்ப்பெனக்கு அளிக்கப்பட்டது.
ஆனால்..எனது வாழ்த்துரை
கொஞ்சம் நன்றியுரை போலத்தான் இருக்கும்..!
அதனால்..அதனால்..
கூட்டத்தலைவரிடம் குத்தூசி
ஏதேனும் இருந்தால் சற்று
எட்ட வீசிவிடுமாறு
பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.!
நடிப்புக்கொரு சிவாஜி..,
எளிமைக்கொரு புதுவை ரங்கசாமி
என்பதுபோல,
வாழ்வின் அடையாளங்களாய் நம்மிடையே புழங்கும் பொன்மொழிகள் ஏராளம்.!
அதுபோல.. நட்புக்கொரு குகன்..
என்பது அந்தக்காலம்
நட்புக்கொரு அகன்
என்பது இந்தக்காலம்.!
காசுக்கு நன்றி சொல்வதெனில்
கணக்குப் பார்த்துவிடும்.
கடமைக்கு நன்றி சொல்வதெனில்
அன்றுடன் முடிந்துவிடும்..
நட்புக்கு நன்றி சொல்வதெனில்
நான்கு தலைமுறையும் பாராட்டும்.!
எழுத்தால் இணைந்தோம்
வார்த்தைகளாய் நின்றோம்.
வரிகள் கிடைத்தது.. எங்களுக்கு
எங்களின் குறையிதுவென..
எழுத்துக்கள் அச்சேறாத குறை-இதுவென
அழகிய முகவரிகள் கிடைத்தது.
இதற்கு முன்னர்..,எழுதியதெல்லாம் அச்சிலேறாதா..? என்று,
பார்க்கும்போதெல்லாம் பெற்றது சவலைப்பிள்ளையோவென
மனது அடித்துக் கொள்ளும்.!
இன்வெர்ட்டர் இருந்தும்-அது
நிரம்ப கரெண்ட் இல்லாதவனைப்போல..
நல்லவேளை..
எங்களின் குறையிதுவென
கட்சிக்காரரிடம் சொல்லவில்லை..
சொல்லியிருந்தால்..,
வாக்குறுதியோடு போயிருக்கும்..,!
கரெண்ட்காரனிடமும் சொல்லவில்லை.. சொல்லியிருந்தால்..- அது
எப்போ வரும் என்று
சொல்லியிருக்கவே மாட்டான்.!
கடவுளிடமும் சொல்லவில்லை..
ஆசி வழங்குவதாய்க் காட்டிய கை
அப்படியே நின்றிருக்கும்..!
நல்லவேளை..,
நண்பர் அகனிடம் சொன்னோம்..!
அவர் மனிதராயிருந்தார்..
அதிலும் மனிதத்தோடு இருந்தார்.!
எங்களின் எழுத்துக்கள் அச்சேறாத குறை-இதுவென
நண்பர் அகனிடம் சொன்னோம்..!
அதற்குப்பின்..,
கறாரான கந்துவட்டிக்காரனைப்போல எம்மிடமிருந்து கவிதைகளை வாங்கினார்.
எட்டுத்திசையிலுமிருந்த
எம்மை ஒன்றுகூட்டி
கறாரான கந்துவட்டிக்காரனைப்போல கவிதைகளை வாங்கினார்.
பெரும் போராட்டங்களுக்குப் பிறகு..!
யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும்போதும்
என்ற தலைப்பு.. இதனால்தான் அவருக்கு
மிகவும் பிடித்திருக்குமென்று முதலில் நினைத்தேன்.!
நடந்துமுடிந்த இறுதியுத்தம்..
கடக்க முடியா பேரிழப்புகளை
தந்து சென்றுள்ளது.
எல்லைகளுக்கு அப்பாலிருந்து
எழுப்பப்படும்
எம்நாட்டு முழக்கங்களில் பாதி வெறும் அரசியலானது..!
உண்ணாவிரதங்களும்,
ஆர்ப்பாட்டங்களும் சங்கிலிப்போராட்டங்களும்,
அறிக்கைகளும்..
அளித்த மனுக்களும்,
சாணக்கியத்தனமாய் அரசியல் நடத்துவதெப்படியென
கற்றுக் கொடுத்ததே தவிர
சமத்துவத் தீர்வுக்கு வழிகாட்டவில்லை..!
தனிநாடு பெற்றுத்தருவதாய்
சொன்ன வாக்குறுதிகளும்..
வாக்கு வங்கியில்
செலுத்தப்பட்ட ஓட்டுக்களாய்
மாறியதுதான் மிச்சம்.!
பதுங்கு குழியில் வாழ்வதும்
விதியென இருந்த
உதிரஉறவுகள் சொந்த மண்ணில்
உதிர்ந்து போன பின்னும்,
எவன் சொன்ன எதையும்
செய்யாமல் போன நிலையில்
இங்கெவனையும் நம்பத்தயாராயில்லை அவர்கள்..!
இனியென்ன செய்யவேண்டும்..? இறுதியுத்தத்திற்குப்பின்
இனியென்ன செய்யவேண்டும்..? என்ற நிலையில்தான்
யுத்தத்தின்சுவடாய் நான் மட்டும்போதும்
என்ற தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது தோழர்களே..!
வாய்ப்புக்கு நன்றி பாராட்டி அமைகிறேன்..வணக்கம்..!