பொய் பூத்தச் செடி..

அந்த வெற்றிகரமான வணிக நிறுவனர்
வயோதிகமானதால் தன் நிறுவனத்தை
வழிநடத்திச் செல்ல
நம்பிக்கையான ஒரு வாரிசை
தேர்ந்தெடுக்க நினைத்து...

தனது திறமையான ஊழியர்கள்
சிலரை அழைத்து
ஒவ்வொருவரிடமும்
ஒரு பூந்தொட்டியும்
ஒரே ஒரு பூஞ்செடி விதையும்
அவர்களிடம் கொடுத்து....

“நான் கொடுத்த பூந்தொட்டியில்
நான் கொடுத்த பூஞ்செடி விதையை
உங்கள் வீடுகளில் வளருங்கள்
இன்னும் ஆறுமாதங்கள் கழித்து
இங்கே கொண்டு வாருங்கள்
யாருடைய பூந்தொட்டி
பூத்துக்குலுங்குதோ நன்றாய்
அவரே நமது நிறுவனத்தின்
அடுத்த நிர்வாகியாக வருவார்.”

அவரவர் வீடுகளில் அனைவரும் வைத்து
நீருற்றி உரமிட்டு வளர்த்தார்கள்

அவ்வப்போது அவர்கள் கூடி
அவர்கள் வளர்க்கும் செடிகளின்
வளர்ச்சி பற்றி அளவளாவினார்கள்
ஆனால் நம் கதையின் நாயகன் அரிச்சந்திரனோ
எதுவும் பேசாமல் மௌனித்திருந்தான்
அவன் பூந்தொட்டியில் போட்டவிதை
உரமிட்டும் நீறுற்றியும் எவ்வளவோ முயன்றும்
எந்தப் பயனும் இல்லை... முளைக்கவேவில்லை
ஆறுமாதங்கள் கழித்து..
அனைவரும் தாங்கள் வளர்த்த பூந்தொட்டியை
அலுவலகம் கொணர்ந்தனர்...
அனைவருடைய தொட்டிகளிலும்
விதவிதமான பூஞ்செடிகள் கண்கவரும் பூக்களுடன்...
நம் அரிச்சந்திரனோ..களையிழந்த முகத்துடன்
செடி முளைக்காத காலித்தொட்டியுடன்...

அனைவருடைய தொட்டிகளையும்
வணிக நிறுவனர் வரிசையாகப் பார்வையிட்டு
அவர்களைப் பாராட்டிய வண்ணம் வந்தவர்
கடைசியில் காலித்தொட்டியுடன் இருந்த
நம் அரிச்சந்திரன்னைக் கண்டதும்
அதிர்ச்சியடைந்த அவர்...

அவனே தனது நிறுவனத்தின்
அடுத்த நிர்வாகி என அறிவித்து..
அதற்கான விளக்கமும் கொடுத்தார்...

“அன்பர்களே! உங்களிடம் நான் கொடுத்தவைகள்
அனைத்தும் கொதிநீரில் வேகவைத்த விதைகள்
அவைகளுக்கு இல்லை முளைக்கும் தன்மை
நான் கொடுத்த விதை முளைக்கவில்லை என்பதை
அறிந்துகொண்ட நீங்கள் அனைவரும்
அரிச்சந்திரனைத் தவிர
வேறு விதைகளை விதைத்து.....
பொய்யை விதைத்து சிரிக்கிறீர்கள்
ஆனால் வாய்மைதான் வெல்லும்”

‘நீங்கள் எதை விதைக்கின்றீர்களோ
அதைத்தான் அறுவடை செய்வீர்கள்
அந்த நிறுவனத்தின் அடுத்த நிர்வாகியாக
அரிச்சந்திரன் ஆன கதை இதுதான்...
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.... குறள்: 294

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (5-Dec-12, 3:10 pm)
பார்வை : 164

மேலே