இளமையும் போர்களமே! ( குழந்தைத் தொழிலாளர்கள் )

விளக்கை தேடும் விட்டில் பூச்சிகளாய்
விடியல் தேடின விண்மீன்கள்!
மேகத்தின் விழியே நீந்திய வெண்ணிலா
தன் மோகத்தில் கடலை சேர்ந்தது!
தென்னங்கீற்றில் வேய்ந்த கூரையின் வழியே
விடிந்த செய்தி சொன்னான் ஆதவன்!
இதோ விடிந்துவிட்டது, வானம் மட்டும் தான், வாழ்க்கையல்ல!

ஒட்டுப்போட்ட கம்பிளியின் ஓட்டை ஒவ்வொன்றும்
அன்னையின் அன்பை சொன்னது!
பத்துப்போட்ட கைகளின் காயம் ஒவ்வொன்றும்
தந்தையின் பாசம் சொன்னது!
இரவில் காய்ச்சிய கஞ்சி இவளுக்கு இனிப்பாய் இருந்தது!
இடுப்பில் கட்டிய ஆடை மட்டுமே இவளுக்கு பிடிப்பாய் இருந்தது!
செல்லரித்து போன ஓவியமாய் அன்னை!
செல்லாக்காசாகிப் போன தந்தை!

பள்ளிக்கூடம் போகும் வழிதான்
வீதி ஒன்றுதான் வித்தியாசம்......
பார்த்து பார்த்து வளர்த்த பவழம் பரிதவிக்கிறது
இன்று திப்பெட்டித் தொழிற்ச்சாலையில்!
முதலாம் வகுப்பில் படித்த கணக்கெல்லாம்
தீக்குச்சி எண்ணியே தீர்ந்து போனது
ஓட்டை பானையில் உற்றிய கூழாய்
ஒய்ந்துபோனது இவளின் கற்பனை இராஜியம்.

சேர்ந்து விளையாடிய தோழி சேர்ந்துவிட்டாள் நகரப்பள்ளியில்!
இவளுக்கும்தான் பதவி உயர்வு
எண்ணுவதில் இருந்து அடுக்குவது!
நித்தம் நித்தம் செத்துப் பிழைக்கும்
இந்த சின்னஞ்சிறு கிளியின் சிறகுகளை
உடைத்தது யார்? அவளின்
கனவுகளை கருகியது யார்?
இதோ!
அந்தி சாயிந்து விட்டது
ஆதவன் மறைந்தாலும் மறையாத போர்களமாய்,..
இவளின் வாழ்க்கை.......

எழுதியவர் : கௌரி சீனிவாசன் (5-Dec-12, 3:49 pm)
பார்வை : 462

மேலே