இதுவும் கடந்து போகும்
ஒரு நாட்டின் அரசன் தனது மதியூகி மந்திரியை அழைத்து , "நான் அசாதாரணமான சூழலில் இருக்கும் போது எனக்கு நம்பிக்கையூட்டும் விதத்திலும் , படிப்பினை ஊட்டும் விதத்திலும் ஏதேனும் ஒரு வாசகம் எழுதித் தாருங்கள் " என்று பணித்தார்.
அமைச்சரும் அவ்வாறே எழுதி திறந்து மூடும் வகையிலான ஒரு மோதிரத்தில் வைத்து அரசனிடம் அளித்தார். தாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் போது அல்லது மிகுந்த துன்பத்தில் உள்ளபோது மட்டும் திறந்து பாருங்கள் என்றார். சில வருடங்கள் கழிந்தது. அரசன் எதிரியிடம் தோற்று நாட்டை விட்டு காட்டு வழி பயணித்தார்.நாட்டைக் கட்டி ஆண்ட அரசன்,தோல்வியை நினைத்து மனம் புழுங்கினார். இந்த நேரத்தில் தன் கை விரலில் உள்ள மோதிரத்தைப் பார்த்தார். மந்திரி கூறியது நினைவுக்கு வந்தது. மோதிரத்தைத் திறந்து அதில் உள்ள சிறிய தாளில் எழுதியிருந்த வாசகத்தைப் படித்தார்.
THIS TOOL WILL PASS AWAY
இதுவும் கடந்து போகும்
இதைக் கண்டவுடன் மனதில் நம்பிக்கை ஓளி பிறந்தது. மீண்டும் படையைத் திரட்டி எதிரியை விரட்டி அடித்தார். கோலாகலமாக விழாவுக்கு ஏற்பாடு செய்தார். அரண்மனையை நோக்கி ஊர்வலமாக வந்தார். மனம் அபரிமிதமான மகிழ்ச்சியில் துள்ளியது .தன்னை வெல்ல யாரும் இல்லை என்ற எண்ணம் துளிர்விட்டது. போதை தலைக்கேறியது.
இந்தச் சூழலில் மோதிரத்தைத் திறந்து பார்த்தார். "இதுவும் கடந்து போகும் " என்பதைப் படித்தார். போதை இறங்கியது.மனம் சமநிலைக்கு வந்தது.
துன்பத்தில் துவளாது,மகிழ்ச்சியில் மயங்காது மனதை சமநிலையில் வைத்திருப்போருக்கு மன அமைதி நிச்சயம்.
"ஏது நிகழினும் நமக்கேன் என்றிரு "
----- என்றும் அன்புடன் ----
செயா ரெத்தினம்