நீ எது செய்தாலும் உன் மனசாட்சிப்படி செய்
நீதிமுறை வழுவாது கோலோச்சிய ஒரு அரசன் தனது தனி அறையில் "நீ எது செய்தாலும் உன் மனசாட்சிப்படி செய் " என்று எழுதி உள்ளே நுழையும்போது எளிதில் கண்ணில் படும்படி சுவற்றில் மாட்டியிருந்தார்.
உறவினர்கள், நண்பர்கள், மந்திரிகள் என்று யாராக இருந்தாலும், தயவு தாட்சண்யம் இன்றி, நீதிமுறைப்படி தீர்ப்பு வழங்கி வந்தார். இதன் காரணமாக அவரைச் சுற்றி உள்ளவர்களே அரசனுக்கு எதிராக ஒன்று சேர்ந்தனர். அரசனைத் தீர்த்துக்கட்ட உரிய காலத்திற்காகக் காத்திருந்தனர்.
இந்தச் சூழ்நிலையில் அரசன் உடல்நலம் குன்றி படுக்கையில் இருந்தார். அவருக்கு மருந்து கொடுப்பதற்காக தினமும் அரண்மனை வைத்தியர் சந்திக்க வருவது அறிந்த அரசனின் எதிர்ப்பாளர்கள்,அரசனை வைத்தியர் மூலம் கொல்ல நினைத்தனர். அரண்மனை வைத்தியர் மனதை மாற்றினர்.
ஒருநாள் விஷமருந்தை எடுத்துக்கொண்டு அரசனுக்கு புகட்டுவதற்காக அரண்மனை வைத்தியர் அரசனின் அறையை அடைந்தார்.
"நீ எது செய்தாலும் உன் மனசாட்சிப்படி செய் " என்ற வாசகத்தைப் படித்தார். வைத்தியரின் உள்ளுணர்வு தலை தூக்கியது . வைத்தியர் அரசனின் காலில் விழுந்து, தான் செய்ய இருந்த தவறுக்காக தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். அரசனும் அவரை மன்னித்து அனுப்பினார்.
நாம் எந்தவொரு செயலில் ஈடுபடும்போதும் இங்ஙனம் சிந்தித்து செயல்படுவது நம்மைத் தவறுகளில் இருந்து காக்க உதவும் .
---என்றும் அன்புடன் ---
செயா ரெத்தினம்