தெருமுற்றம் காய்கிறது(வருவான் அவன்)
பிள்ளை நெஞ்சினில்
அம்புகள்
எய்து
அழ வைத்தான்!
கருணைப்பிரதிகள்
எழுதிட
கண்ணீர்ப்பிறவிகள்
எழ வைத்தான்!
பிறவியின்
அழுத்தம் தாங்காமல்
அழுகிறான்!
யார் அவன்?
. . . .
தீயில் விழுந்த
செந்தேள்முகமெடுத்து
முகமூடி
ஆக்கிக்கொண்டான்!
அதினாலே
தேவாலய வடிவம்
தீப்புண்ணாய்
காட்சிதரினும்,
தெருமுற்றம்
திறக்காமலேயே
தன்
கருமுற்றும்
காயப்படுத்திக்
கொண்டான்!
. . . .
ஆலயமணிகள்அழுகிற
வேளையில்,
அர்த்தசாமமும்
அந்தி வேளையாய்
அவதரித்து,
சிவக்கிற
கண்ணீருடன்
சிறை
பூட்டிக்கொண்டான்!
யார் அவன்?
. . . .
இருளின்இலைகள் காய்ந்து,
கருகும் வேளையில்
கருமுற்றம்
திறந்து
கதிரவனாய்
பிறந்து வந்தான்!
. . . .
பிரபஞ்சமாய்
அவதரித்து
பிச்சைக்காரனாய்
என் பின்னே
நின்றிருக்கிறான்!
ஈயப்பாத்திரம்
ஏந்திக்கொண்டு
ஈதல் செய்ய
வந்திருக்கிறான்!
முல்லும் மலரும்
மிதித்து
இரத்தமும் சதையுமாய்
பாவியும்
அப்பாவியுமாய்
வந்திருக்கிறான்!
யார் அவன்?
எப்படி வந்தான்?
. . .
ஓ...!!!
மூடியமுற்றங்கள்
திறந்து
கிடக்கின்றனவே!
தேடிய வரியவரை
தேடிச்சென்றனவோ?
கோவில் வீடுகள்
இடிந்து
கிடக்கின்றனவே!
கூரைகள் மேய
விரைந்து
சென்றனவோ?
வேண்டி யிட்ட
தங்கமாலைகள்
மண்ணிலே
மண்டியிட்டு
மயிரென
கிடக்கின்றனவே!
தகரத்தட்டிலே
தானம் தேடிச்
சென்றனவோ?
பல்லக்கு கட்டைகள்
பாடையாய்
கிடக்கின்றனவே!
அது
பாவிகள் தூக்கி
போகும்
பட்டை மரமென்று
தெரிந்தனவோ?
ஓ...!!!
"தெருமுற்றம்
காய்கிறது"
வரம் கேட்டு
எங்கெங்கோதேடினேன்!
பிச்சைக்காரன் போல்
என்
பின்னேதான்
நின்றிருக்கிறான்
இறைவன்!....
நல்லோரை தேடி
என்றும்
வருவான் அவன்!...

