எழுத விடுங்கள்

எழுத விடுங்கள்
உனதும் எனதும்
உறவினில் திழைத்த கனவினில்
எழுத விடுங்கள்
அன்புடன் உன்னை நோக்குவதையும்
ஆவலுடன் நீயெனைப் பார்ப்பதையும்
இன்புடன் நாளைய உயர்விற்காய்
எமதிருப்பினை நிலை நிறுத்திட
ஏங்கிடும் எங்கள் ஏக்கங்களை
எழுத விடுங்கள்

சாதியம் எம்மை நொருக்கிடும்
இனபேதம் எம்மைச் சிதைத்திடும்
மொழி எமது உறவை குலைத்திடும்
இன்றைய காலம் ஒழிந்திட
எங்கள் நினைப்பினை
நோக்கினை
எழுத விடுங்கள்

இருமொழி உடைய நம் தேசம்
இருவேறாய் சிதைந்திட- சிதைத்திட
அழிந்தபின்- அழித்தபின்
உலகின் அங்கீகாரத்திற்காய்
உலாப் போவதேன்
எம்மை நாமே
அடகு வைப்பதேன்
எங்கள் இன்பம் குலைப்பதேன்
உன்னை நானும்
என்னை நீயும்
அதிகாரமில்லா அன்பினில்
அங்கீகரித்து வாழ
எனதெண்ணத்தை
எழுத விடுங்கள்.

அன்றெம் நேசம் குலைத்தவர் எல்லாம்
இன்றெம் உறவினை
புதுப்பிப்பதாய் வந்துபோகிறார்
சந்தை வேண்டும் அவர்க்கு
சிந்தையில் அதனை நிறுத்தியே
அமைதி வேண்டி நிற்கின்றார்
பிச்சை தந்தே நிற்கின்றார்
எமதுழைப்பில் நாம் வாழ்வோம்
உயர்வோம் என்றும் மகிழ்வோம்
எனும் என் நினைப்பை
என் முயல்வை
எழுத விடுங்கள்.


  • எழுதியவர் : அழ.பகீரதன்
  • நாள் : 10-Dec-12, 8:32 pm
  • சேர்த்தது : அழ.பகீரதன்
  • பார்வை : 134
Close (X)

0 (0)
  

மேலே