அப்பாவுக்கு மகன் எழுதுகிறேன்

----அப்பாவுக்கு மகன் எழுதுகிறேன்----

உன் ஒவ்வொரு பிறந்த நாளிலும்
உன்னை நினைக்க முடிகிறதே தவிர
உன்னை போல் இருக்க முடியவில்லை...

தமிழ் எழுத்துக்கள்
தலைமுறை பல கடந்தும்
நொறுங்காமல் இருக்கிறதே!
அது எழுத்துக்கள் அல்ல
தலைவா...
உன் எலும்புகள்.

உன் கையில் இருந்தது
மைவங்கியா ?
இல்லை
பீரங்கியா ?

உலகுக்கு எழுத்தும் கவிதையும்
ஆயுதமென உணர்த்தும் தமிழ்
உன்னிடம் இருந்தது
சர்வசக்தியாக...

அழகுக்கு முகதாடியும் மீசையும்
கன்னிகள் ஈர்க்க மழிக்கும் தமிழ்
என்னிடம் இருந்தது
சவரகத்தியாக...

கனகலிங்கம் மகனை
கவனிக்காமல்
கவிஞர் பலர்
பாரதியாகும்
பரீட்சை நிதம் எழுதுகிறோம்.

ஜனங்களின் கண்ணீர்
துடைக்காமல்
காதலுற்றும்
காதல் தோற்றும்
திராட்சை ரசம் பருகுகிறோம்.

சாதிகள் இல்லையடி பாப்பா
நாளை சாதி சான்றிதழ்
கொண்டுவாப்பா.

அக்னி குஞ்சொன்று கண்டேன்
தருமபுரி வரை அது
வெந்து தணிந்திட கண்டேன்.

ஒரு சந்தேகம் ஐயா!

ஒரே மிதியில்
உன் கவிதைகள்
தமிழ் சமூகத்தை
தவிடு பொடியாக்கிவிட்டதே!
இதை எழுதியதென்ன
யானை யுடைய கையா?

பல சவுக்கடி தரும்
ஒரு பாடல் எழுத
உனக்கு தேவைப்பட்டதென்ன
பானை நிறைய மையா?

உன் முறுக்கு மீசையை
ஒரு முறையாவது
என் கைகளால்
முறுக்கிவிட வேண்டுமென்று
ஆசைபடுகிறது அப்பா
இந்த மகனின் மனசு..

உன் முண்டாசை கட்டி கொண்டால்
வானம் முட்டிவிடும்.
உன் பாட்டை படித்துகொண்டால்
அச்சம் விட்டுவிடும்.

பொய்யா
புலவர் பெருங்கூட்டம்
அரசுக்கு பாட்டெழுதி
கையேந்தி பிழைத்தது.

அய்யா
கவிஞனென்ற கர்வம்
அது உன்னாலன்றோ
என்னுயிரில் முளைத்தது.

நீ இன்னும் மாய்ந்து போகவில்லை..
தீ இன்னும் தீர்ந்து போகவில்லை..

மனதி லுறுதி வேண்டும்
மகாகவியே உன் போல்
மனதி லுறுதி வேண்டும்.

என்ன செய்வது அப்பா...

உன் ஒவ்வொரு பிறந்த நாளிலும்
உன்னை நினைக்க முடிகிறதே தவிர
உன்னை போல் இருக்க முடியவில்லை...


----தமிழ்தாசன்-----

எழுதியவர் : ----தமிழ்தாசன்----- (11-Dec-12, 3:27 am)
பார்வை : 242

மேலே