தமிழர் விளையாட்டுகள்

தமிழர்களுக்கென்று தனித்துவமான விளையாட்டுகள் இருந்தன என்பதே மெல்ல மெல்ல தமிழர்களுக்கே மறந்து வருகிறது.

ஆங்கிலேயரின் ஆட்சி முறையினால் தமிழகத்திலும் தமிழர் சார்ந்த நிலங்களிலும் ஆங்கில விளையாட்டுகள் மேன்மை அடைந்து தமிழர் விளையாட்டுகள் கிராம விளையாட்டுகளாகத் தள்ளப்பட்டன. கிராமங்களிலும் அவை வலுவிழந்து தள்ளப்பட்டன.

அவை ஆண்களுக்கான சல்லிக்கட்டு, பாரி வேட்டை, சிலம்பம், சடுகுடு, ஓட்டம், இளவட்டக்கல், உரிமரம் ஏறுதல், வண்டி ஓட்டம், ஆடுபுலி ஆட்டம், மல், வில் பெண்களுக்கான தாயம் பல்லாங்குழி, தட்டாங்கல், நொண்டியாட்டம், கண்ணாமூச்சி, உயிர்மூச்சு, கிச்சு கிச்சு தாம்பலம், ஊஞ்சல் எனச் சொல்லலாம்.
நேற்றுவரை கிராமப்புறத் தெருக்களில் இருந்த தட்டாங்கல், நொண்டியாட்டம், கண்ணாமூச்சி என்பனவற்றை இன்று காண வில்லை.

அதற்குக் காரணம் நகர்ப்புறக் காற்றில் கலந்துவிட்ட அந்நியக் கலாசாரமேயாகும். கண் மூடித்தனமான ஆங்கில வழிக்கல்வியுடன் கூடிய நாகரிகம், கிராமத்துத் தமிழ்மரபுகளை இன்று எல்லாத் துறைகளிலும் அழித்து வருகிறது. ஆங்கிலம் சார்ந்த விளையாட்டு வேண்டாம் என்பது என் கருத்தல்ல. தமிழரின் விளையாட்டும் இருக்கட்டுமே. உலகெங்கும் வாழ்கிற எட்டு கோடிக்கு மேற்பட்ட தமிழர்கள் தனித்தன்மையுடன் கூடிய தமிழர் விளையாட்டை முன் னெடுக்க முடியாதா என்ன?

தமிழர் சுய அடை யாளத்தைப் பறிகொடுத்து இன்னோர் இனத்தின் அடையாளத்தைச் சுமக்க வேண்டுமா?
தமிழரின் விளையாட்டுகளைப் புறக்கணிப்பது நம்மை நாமே புறக்கணிப்பதற்குச் சமமானது.
சங்க காலத்தில் விளையாட்டை வினைத் தொழிலாகக் கொண்ட ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள். கடுவன் இள மள்ளனார், கருவன் மள்ளனார், ஞாழார் மகனார் மள்ளனார், மள்ளனார் ஆகிய நான்கு புலவர்களின் பெயர்கள், மள்ளன் என்னும் பெயரைக் கொண்டு முடிகின்றன. இவர்கள் மள்ளற் கலையைக் கற்பிக்கும் குடும்பத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.

ஆகவே அக்காலத்தில் இயற்றமிழிலும் உடல்பயிற்சிக் கலையிலும் வல்லவர்கள் இருந்திருக்க வேண்டும்.
தற்காலத்தில் உடல்பயிற்சி நிலையங்கள் இருப்பதைப் போல் சங்க காலத்தில் இருந்த தற்கான சான்றுகளாக போரவை, முரண்களரி போன்ற சொற்கள் பயிற்சிக் கூடங்களுக்காக இருந்திருக்கின்றன. பட்டினப் பாலையில் 'முரண்களரி' என்பது பயிற்சிக்கூடமே.

இன்றைக்குக் களரி என்ற சொல், கேரளாவில் இருக்கிறது. களரிப் பணிக்கர் என்பது உடல்பயிற்சிக் கலையைக் கற்பிக்கும் ஆசிரியரே.
சங்க கால இலக்கியக் குறிப்புப்படி 37-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் இருந்துள்ளன. அவற்றுள் சிலவற்றை மட்டும் விரிவாகக் காணலாம்.

1)ஊசல் எனும் ஊசலாட்டம் :
இது இப்போது ஊஞ்சல் எனப்படுகிறது. மரக்கிளைகளில் அல்லது வீடுகளில் உயர் விட்டங்களில் கயிறுகளால், கொடிகளின் தண்டுகளால் ஊஞ்சல் கட்டி அதில் அமர்ந்து ஆடி மகிழ்தல் ஆகும். இதில் பெரும்பாலும் பெண்களே பங்கேற்பர். சங்க காலத்தில் தலைவியை ஊஞ்சலில் வைத்து ஆடியவாறு பாடியதாகக் குறிப்புகள் இருக்கின்றன.

2)ஒரையாடல்:
மகளிர் ஆடும் ஒரு வகை விளையாட்டு, நண்டு, ஆமை என்பனவற்றைச் சிறு கோல் கொண்டு அலைத்து விளையாடும் விளையாட்டே ஒரையாடல் ஆகும். இன்றும் கடற்கரை, நதிக்கரை, குளக்கரை ஆகிய பகுதிகளில் சிறுவர்கள் ஊர்ந்து திரியும் சில பூச்சிகளைக் கோல் கொண்டு அலைத்து ஆடி மகிழ்வர்.

3)ஏறுகோள்
இது ஆடவரின் வீர விளையாட்டு. கூரிய கொம்புகளை உடைய எருதுகளை ஆயுதம் ஏதுமின்றித் தம் உடல் வலிமையால் இளைஞர்கள் அடக்குவர். இதுபற்றிக் கலித்தொகை, சிலப்பதி காரம் போன்ற நூல்களில் சொல்லப்படுகிறது. இதுவே இன்று சல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, எருதுக்கட்டு என உருமாறித் தற்காலத்தில் நிகழ்ந்து வருகிறது.

4)குதிரை ஏற்றமும் யானை ஏற்றமும் :
குதிரை, யானை மூலம் ஓடுவது, அசைவது போன்ற விளையாட்டு. குதிரை ஓட்டமும் இதன் வழியே வந்ததுதான். இதுவும் பழங்கால விளையாட்டே!

5)சிறுதேர்:
தேரினை உருட்டியும் இழுத்தும் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு. இதற்கு உருள், சகடம், தேர் எனப் பெயரிட்டு அழைத்தனர். கிராமங்களில் தென்னை மரங்களிலிருந்து விழும் பிஞ்சு இளநீர்க் காய்களின் மூலம் தேர் செய்து விளையாடுவர்.

6)நீர்விளையாடல்:
நீரிலே விளையாடுவது, நீச்சலடிப்பது, உயரமான இடத்திலிருந்து குதிப்பது, பட கோட்டுவது என்பன நீர் விளையாட்டு. இதனைப் 'புனலாடல்' என்பர். தமிழில் சங்க இலக்கியங் களிலும் சிற்றிலக்கியங்களிலும் இவ்விளையாட்டு, மிகச் சிறப்பான இடம் பெற்றுள்ளது.

7)பந்து:
பந்தெற்களம், பந்தடி மேடை இருந்த விபரங்களை சங்க இலக்கியங்கள் சான்று கூறுகின்றன. பந்து என்றே சங்க இலக்கியம் விளக்குகிறது. பந்துகளைப் பஞ்சடைப் பந்து, செம்பொன் செய்த வரிப்பந்து, பூப்பந்து என்ற வகைகள் இருப்பதாக அதன் மூலம் தெரிகின்றது. இருபத்தொரு பந்துகளைப் பயன்படுத்தி 'எண்ணாயிரம் கை' பந்தடித்த மானணீகை என்ற பெண்ணைச் சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது.

8)கழங்காடுதல்:
மகளிர் விளையாட்டுகளில் கழங்காடுதல் ஒருவகை. இதைச் சுட்டிப் பிடித்தல் என்றும் வழங்குவர். வீடுகளின் திண்ணைகளில் அல்லது சற்று மேடான பகுதிகளில் 'கழங்கினை' வைத்து (கழங்கு - சூது, கழற்சி விளையாட்டு, கழற்சிக்காய்) ஆடுவர். பொன்னாலான கழங்கினை வைத்துத் திண்ணைகளில் ஆடிய செய்தி, புறநாநூற்றிலும் பெரும்பாணாற்றுப்படையிலும் சொல்லப் படுகிறது. இப்பொழுது கழங்கிற்குப் பதில், சிறிய உருளை வடிவக் கற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

9)வட்டாடல்:
பண்டைத் தமிழர் விளையாட்டுகளில் சிறப்புற்றிருந்த ஒன்று வட்டாடுதல். (வட்டாடல்-வட்டை உருட்டிச் சூதாடுதல்) இதற்காக அரங்கம் இழைத்துக் காய்களை நகர்த்தி விளையாடும் இவ்வகை ஆட்டம், ஒருவகைச் சூதாட்டத்தை ஒத்தது. கல்லாத சிறுவர்கள் வேப்ப மரத்து நிழலில் வட்டரங்கிழைத்து நெல்லிக்காயை வட்டாகக் கொண்டு ஆடிய செய்தியை நற்றிணையில் காணலாம்.

எழுதியவர்: மாத்தளை சோமு

எழுதியவர் : (11-Dec-12, 12:18 pm)
சேர்த்தது : dkmalathi
பார்வை : 9478

மேலே