கொள்வோம் செல்வாக்கு

கொள்வோம் செல்வாக்கு
வே.ம.அருச்சுணன்
வாக்கு
உன்னைக் காட்டும்
நீ நல்லவனா, கெட்டவனா
என்பதை மறைக்காமல் உலகுக்கு சுட்டும்.

அருளாளர்
அளிப்பார் நல்வாக்கு
அதை ஏற்றால்
உனக்குச் செல்வாக்கு.

நல்லோர்
வழங்கிடும் வாக்கினிலே
நன்மைகள் பெருகிடும் உலகினிலே
சத்திய வாக்கு நிலைத்தாலே
பிறந்திடும் நித்தம் சுகவாழ்க்கை.

வாக்கு அளிப்பது எளிதாகும்
அதைக் காப்பது என்றும் அரிதாகும்
நியதியை உணர்ந்து
துல்லியமாய்ச் செயல் பட்டால்
ஏளனம் உன் வாழ்வில்
நிலைக் கொள்ளா.

தேர்தல் களத்தில்
உன் வாக்குப் பொன் வாக்கு
அரசியல்வாதிக்கோ உயிர் வாக்கு
உனக்குத் தருவார் பல வாக்கு
தாளம் தப்பாமல்
பாடுவார் கடவுள் வாழ்த்து.

அறிந்து வாக்களித்தால்
அமைந்திடும் நல்லரசு
அறியாமை வாக்கால்
அமைந்திடும் பேய் அரசு.

ஐந்து ஆண்டுகளுக்கு
ஒரு முறை வரும்
அதிர்ஸ்ட தேவதையை
முறையாய்க் கவனித்துப்பார்
அறிவுக்கண்ணைத் திறந்து பார்
ஆத்மாவைக் கேட்டுப்பார்
அடுத்துவரும் தலைமுறையை
நினைத்துப் பார்
நிலையான வாழ்வு உறுதியா
என்றே அலசிப்பார்.

பச்சிளங்குழந்தையின் முகத்தைப் பார்
பால் தரும் அரசை எண்ணிப் பார்.


வாக்கை அளிக்கும் முன்னே
ஒரு கணம்..... ஒரே கணம்
ஞானத்தை அள்ளித் தந்த
பத்துமலை முருகனை நினைத்துப் பார்
நடந்தவற்றை மீள்பார்வை செய்துப்பார்.

உன் கையைக் கொண்டுதான் நீ
கரணம் போடவேண்டுமல்லவா ?
தெளிவுடனே
அளித்திடு நல்வாக்கு
கொள்வோம் செல்வாக்கு....!

முற்றும்

எழுதியவர் : வே.ம.அருச்சுணன் (12-Dec-12, 8:33 am)
சேர்த்தது : வேமஅருச்சுணன்
பார்வை : 123

மேலே