இனியொரு பிறவி வேண்டாம் !!

கருவறை இருட்டிலும் காதல் செய்து
கண்டதும் கண்கள் கண்ணீரில் சிரித்தும்,
இடையிலே ஒருகரம் பிடரியில் மறுகரம்
இசையாகும் அழுகையிலே பாலூட்டி தாலாட்டி,

பெய்யும் மழையில் கரங்களைக் குடையாக்கி
பொய்த்து நனைத்தும் முந்தானையைத் துண்டாக்கி
பொய்யெனத் தெரிந்தும் ஏமாளி நானானேன்
பாசமே பொய்யென பின்புதான் கண்டேனே !!

கருவறையில் இடமேதும் கேட்கவில்லை, உன்வீட்டுக்
கழிவறை அருகினில் ஒருவோரம் போதுமே,
கருவறையில் கனத்தும் சுகமாய்தான் இருந்தேன்
கழிவறையில் கிடப்பதே சுமையானதோ உனக்கு ??

இலைச்சோறும் வேண்டாம் இமையாகவும் வேண்டாம்
இருகரம் வருமெனில் இறப்பிலும் சிரித்து
இச்சையுடன் இறைவனை வேண்டிக் கேட்பேன்
இனியொரு பிறவியும் எனக்கினி வேண்டாமென !!

எழுதியவர் : எம்.ஆர்.கார்த்திக் (15-Dec-12, 11:17 pm)
சேர்த்தது : Karthik.M.R
பார்வை : 149

மேலே