ஒரு சொட்டு மையிலிருந்து...

புல்லின் நுனியில்...
இளைப்பாறும் பனித்துளி...
வாழ்க்கை!

இறந்தும் தழுவிக் கொண்டிருக்கிறேன்
உன் மேனி தன்னை...
பட்டுப் பூச்சியாய்!

கவிதைக்கு கரு தேடி கசங்கிய
சிந்தையோடு நான்... எதிரிலே நீ...
மழலை பேசும் என் மகளே..!

கருநாகம் என்றார்கள்
தடியெடுத்தேன் தள்ளிவிட...
அட... உன் சவுரி...!

நீண்ட பயணம்... வழியில்...
வீழ்ந்த மரம்... விழுதாகின்றது...
விழப்போகும் எனக்கு...!

மொட்டை மாடி, வானம், நிலா,
தழுவும் தென்றல், மூடின கண்கள்...
திறந்தது நெஞ்சம்...!

உதிரும் இலைகள், இலைகளின்
உரத்தில் துளிர்க்கும் இலைகள்...
வாழ்க்கைச் சக்கரம்...!

இரவெல்லாம் ஓடியும் உறங்கவில்லை...
திருவிழாக் குதிரை...
ரங்க ராட்டினத்தில்...!

மழைக்காலம்... ஜன்னலோரம் நான்...
மனதில் அம்மாவின் நினைவலைகள்...
தேநீரும் பஜ்ஜியும் சூடாக...!

குளிர் இரவுகளில் உன் கதகதப்பு
எவ்வளவு இன்பம் தெரியுமா..?
என் போர்வையே...!

நீ... என் உச்சந்தலையில் ஓங்கிக்
கொட்டினாலும் வலிப்பதில்லையே...
மழையே...!

வீணையின் ஒவ்வொரு
தந்தியிலும் சுருதி பேதம்...
கோடையின் வெம்மை...!

அதற்குத் தெரியுமா இறந்தும்
அது பறக்கும் என்று?
இறகுப் பந்தாய்...!

என்னவள் அருகே வர
உடனே அணைத்தேன்...
சிகரெட்டை...

ஓய்ந்த மழை...
துளித் துளியாய் ஒழுகும்...
நிலவொளி...!

ஒரே வீட்டில்
தீவுகளாய் நாம்...
விஞ்ஞான வளர்ச்சி...!

நெடும்பயணம்... துணைக்கு
வழியெங்கும் உதிர்ந்த இலைகள்...
நானும் ஒரு நாள்...

காக்கைக்கும் குருவிக்கும் கல்யாணமாம்...
வண்ணத் தோரணமாய்...
வானவில்...!

எழுதியவர் : சூரிய விழி (19-Dec-12, 11:18 am)
பார்வை : 213

மேலே