சொந்தச் சொர்க்கம்

சொர்க்கத்தைக் காட்டலாம்
சுகங்களைத் திணிக்கலாம்
எனினும்
சில்லென்று மோதிச்செல்லும்
வயல்வெளிக் காற்றையும்
எல்லைவரை பச்சைகட்டியிருக்கும்
என்னூரின் நினைப்பையும்
அழிக்கமுடியுமா உன்னால்...?

எத்தனை உயிர்களை என்னூரில்
விட்டுவந்தேன் தெரியுமா..?

ஆசையாய் நான் குடியிருந்த எழில்வீடு-தினமும்
பூசையில் மலர்ந்திருக்கும் அருகிருந்த முருகன் கோயில்.
வற்றாத வளம் தரும் என்வீட்டுக் கிணற்றடி..
முற்றத்தில் பூத்திருந்து பனியில்
முகந்நனைக்கும் பூச்செடிகள்...

எத்தனை உறவுகளை
என்னூரில் விட்டுவந்தேன் தெரியுமா..?

இப்போது
என் அடிமனதை
பிசையும் விடயம்
ஒன்றே ஒன்று தான்.

நான் வரும்போது
ஆசையாய் நட்டுவைத்த மாமரம்
இப்போது காய்த்திருக்குமா.....?
இல்லை நான் வரட்டும் என்று சொல்லி காத்திருக்குமா....?

எழுதியவர் : (21-Dec-12, 11:04 am)
பார்வை : 197

மேலே