கதை கேளு..கதை கேளு...கள்ளச் சாராயக் கதை கேளு!

கதை கேளு…கதை கேளு...கள்ளச் சாராய கதை கேளு!
(கவிதை)

ஆண்டுக்கு மும்முறை அவசியம் நிகழும்
அமங்கலத் திருவிழாவாய்!
ஏழை உயிர்களை எளிதாய்க் கைப்பற்ற
எமராஜன் விட்ட ஏவுகணைத் தாக்குதலாய்!
அமுதென்ற பெயரில் ஆலகாலம் பரிமாறி
மரணம் மகசூலிக்கும் மானாவாரி விவசாயமாய்!
காலன் அரசுக்குச் சேரிகள் செலுத்தும் கலால் வரியாய்!
இங்கு..கள்ளச் சாராயச் சாவுகள்!
யார் சொன்னது?
சந்தோஷ வானில் சாவி சாராய பாட்டிலுக்குள் என்று!
எவன் இயம்பியது?
மரண மூலிகையில் மகிழ்ச்சிப் புஷ்பம் மலருமென்று?
எங்கு படித்தாய்?
உல்லாச வாகனத்தின் உந்து சக்தி அந்த
உயிர்க் கொல்லி திரவமென்று?
மூளைச் செல்கள் மரத்துப் போன முட்டாள் மனிதா!
உன் மழலைகளின் பொக்கைச் சிரிப்பை விடவா
மயக்கந் தரும் அந்த மண்டையோட்டு மழை நீர்?
உன் இல்லாளின் இலவம்பஞ்சு இடையை விடவா
இச்சை கூட்டும் அந்த இடுகாட்டுத் தீர்த்தம்?
சில அரசியல் ஆந்தைகளின் ஆதாய மஞ்சத்தில்
சில காவல் பூனைகள் கரண்சியைப் புணர
கள்ளச் சாராயக் குழந்தையின் ஜனனம்!
சங்கும் சேகண்டியும் கிலுகிலுப்பையாய்!
நெஞ்செலும்புக்கூடுகள் நடைவண்டியாய்!
கள்ளச் சாராய வேள்வியில் கருகிப் போன உயிர்ப் பூவை
கார்கில் போரில் துறந்திருக்கலாமே!
நாட்டுப் பற்றென்ற நற்பெயராவது மிஞ்சியிருக்கும்!
போதைச் சேற்றில் புதைந்து பிரேதமாவதை விட
பொல்லாங்குளைத் தட்டிக் கேட்டு இன்னுயிர் ஈந்திருக்கலாமே!
புரட்சி வீரனென்ற புகழாவது நிலைத்திருக்கும்!
அற்ப சுகத்திற்கு மரணம் குடித்து அமரத்துவம் பெற்று
அரசு மருத்துவமனை பிரேதக் கிடங்கின்
எண்ணிக்கையொன்றைக் கூட்டியதைத் தவிர
என்னத்தைக் கிழித்தாய்?
அதிகார அங்குசத்தை அரைஞானில் முடிந்துள்ள அரசே!
சட்டச் சாட்டையை சட்டைப்பைக்குள் பதுக்கியுள்ள சர்க்காரே!
உன் அங்குசம் உயிரிழந்த அர்த்தமென்னவோ?
உன் சட்டச் சாட்டை சுழல மறுத்த சங்கதியென்னவோ?
ஓ.. நீ
லஞ்சக் கான்சரிலும் ஊழல் எய்ட்ஸிலும்
உழன்று வரும் நோயாளியல்லவா..
உனக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

எழுதியவர் : முகில் thinakaran (22-Dec-12, 10:45 am)
சேர்த்தது : mukil dinakaran
பார்வை : 104

மேலே