கூவமே கல்லறையாய் போனதோ?
(சென்னை ஆவடி காமராஜ் நகர் கூவம் ஆற்றில் நேற்று முன் தினம் மாலை சுமார் 1 1/2 வயது பெண்குழந்தை பிணமாக மிதந்து கொண்டிருந்தது.குழந்தை நிஷாவை தாய் சரிதாவே கூவமாற்றில் வீசி எரிந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.தினத்தந்தி சென்னை 4/1/2013)
_______________________________________________
நெஞ்சத்தில் கொண்ட ஆசையால்
கொஞ்சமும் சிந்திக்க மறந்ததால்
மஞ்சத்தில் போட்ட ஆட்டத்தால்
பிஞ்சொன்றை பிடிக்காமல் சுமந்தாயோ?
ஐம்புலனும் இச்சைக்கு இசைந்ததால்
ஐந்து நிமிட சுகத்திற்கு அடிமையானாய்.
ஐந்தறிவு உயிரொன்றை பெற்றிருந்தாலும்
ஐயம் இன்று உணவளித்து வளர்த்திருப்பாய்.
ஆறறிவு பெண்பிள்ளை பிறந்துவிட
ஆறாமறிவை அடியில் போட்டு மிதித்துவிட்டு
ஆற்றில் தூக்கி எறிய துணிந்துவிட்டாய்.
ஆண்டவனின் சாபத்திற்கு ஆளானாய்.
ஒன்றரை வயது குழந்தையது- உன்னோடு
ஒட்டி கிடந்த மழலையது- கண்முன்னே
கொலை செய்த பாதகியே-பெண்ணினத்தின்
பெயர் கெடுத்திட பிறந்தாயோ?
சாக்கடையில் சிக்கி மூச்சு திணறி
சாவும் வரை வேடிக்கை பார்த்துவிட்டு
ஏதும் தவறு செய்யாத உத்தமிபோல்
எதார்த்த வாழ்க்கைக்கு திரும்பிவிட்டாய்.
தாய்ப்பால் உணவாக இருந்தபோது
தாய்பாசம் குறையின்றி கொடுத்தாயோ?
பால்காசுக்கு வழியின்றி போகையிலே
பச்சைப்பிள்ளை பாரமாகி போனதும் ஏன்?
ஓராயிரம் காரணங்கள் சொன்னாலும்
ஒன்றையும் ஏற்காது என் மனது.
அத்தனையும் நெருப்பிலிட்டு கொளுத்திடுவேன்.
அடியே நீ பெண்ணல்ல! பெண்'னே'யல்ல!!
தென்னம்பிள்ளை வெட்டக்கூட
திணறிப்போகும் பெண்மனசு
பச்சிளம்பிள்ளையின் பால்முகத்தை
பார்த்தும் வராதா பாசம் உனக்கு.
இதயம் இன்றி பிறந்தாயோ?
இல்லை அதில் ஈரம் வற்றி போனாயா?
கருப்பையே வேண்டாமடி உனக்கு
கடலும் கொள்ளாது உன் கொலை வெறிக்கு.
சேற்றிலே மலர்ந்தாலும்
செந்தாமரை அல்லவா?
கூவஆற்றிலே போட்டுச் செல்ல
குழந்தை என்ன குப்பையா?
பரிசுத்தமாகட்டும் அந்த ஆறு
பச்சைப்பிள்ளையின் உதிரத்தால்.
துர்நாற்றம் வீசட்டும் உன்மேனி
இரக்கமற்ற கொலை செய்த
இதயம் அழுகிப்போனதால்
நீ மலடியாய் இருந்தாலும் மகிழ்ந்துடுவேன்
மழலைகள் வாழட்டும் மண்மீது
நீ கிழவியாய் மாறிவிடு என் சாபத்தால்
குழந்தைகள் இருக்கட்டும் உயிரோடு.
நீ கொடுத்த நஞ்சுப்பால்
நெஞ்சை எரிக்கிறதாம்.
வான்தாயின் அமுதப்பால்
வாய் நனைக்க வருகிறதாம்.
உன் கருவறையில் இருந்ததால்
கறை ஏதும் இருக்குமென்று
குளிக்க வைத்து சுத்தமாக்க
தீர்த்த மழை வருகிறதாம்.
தாயில்லா குறைபோக்க
பூமித்தாய்மடி கொண்டு சேர்க்க
ஆற்றிற்கு அவசரமோ
அடித்துச் சென்று போவதற்கு.
கொஞ்சலை எதிர்பார்த்து
கெஞ்சிய குழந்தை உள்ளம்
தேவதைகள் தாலாட்ட
தென்றல் இசைமீட்ட
சந்தன வாசத்தில்
சந்தோசமாய் உறங்கட்டும்