பெண்ணே, நீ ஒரு சினிமாவுக்குப் போகிறாய் என்று வைத்துக்கொள்வோம்...
பெண்ணே,
நீ ஒரு சினிமாவுக்குப் போகிறாய் என்று வைத்துக்கொள்வோம் ! படத்தைப்பற்றி உனக்கு யாதொரு முன்கருத்தும் இல்லை என்றும் வைத்துக்கொள்வோம் ! இந்த நிலையில் நீ என்ன செய்கிறாய் ....டிக்கெட் வாங்குகிறாய் ! டிக்கெட்டை இப்படி அப்படி திருப்பிப் பார்க்கிறாய், டிக்கெட் கொஞ்சம் சுமாராகத் தானிருக்கிறது. மினுங்கும் தாளில் அது இல்லை, கண்ணைக்கவரும் வண்ணப்படங்கள் அதில் அச்சிடப்படவில்லை, மேலும் அந்தட் டிக்கட்டை உனது தோழியரிடம் காட்ட உனக்கு கௌரவக் குறைவாக இருக்கிறது, அடுத்து தியேட்டர் ! தியேட்டரும் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை ! குஷன் இருக்கை இல்லை, கோக் டின்னை வாகாகச் சொருகும் தாங்கிகள் அதில் இல்லை, அதில் ஓடும் AC யில் உனது பற்கள் தந்தியடிக்கவில்லை, தேகம் நடுநடுங்கவில்லை, எதோ கொஞ்சம் துப்புரவாக இருக்கிறது, ஆனால் அதுமட்டும் உனக்குப் போதாதே ! மேலும், நீ பார்க்கவந்த படமும் ஒன்றும் " மெகா ஸ்டார்கள் " நடித்த " மெகா பட்ஜெட் " படமில்லை, படத்தின் செலவு குறைவுதான். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட லோ பட்ஜெட் படத்துக்குப் போனேன் என்பதையே நீ அருவருக்கிறாய் ! இங்கேயும் உனது தோழிகளின் கேலி மனதை உறுத்துகிறது ! சரி .......
இதே நீ, இன்னொரு படத்துக்குப் போகிறாய் ! டிக்கெட் கண்ணைப் பறிக்கிறது ! டிக்கெட்டோடு கூடவே சாக்லேட் எல்லாம் வைத்துத் தருகிறார்கள், தியேட்டர் சொல்லவே தேவையில்லை, கண்ணுக்குத் தெரியாத இமயமலையை தியேட்டருக்குள் எழுப்பி விட்டது போல அவ்வளவு குளிர் ! இருக்கும் பல்லெல்லாம் உதிர்ந்துவிடுமோ எனுமளவு குளிர் ! இருக்கை குஷனோ குஷன் ! அமர்ந்தால் பொதக்கென்று உள்ளே போய்விடலாம், அப்படியே தூங்கக்கூட தூங்கி விடலாம் ! படத்தின் பட்ஜெட் ....இதுவரை இந்திய சினிமாக்களிலேயே இல்லாதவொரு பட்ஜெட் ! வெளிநாட்டையே கொண்டுவந்து கண்முன் நிறுத்துகிறார்களாம் ! கதாநாயகனுக்கு மட்டும் பல கோடி சம்பளமாம், கூடவே தெலுங்கு ஏரியா காப்பிரைட் வேறு ! இந்த மாதிரி ஒரு காஸ்ட்லியான படத்துக்குப் போனேன் என்று உனது தோழியரிடம் சொல்லிக்கொள்ள மனம் துடிக்கிறது !
நிற்க ......
இப்போது படம் போடுகிறார்கள் ! அந்தச் சுமாரான தியேட்டரின், சுமார் பட்ஜெட் படம் தொடங்குகிறது, படம் உன்னை நிமிர்ந்து உட்கார வைக்கிறது, சில இடங்களில் நீ புன்னகைக்கவும் செய்கிறாய் , சில இடங்களில் நீ உன்னையறியாமல் வாய்விட்டுச் சிரித்தும்விடுகிறாய், சில இடங்களில் நெகிழ்கிறாய், சில இடங்களில் யாரும் பார்க்காத வண்ணம் நாசுக்காய் கைக்குட்டையில் உனது கண்ணைத் துடைத்துக்கொள்கிறாய், சில இடங்களில் படத்தின் கதாபாத்திரத்தோடு அப்படியே ஒன்றிவிடுகிறாய் ......படம் முடிந்ததும் திருப்தியாக வெளியே வருகிறாய் ! சரி ....
இப்போது உனது காஸ்ட்லியான சினிமாவுக்கு வருவோம், படம் தொடங்குகிறது, உனது முகம் மரக்கட்டை போல இருக்கிறது, படம் தொடர்ந்து ஓடுகிறது உன்னில் எவ்வித உணர்வுமில்லை, தொடர்ந்து சப்பென்று சாணிமாதிரி படம் ஓடிக்கொண்டேயிருக்கிறது. படம் முடிந்து வெளியே வரும்போது உனக்கு மண்டை இடி இடியென்று இடிக்கிறது ! உக்ப் என்று பெருமூச்சு ஊதுகிறாய் ! ( அக்கன்னா இத்தளத்தில் வருவதில்லை )
இப்போது இதனால் நீ அறியப்படும் நீதியாதெனில்
" படம் பார்க்கப் போனால், படத்தை மட்டும் பார் " என்பதே !
மேலும், மேலே படம் படம் என்று சொல்லப்பட்டது திரைப்படத்தை மட்டுமல்ல, உனது திருமண வாழ்க்கையையும் தான் !
" நான் காஸ்ட்லியான தியேட்டரில் நல்ல சினிமா பார்ப்பேனாக்கும் " என்று நீ இப்போது உட்டாலக்கடியாக சிந்திக்கிறாய் தெரிகிறது ! அந்தச் சினிமாக்களுக்கு எல்லாம் முன்கூட்டிய விமர்சனம் கிடைத்துவிடும் ! அதனால் உஷாராக நீ நல்ல சினிமாவை காஸ்ட்லியான தியேட்டரில் பார்த்துவிடலாம். ஆனால் தாம்பத்தியச் சினிமாவுக்கு முன்கூட்டிய விமர்சனம் கிடைக்காது. அந்தத் திரைப்படத்தை உள்ளே சென்று பார்த்து முடிந்ததால்தான் அது நல்ல படமா ? மொக்கைப் படமா ? என்பது தெரியும். மேலும், இங்கேயுள்ள ஒரு சமுதாயக் குறைபாடு யாதெனில், " ஒரு வாழ்க்கைக்கு ஒரு திரைப்படம் மட்டுமே " என்பதாகும் !
ஆகவே பெண்ணே, டிக்கெட்டையும், தியேட்டரையும் பார்த்து படம் பார்க்க முடிவு செய்யாதே !