**என்ன எழுதுவது** இது கவிதையல்ல , கட்டுரையுமல்ல ......
**என்ன எழுதுவது**
இது கவிதையல்ல , கட்டுரையுமல்ல ... சிறு புலம்பல் அவ்வளவே...
இது வரையில் எழுதி இருக்காத , எழுத நினைத்ததுமில்லாத ஏதோ ஒன்றை எழுத நினைத்து எழுதத் தொடங்கியும் விட்டேன்.. ஆனாலும் எப்படி இருந்தாலும் , இதற்கு முன்பு என்றோ எழுதிய ஏதோ ஒன்றின் சாயல் தொற்றிக் கொண்டு விட்டது...
யோசனைகள் ஏதுமின்றி , இலக்கு என்று ஒன்றும் ஒன்றி , பேனா நகர்ந்து கொண்டிருந்தது டைரியில்..
எழுதி முடிக்கும்போது நான் கண்டு பிடித்து விடக் கூடும் இந்தக் கட்டுரையின் கரு என்னவென்பதை , என்று நம்புகிறேன் தான்..
சமையற்கட்டில் இருந்து அவ்வப்போது கேட்கும் கரண்டி சத்தமும் , ஃபேன் காற்றில் அடித்துக் கொள்ளும் குமுதம் புத்தகத்தின் தாள்களின் சத்தமும் பல நேரங்களில் இடைஞ்சலாகவும் , வெகு சில நேரங்களில் துணையாகவும் இருந்து விடுகிறது..
என்றோ எழுதி வைத்திருந்த ஏதோ ஒன்றை , தேடப் போய் , நீண்ட நேரமாய்த் தேடித் தேடி , கண்டு பிடித்தே விட்டேன் , அதற்கு முன்பு தேடிக் கொண்டிருந்த ஒன்றை...
நீண்ட நாட்களாக , தீர்ந்து போகவே மாட்டேன் என்கிறதே என்று யோசித்துக் கொண்டே இருந்த பேனா , இந்தக் கட்டுரையின் நடுவே தீர்ந்தே விட்டது...
நல்லது...
புது பேனா கிடைத்தாகி விட்டது...
அச்சோ...இவ்வளவு நாட்கள் என்னோடே இருந்த என் பழைய பேனாவைப் பிரிந்து போனேனே...
சொல்ல வந்ததை நேரடியாக கொஞ்சமும் , சுற்றி வளைத்து கொஞ்சமும் , பல சொந்த அனுபவங்களையும் , சில நொந்த அனுபவங்களையும் , கூடவே இரண்டு தத்துவங்களையும் சேர்த்து , ஆச்சு , ஒன்றை எழுதியாச்சு...
யோசித்து யோசித்துப் பார்க்கிறேன் , இந்தக் கட்டுரையின் மூலம் நான் என்ன தான் சொல்ல வருகிறேனென்று...
ஆனால் ஒரு வகையில் கட்டுரையின் இறுதி வரையில் யோசித்துக் கொண்டே இருப்பது வசதியாய் இருக்கிறது..
இது , எப்படி , என்னெவென்று உருமாருமென்று நான் முடிவு செய்ய வேண்டியதில்லை....அதுவே முடிவு செய்து கொள்ளட்டும்..
எழுதுவது மட்டுமே என் வேலை...உருவாவதும் உருமாறுவதும் எழுத்துக்களின் வேலை..
எழுதியதை பல வடிவங்களில் மாற்றி எழுதி , தலைப்பை சில முறை திருத்தி எழுதி .., இதோ எழுதி முடித்து விட்டேன்...
இறுதியில் அறிந்து கொண்டேன் , , இது கவிதையல்ல .. கட்டுரையுமல்ல ...சிறு புலம்பல் அவ்வளவே என்று...
- கிருத்திகா தாஸ்...