ரங்கநாதன் கவிதைகள் சேதாரம் :- காட்டாற்று மடுவு தனில்...
ரங்கநாதன் கவிதைகள்
சேதாரம் :-
காட்டாற்று மடுவு தனில்
அல்லாடுஞ் சிறு கல்லானேன்
குருவியணில் ஓணானைக்
குறிவைத்து எறிகிறார்கள்
சிதைந்துச் சீரழிந்த என்
கதையறியாச் சிறுவர்கள்
மிதித்துத் துவைக்கிறது
மாடாடெருமைகளும்
எடுத்துத் துடைக்கிறது
மலங்கழிக்க வந்த சனம்
ஈயெறும்புக் கொசுகளிங்கே
இராப்பகலாய் மாநாடு
சேதி தெரியுமா
மின்னல் இடி புயல் என்னை
மோதி மடிந்ததுண்டு
இரையெடுத்த மலைப்பாம்பு - என்
இடுக்கடியில் அயர்ந்திருக்க
வேங்கை புலி சிங்கம் எல்லாம்
வந்தமர்ந்து வெயில் காயும்
முகில் கூட்டம் என்னெதிரே
ஒயிலாட்டம் போட்டதுண்டு
அம்புலிகள் வடமிழுக்கும்
என் மேனியிலே
அழகு நிலாத் தேர் நடக்கும்
சொன்னால் நம்புகள்
வனத்தைத் தொட்டு நின்ற
மலை முகட்டுக் கரும்பாறை நான்
முன்னாளில்
------ நரியனுர் ரங்கு செல் : 9442090468