எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனதிற்குள் புது மழை சிகப்பு சூரியனை சிறை பிடித்திருந்தது...

மனதிற்குள் புது மழை


சிகப்பு சூரியனை
சிறை பிடித்திருந்தது மேகம்.

மனங்குளிரும்
மழைக்காலம் அது.

வாசல் தெளிப்பதுபோல்
வானம் தெளித்தது.

மெல்லிய காற்று
சொல்லியது வெளியே வாஎன்று.

வெளிர் வெளிச்சத்தில்
குளிர் காற்றோடுகலக்க
வெளியே வந்தேன்.

தெருவெல்லாம்
தீபாவளி கடைகள்.

வண்ணவிளக்குகளின் வேடிக்கையும்
விலைகுறைப்பு வாடிக்கையும்
களைகட்டவைத்தது விற்பனையை.

இரவு பணிக்கு அன்று
இருட்டு முன்பே வந்தது.

முட்டும் மேகங்கள்
கொட்டுமோ என
எண்ணியது போலவே
மின்னியது மின்னல்.

வீட்டை நோக்கி
விரைவாக நடந்தேன்.

அடைமழை
கடை விரித்து – என்
நடைக்கு
தடை போட்டது.



ஒர் மரத்தின்
ஒரம் ஒதுங்கி நின்றேன்.

வெப்பத்தின் எதிரி
தெப்பமாய் தெருவில்
தேங்கியது.

திரும்பி பார்த்தேன்
திரை மேகத்தில்
மறைந்திருந்த திங்கள்
தரையில் சற்று
தள்ளி நிற்பதைபோல்
தெரிந்தது அந்தமுகம்.

குளிர்ச்சிக்கே குளிர்ச்சி
தந்த - அந்த முகத்தை
தரிசித்தபடியே இருந்த
தருணத்தில்.

அருகிலிருந்த குடிசையிலிருந்து
இருகுரல்கள் உள்ளகுமறலாய்

“ஊரெல்லாம் கொண்டாட்டம்.
நமக்கு ஏன் திண்டாட்டம்.
உண்ண இனிப்பும் இல்லை.
உடுக்க உடுப்பும் இல்லை.
நாளெல்லாம் உன்னோடு குப்பை எடுக்கிறேன்
நல்லநாளில் கூட பழையதை கொடுக்கிறாய்.
ஏன் அம்மா.
நான் என்ன பாவம் செய்தேன்”
ஆதங்கமாய் கேட்டது
அந்த மழலை குரல்.

“பாழாய் போன மழை
வீணாய் கெடுத்தது நம் பிழைப்பை.
நீ செய்த புண்ணியம் நான் இருக்கிறேன்.
நான் செய்த பாவம் நீ தவிக்கிறாய்”
அந்த தாயின்
அழுகுரல் கேட்டது.




பேசிய வார்த்தைகள்
பெரிதாய் மனதை அரிக்க
எட்டி பார்த்தேன்
கட்டி பிடித்து
கொட்டி கொண்டிருந்தாள்
அழுகையை
அந்த தாய்.

அச்சிறுவனோ
அழுத தாயின்
கண்ணீரை துடைத்தவாறு
“அழாதேம்மா – எனக்கு
புதுஉடுப்பும் வேண்டாம்.
சிறுஇனிப்பும் வேண்டாம். – உன்
சிரிப்பு போதும்” என்றான்.

பிழைப்பை கெடுக்கும்
மழை வேண்டாமென்று
வருண பகவானை
வேண்டிக்கொள்ள
விண்ணை பார்த்தேன்.

வானம்கூட
இடியை வெடியாய்
வெடித்துக்கொண்டிருந்தது.
மின்னலை மத்தாப்பாய்
கொளுத்திக்கொண்டிருந்தது.

என்ன செய்யலாம்
என்று எத்தனிக்கும்
முன்பே –
முன்னே அந்த முகம்
“அம்மா சற்று வெளியே வாருங்கள்” என்றது.
அழுகையை துடைத்தவாறு
அருகே வந்த
அந்த தாயிடம் தந்தாள்
ஆயிரம் ரூபாயை.


நெகிழ்ச்சியுடன் பார்த்தவளை
“மகிழ்ச்சியுடன் கொண்டாடு,
மகனோடு தீபாவளியை.
மறந்துவிடு மனவலியை” என்றாள்.

தாயின் கண்ணிலோ தீபாவளி
இல்லை இல்லை தீபஒளி.
ஏற்றி வைத்தவளை
போற்றுவதற்குள்
புறப்பட்டுவிட்டாள்.

பாரி
சாரி (சேலை)
கட்டி செல்வது
போலிருந்தது எனக்கு.

முன்னால் தெரிந்தது அவள் முகம்.
பின்னால் புரிந்தது அவள் அகம்.
இரண்டும் அழகானதால்
இதயம் அவளானது.

முடிவெடுத்தேன் – இனி
முடிந்தவரை தீபஒளி ஏற்ற.

வெளியே மழை அடங்கியது.
உள்ளே மழை தொடங்கியது
ஆம்
மனதிற்குள் புது மழை.




பதிவு : sougoumar
நாள் : 21-Oct-14, 1:01 pm

மேலே