எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வேலை உள்ள பட்டதாரி - சித்ரா எனக்கொரு எண்ணம்...

வேலை உள்ள பட்டதாரி - சித்ரா

எனக்கொரு எண்ணம் இல்லை சந்தேகம் என்று கூட சொல்லலாம்.
இதை ஒரு நீண்ட கேள்வியாக பாவித்து தங்கள் பதில்களை கருத்துக்களாக பதிவு செய்யலாம்.

படிப்பில் எத்தனையோ ரகம் இருந்தும், ஏன் பெரும்பாலோனோர் பொறியியல் துறையையே தேர்வு செய்கின்றனர்?

படிக்கும் போதே வேலை கிடைத்து விடும் என்ற நோக்கத்திலா?
சம்பளம் அதிகம் என்ற நோக்கத்திலா?
வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசையிலா?
அனைவருமே பொறியியல் படிக்கிறார்கள், அதனால் என் மகனோ/ மகளோ அதை படித்தால், வேலையும், கை நிறைய சம்பளமும் கிடைக்கும் என்று பெற்றோர்கள் கருதுகிறார்களா ?

காரணம் எதுவாக இருந்தாலும், அது முறையானதல்ல.

உண்மையில் ஒரு துறையை தேர்வு செய்து படிக்க, அதில் உங்களுக்கு ஆர்வமும் அறிவும்தான் இருக்க வேண்டும்.

அதற்காக, பணமும் கிடைக்காத, வேலை வாய்ப்பும் இல்லாத, துறையில் தங்களுக்கு ஆர்வம் இருக்கிறது என்று கூறி விடாதீர்கள் நண்பர்களே. அதற்கு என்னிடம் பதில் கிடையாது.

இப்போது ஒரு குழந்தையை "பெரியவனானதும் என்ன ஆகா வேண்டும்" என்று கேட்டால் உடனே அவன் வாயிலிருந்து வருவது பொறியியல் அல்லது மருத்துவத் துறை.

ஒரு குழந்தையின் மனதில், பசுமரத்தாணிப் போல் இந்த எண்ணங்கள் பதிந்து விடுகின்றன. அந்த எண்ணங்களை தாயோ, தந்தையோ, சமூகமோ விதைத்து விடுகின்றனர்.

என் பிள்ளை சார் சி.வி. ராமனைப் போல் விஞ்ஞானி ஆகா வேண்டும் என்று எத்தனை பெற்றோர்கள் நினைக்கிறார்கள்?

கப்பல் அல்லது விமானம் ஓட்ட வேண்டும் என்ற ஆசை பெரும்பாலும் யாருக்குமே ஏன் உதிப்பதில்லை?

அல்லது தலைமை சமையற்காரனாக ( ஆங்கிலத்தில்: Head chef ) ஆக வேண்டும் என்று யாருமே ஏன் நினைப்பதில்லை?

அதை எல்லாம் விடுங்கள்.. சர்கார் வேலை வாங்க வேண்டும் என்று நம்மில் எத்தனை பேர் நினைக்கின்றனர்? சொல்லுங்கள்.

Engineer உம், Doctor உம் நல்ல, பெருமையான துறைதான். அதை நான் நிச்சயம் மறுக்கவில்லை.
Engineer, Doctor எனக்கு ஆகத்தான் வேண்டும் என்ற உறுதியும் ஆசையும் உங்களுக்கு இருந்தால் அதனை தாரளமாகப் படிக்கலாம்.

ஆனால், என் கேள்வி என்னவென்றால், அந்த இரு துறை மட்டுமே உள்ளது போல் அதையே நாம் நாடி செல்லும் காரணம் என்ன?

பள்ளியும், கல்லூரியும் நம்மை அதற்காகவே தயார் படுத்தும் நோக்கம் என்ன?

உண்மையில் அந்த கேள்விக்கு விரிவான பதில் கிடைக்கவில்லை.

என் அறிவுக்கு எட்டிய வரை சில கருத்துகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். தங்களிடமும் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.

IAS, IPS, தாசில்தார் என்று இளைஞர்கள் ஆனால் என்ன?
நிச்சயம் புது எண்ணங்களும், திட்டங்களும் நீங்களே அமைக்கலாம். நாடு ஏன் இப்படி இருக்கு என்று குறை சொல்லாமல் நீங்களாக இந்தப் பணியில் அமர்ந்து ஏன் எதையும் முயற்சி செய்யக் கூடாது?

அதற்காக முதல்வன் படத்தில் வரும் அர்ஜுனைப் போல பெரிய பிரம்மாண்ட மாற்றங்களை ஒரே நாளில் ஏற்படுத்த முடியாது. ஆனால் நம் திறமையைக் கொண்டு நிச்சயம் ஒரு சின்ன மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதே என் கருத்து. ஒரு ரூபாய் எல்லாம் சேர்ந்து தான் நூறு ரூபாயாக ஆகிறது, அதுப் போலத்தான் இதுவும்.

சிறு வயதிலிருந்தே IIT IIM சேர்வதற்காக பயிற்சி எடுக்கிறோமே , IAS IPS காக பயிற்சி செய்தால் என்ன? சிந்தித்துப் பாருங்கள். கலெக்டர் வேலைங்க. கெத்தா இருக்கும்.

எப்படி படிக்க வேண்டும் என்று தெரியவில்லையா? பெற்றோர்களிடம் சொல்லுங்கள் , அவர்கள் நண்பர்களிடம் கேட்பார்கள். இணையதள உதவியை நாடுங்கள். அதை விட, உங்கள் ஆசிரியரின் உதவியை நாடுங்கள்.
மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதை மறவாதீர்கள்.

ஆழமாக சிந்தித்தால் நாம் இன்று இருக்கும் நிலைமைக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது ஆசிரியர்கள் தான். அந்த அருமைத் தொழிலை செய்ய நிச்சயம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
ஆனால், அந்த வேலையே கொஞ்ச காலத்தில் அழிந்து விடும் போலிருக்கிறது.

ஜனாதிபதியாக இருந்த "சர்வேப்பள்ளி ராதாகிருஷ்ணன்" கூட ஜனாதிபதியாக இருப்பதை விட ஆசிரியராக இருப்பதையே பெருமை என்று கருதினார். அந்த மண்ணில் பிறந்தவர்கள் தான் நாமும்.

அந்தத் தொழில் ஒரு ஈர்ப்புக்கு உள்ளாகாமல் இருப்பதற்கு காரணம், சம்பளமும், ஒரே பாடத்தை எத்தனை முறைதான் எடுப்பது என்ற விரக்தியும், என்பது என் கருத்து. பணம் தரும் தொழிலைவிட, மன நிம்மதி வேண்டும், நாட்டிற்கு எதாவது செய்ய வேண்டும் என்று நினைப்போரிருந்தால், "ஒரே பாடமாக இருந்தாலும் பல விதமான மாணவர்கள்" என்ற தொலைநோக்கு பார்வை உங்களுக்கு இருந்தால், இந்தத் தொழிலை கருத்தில் கொள்ளலாம்.

ஏனென்றால் மாணவர்கள் அதிகம் இருக்கும் நம் நாட்டில், ஆசிரியர்கள் மிகக் குறைவாம். PTR எனப்படும் Pupil-Teachers Ratio (அதாவது, மாணவர்களுக்கும் ஆசிரியருக்குமான எண்ணிக்கை விகிதம்) 53.2 % (by year 2012) இருப்பது வருத்தத்திற்கு உரிய நிலைமைதான்.

விரிவாகப் படிக்க http://www.telegraphindia.com/1120429/jsp/7days/story_15431872.jsp#.VGMdB_mUdq0

கல்லூரியில் பட்டம் பெற்றவரா நீங்கள்? எந்தப் பட்டம் பெற்றிருந்தாலும் சரி, உங்களுக்கு ஆசிரியாராவதில் விருப்பமிருந்தால் www.teachforindia.org

Engineering Easy என்று அதனைப் படிக்க வேண்டாம்.
சுலபமான வேலை என்று எதுவுமே இல்லை.
வெற்றிப் பெற கடின உழைப்பு கண்டிப்பாக தேவை.
Fast food காலத்திலும் வெற்றி slow வாகத்தான் வரும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

Engineering படிப்பிலே மென்பொருள்(ஆங்கிலத்தில் : Software Engineering) துறைக்கும் மட்டுமே ஆர்வம் அதிகம் செலுத்துகிறோம்.
எண்ணெய் துறை (ஆங்கிலத்தில் : Petroleum Engineering),
(விரிவாகப் படிக்க: http://careerride.com/view.aspx?id=413)
உயிரித் தொழில்நுட்பம் (ஆங்கிலத்தில் : Bio Technology) எனப்படும் துறை,
கடல் துறை (ஆங்கிலத்தில் : Marine Engineering)
(விரிவாகப் படிக்க: http://careerride.com/view.aspx?id=413, http://www.oureducation.in/Course-details/Marine-Engineering/59/41)
ஆகிய துறைகளில் எல்லாம், நாம் எண்ணங்களை செலுத்துவதே இல்லை. வேலை வாய்ப்புகளும், எதிர்காலமும் அந்த துறைகளுக்கும் அதிகமாகவே இருக்கிறது.

என் கருத்து யாதெனில், உங்கள் ஆசைகளை முடிவு செய்ய அதிக துறைகளைப் பற்றி உங்களுக்கு இயற்கையாகவே தெரிந்து இருக்க வேண்டும். இரு விரலில், ஒரு விரலை தொட வேண்டும் என்று நினைக்காமல், கொஞ்சம் உங்களுக்கு இருக்கும் வாய்ப்புகளை சற்று அலசி ஆராய்ந்துப் பாருங்கள். தங்கள் திறமையும், ஆசையும் எதில் உள்ளது என்று உணருங்கள். அது அவ்வளவு நேரம் எடுக்காது நண்பர்களே.

இந்தப் படிப்பைப் படிக்க, அவ்வளவு செலவாகும், இந்தப் படிப்பைப் படிக்க, இங்கே கல்லூரி இல்லை, இதைப் படித்தால் வேலை கிடைக்காது, என்று கதை கூறாமல், அதன் உண்மை விவரங்களை இணையத்தளத்திலோ, இல்லை மற்றவர்களிடம் கேட்டோ, தெரிந்து கொள்ளலாமே. பாண்டித்யம் (Scholarship) இருக்கிறதா? வெளிநாட்டில் படிக்க உதவி ஏதும் செய்வார்களா? என்று தெரிந்து கொள்ளுங்கள். பிறகு முடிவு செய்யுங்கள்.

மந்தை ஆடு போல் இருக்கும் வாழ்கையை, நம்மில் எவருமே விரும்புவதில்லை. தனித்துவம் பொருந்தி வாழ வேண்டுமெனில், புதிதான விடயங்களை செய்வது அவசியம் ஆகிறது.

மற்றவர்களைப் போல இல்லைங்க, இவரு சுயமா சிந்திச்சு பெருசா வளந்தாருன்னு, சொன்னா பெரும தானுங்கள.

கருத்துக்கள் என்னுடையது முடிவுகள் உங்களுடையது. கிருஷ்ணன் மகாபாரதத்தில் (தொலைக்காட்சித் தொடரில்) சொல்வது போல சிந்தித்து செயலாற்றுங்கள் :)

என் கருத்துகளில் ஏதேனும் பிழை இருந்தால், அதை உங்களின் கருத்துக்களில் பதிவு செய்யலாம்.

மேலும் இந்த படைப்பு வெறும் வாரத்தையோடு நின்று விடாமல் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதைக் கருத்தில் கொண்டு தங்களுக்கு தெரிந்த வேலை வாய்ப்புகளைப் பற்றியும் அதன் எதிர்காலம் பற்றியும் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.

நேரம் ஒதுக்கி படித்ததற்கு நன்றிகள் :)

பதிவு : சித்ரா
நாள் : 4-Dec-14, 1:58 pm

மேலே