எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

துரைப்பாக்கத்தில், பட்டாக்கத்தி முனையில் பெண்ணிடம், 14 சவரன் பறித்த...


துரைப்பாக்கத்தில், பட்டாக்கத்தி முனையில் பெண்ணிடம், 14 சவரன் பறித்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், மின்சார ரயிலில் ஐ.டி., பெண் ஊழியரை தாக்கி நகையை பறித்ததுடன், அந்த பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து, மர்மநபர் தண்ட வாளத்தில் துாக்கி வீசிய சம்பவம், பீதியை ஏற்படுத்தியுள்ளது.

அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனியை சேர்ந்தவர், நாகராஜன். அவரது மனைவி, முனீஸ்வரி, 26; தாம்பரத்தில் உள்ள ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். நாகராஜன், பாரிமுனையில் வேலை பார்க்கிறார்.

வாலிபருடன் போராட்டம்

நேற்று முன்தினம், இரவு 9:00 மணியளவில், பணி முடித்து முனீஸ்வரி, பேருந்து வேலை நிறுத்தம் காரணமாக, கணவரின் ஆலோசனைப்படி, தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு, மின்சார ரயிலில் பெண்கள் பெட்டியில் அமர்ந்து வந்தார். ரயில் கோட்டை ரயில் நிலையத்தை தாண்டி, கடற்கரை ரயில் நிலையத்திற்கு முன்னதாக வந்தபோது, 25 வயது மதிக்கத்தக்க வடமாநில ஆசாமி ஒருவர், முனீஸ்வரியை கத்திமுனையில் மிரட்டி, 5 சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டார்.

பின், முனீஸ்வரியை ரயிலில் இருந்து தண்ட வாளத்தில் துாக்கி வீசி விட்டு தப்பியோடி விட்டார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

சம்பவம் குறித்து, முனீஸ்வரி கூறியதாவது:

பெண்கள் பெட்டியில் பயணித்த என்னுடன், மேலும் ஐந்து பேர் பயணித்தனர். என் கணவரின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருந்த போது, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், கத்தியை காட்டி மிரட்டி, என் கைப்பை, அலைபேசியை பறிக்க முயன்றார்.

அப்போது என்னுடன் பெட்டியில் இருந்த மற்ற பெண்கள், தாங்கள் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டுக் கூட எழுந்திருக்கவில்லை; உதவிக்கு வரவில்லை. அந்த வாலிபருடன் போராடிய நேரத்தில், கழுத்தில் இருந்த 5 சவரன் தாலியை பறித்துக் கொண்டார். அதற்குள் நாங்கள் இருவரும், பெட்டி வாசல் அருகே வந்துவிட்டோம். சுதாரிப்பதற்குள், என் இரண்டு காலையும் பிடித்து, ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளி விட்டார். இவை அனைத்தும், கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்டன.

உயிர் பிழைத்தேன்

நான் அந்த வாலிபருடன் போராடிய சத்தத்தை, அலைபேசி வழியாக என் கணவரும் கேட்டுக்கொண்டே தான் இருந்தார். ரயிலில் இருந்து துாக்கி வீசப்பட்டதில், என் இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. ரயில் மெதுவாக போய்க் கொண்டிருந்ததால், நான் உயிர் பிழைத்தேன். புதரில் விழுந்த என்னால் எழுந்து நடக்க முடியவில்லை. அந்த பகுதியே இருட்டாக இருந்தது. அப்போது, இரவு 9:40 மணி இருக்கும். அந்த நேரம், வேளச்சேரியில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் ஒன்று வந்தது. அலைபேசியில் உள்ள டார்ச் லைட்டை, ரயிலை நோக்கி காண்பித்தேன். அந்த ரயிலில் பயணித்த ஒருவர், என்னை பார்த்து மீட்டார்.

இதற்கிடையே, என் கணவரும் ரயில் நிலையத்திற்கு வந்தார். நகையை பறித்த ஆசாமி, வடமாநிலத்தை சேர்ந்தவனை போல் காணப்பட்டான். சம்பவம் குறித்து, ரயில்வே போலீசாரிடம் புகார் கொடுத்து உள்ளோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

சிகிச்சைக்காக, ஸ்டான்லியில் அனுமதிக்கப்பட்டுள்ள முனீஸ்வரிக்கு, தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா உதவியுடன், முனீஸ்வரி கூறிய அடையாளங்களை வைத்து, வடமாநில ஆசாமியை எழும்பூர் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.











அப்போது என்னுடன் பெட்டியில் இருந்த மற்ற பெண்கள், தாங்கள்

உட்கார்ந்திருந்த இடத்தை விட்டுக் கூட எழுந்திருக்கவில்லை;

உதவிக்கு வரவில்லை





- நமது நிருபர் -

பதிவு : selvaravi87
நாள் : 31-Dec-14, 8:20 am

மேலே