எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இரண்டு நவீன கவிதைகள் . படித்து நீங்களும் முயற்சிக்கலாமே...

இரண்டு நவீன கவிதைகள் .
படித்து நீங்களும் முயற்சிக்கலாமே .

---------------- க்ரிஷ்கெய்லிற்கு பந்து வீசுதல் -----------------------
நான் இந்த ஆட்டத்திலேயே இல்லை
சொல்லப்போனால் ஒரு பார்வையாளனாக கூட இல்லை

மைதானத்திற்குள் தரதரவென இழுத்துவரப்பட்டு
பந்துவீசுமாறு பணிக்கப்பட்டிருக்கிறேன்

எதிரே க்ரிஷ்கெய்ல் நின்றுகொண்டிருக்கிறார்

அணித்தலைவர் ஓடிவந்து
பந்து அந்தரத்திலேயே இடப்பக்கம் சுழன்று
மறுபடியும் வலப்பக்கம் சுழன்று
விழுமாறு வீசச்சொன்னார்

நான் அவரது முகத்தையே பார்த்தேன்
அவர் திரும்பி ஓடிவிட்டார்.

எதிரே க்ரிஷ்கெய்ல் நின்றுகொண்டிருக்கிறார்...

அவரின் சடாமுடி ருத்ரதாண்டவனை குறித்து நிற்கிறது.
அடேய் சுடலையப்பா….

இந்த பந்தை வானத்திற்கு அடி…
திரும்பி வரவே வராத படிக்கு வானத்திற்கு அடி.
........................................................................................................................................................................................................................................

------------------------------அந்தக் காலம் மலையேறிப் போனது ---------------------------

என் வீட்டுக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது.

ஆறு வயதில் விரல் சூப்பூம் பழக்கத்தை
இந்த மலை மீது தான் ஏற்றி விட்டேன்
.
அன்னைக்கு செய்து கொடுத்த மூன்று சத்தியங்களையும்
ஒரு நள்ளிரவில் இந்த மலைக்கு அனுப்பினேன்

கிரிக்கெட் மட்டை, கை மைக், கீ- போர்டு
எல்லாவற்றையும் இந்த மலைதான் வாங்கிக் கொண்டது

ஒரு காதல் மட்டும் இந்த மலை மீது
ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருந்தது வெகுகாலமாக.

நேற்றது உச்சிக்கு சென்று மறைந்ததை பார்த்தேன்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
- எழுதியவர் கவிஞர் இசை .இவரது கவிதை தொகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன் .
சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கி விடுங்கள் .
பெயர் - அந்தக் காலம் மலையேறிப்போனது

நாள் : 9-Jan-15, 3:52 pm

மேலே