எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கராத்தே, சிலம்பம் விளையாட்டுகளில் அசத்தும் அஷ்டலட்சுமி கோவில் அர்ச்சகர்...

கராத்தே, சிலம்பம் விளையாட்டுகளில் அசத்தும் அஷ்டலட்சுமி கோவில் அர்ச்சகர்
இதுதொடர்பாக அஷ்டலட்சுமி கோவில் அர்ச்சகர் சேஷாத்ரி நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-

நான் வைதீக குடும்பத்தில் பிறந்தவன். என்னுடைய தந்தை சமஸ்கிருத ஆசிரியராக மாயவரத்தில் பணியாற்றினார். பின்னர் என் தந்தைக்கு கோவில் அர்ச்சகர் பணி கிடைத்ததும் மாயவரத்தில் இருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்தோம். 4-ம் வகுப்பு வரை மாயவரத்தில் படித்தேன். நான் பள்ளி பருவத்தில் இருந்தே எம்.ஜி.ஆர்., புரூஸ் லீ மற்றும் ‘ஜெட்லி’ ஆகியோரின் படங்களை விரும்பி பார்ப்பேன். எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து மான் கொம்பு சுற்றுதல், சிலம்பம் ஆகிய கலைகளை கற்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. புரூஸ் லீ படத்தை பார்த்து கராத்தே கலையை கற்றுவிடவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உதித்தது.

பள்ளி பருவத்தில் வாரத்திற்கு 2 முறையாவது அண்ணா சாலைக்கு வந்து தியேட்டரில் புரூஸ் லீ படத்தை பார்த்துவிடுவேன். கராத்தே கலையை கற்றுக்கொள்வதால் போர்க்குணம், வன்முறை தொடர்பான குணநலன்கள் வந்துவிடும் ஆகவே கோவிலில் அர்ச்சகர்களாக பணியாற்றக்கூடிய சாத்வீக குடும்பத்தை சேர்ந்த பிராமணர்கள் தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ளக்கூடாது என்று என்னுடைய தந்தை எனது கலை ஆர்வத்துக்கு தடை போட்டார். ஆனாலும் எனக்கு கராத்தே மீதான ஈடுபாடு குறையவில்லை.

அஷ்டலட்சுமி கோவில் பாதுகாவலராக வேலை செய்த நேபாள நாட்டை சேர்ந்த பாதுகாவலன் எனக்கு கராத்தே அடிப்படை பயிற்சிகளை கற்றுக்கொடுத்தார். தந்தைக்கு தெரியாமல் மாயவரத்தில் உள்ள எனது மாமா உதவியோடு அவர் வீட்டு அருகே உள்ள குரு ஒருவரிடம் கராத்தே கலையை கற்றேன். பள்ளி பருவத்தில் விடுமுறை நாட்களில் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை நாள் ஒன்றுக்கு கடுமையான பயிற்சியெல்லாம் செய்துள்ளேன். கோவிலில் பணியாற்றும்போது மாதத்துக்கு 4 முறை விடுமுறை எடுத்துவிட்டு கராத்தே பயிற்சி செய்வதற்காக சென்னையில் இருந்து மாயவரம் புறப்பட்டு சென்றுவிடுவேன். சுமார் 8 வருட கடுமையான பயிற்சிக்கு பின்னர் கராத்தேயில் ‘பிளாக் பெல்ட்’ வாங்கி சாதனை படைத்தேன்.

என் சாதனைகள் நாளிதழ்களில் வந்த பின்னர் நான் கராத்தே கற்றுக்கொண்டதை எனது தந்தை ஏற்றுக்கொண்டார். நான் கராத்தே விளையாட்டில் சாதனைகள் செய்வதற்கு அவர்தான் காரணம். இதுதவிர குத்துச்சண்டை, சிலம்பம், நெஞ்சாக்கு, கோபுடோ, டோல்பா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் படித்தேன். சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகள் ஒழுக்கம் மற்றும் உடல் ஆரோக்கியம் நிறைந்தது. உடல் ஆரோக்கியத்துக்காக சத்து நிறைந்த காய்கறிகள் சாப்பிடுவதையே விரும்புகிறேன்.

கோவில் அர்ச்சகர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் நான் கற்றுக்கொண்ட கராத்தே, சிலம்பம், நெஞ்சாக்கு உள்ளிட்ட தற்காப்பு கலைகளை மேலும் பரப்பும் வகையில் பள்ளி சிறுவர்களுக்கு இலவசமாக கற்றுக்கொடுக்க முடிவு செய்துள்ளேன்.

நன்றி:மாலை மலர்

பதிவு : அருண்ராஜ்
நாள் : 26-Feb-15, 10:13 am

மேலே