தமிழில் எழுதும் பொழுது பொதுவாக ஏற்படும் பிழைகளைக் தவிர்ப்பதற்கு...
தமிழில் எழுதும் பொழுது பொதுவாக ஏற்படும் பிழைகளைக் தவிர்ப்பதற்கு நான் கேட்ட கேள்விக்குப் பதிலாகவும், தளத்தில் கட்டுரையாகவும் வந்தனவற்றை சேமித்து வைத்திருந்ததைப் பகிற்கிறேன்.
நன்றி: திரு விஜய் நரசிம்மன், Dr VK கன்னியப்பன்....
நான் அறிந்த வரையில் பொதுவாக ளகர/லகர, றகர/ரகர, ணகர/னகர பிழைகள் நிறைய வரும். அடிப்படையில் டகர ளகர ணகரங்கள் தொடர்புடையவை (கிட்டத்தட்ட ஒரே ஒலியின் வெவ்வேறு பரிணாமங்கள்) என்று உணர்ந்துகொள்ளுதல் ஓரளவிற்கு உதவும். எடுத்துக்காட்டாய், ‘கண்டான்’ என்ற சொல்லில், ‘ட்’ என்பதற்கு முன் ‘ண்’ மட்டுமே வரும், ‘ன்’ வராது. அது போலவே ‘ள்’/’ண்’ புணர்ச்சியில் ‘ட்’ ஆக மாறும் [கண்+து = கண்டு] இதே போல றகரமும் னகரமும் இனமானவை (’ன்’ மெய்க்கு முன் ‘ற்’ மெய்யே வரும், ‘ர்’ வராது: ’கன்று’ - ’கன்ரு’ அல்ல!) இப்படியே லகர ளகரமும் (ஆனால், நிறைய லகர/ளகர, றகர/ரகர வேறுபாடுகள் பொருள் குறித்தே வரும், இச்சொற்களை நினைவில் கொள்வதன் மூலம் பிழையை தவிர்க்கலாம்... பள்ளி/பல்லி, வெள்ளம்/வெல்லம்)
சொற்களில் இவை வரும் வகையை (pattern) கவனிப்பதன் மூலம் இவற்றைத் தெளிவாய் உணரலாம்...
அடுத்தபடியாக அதிகம் வருவது வல்லினமிகும் மிகா இடங்கள் (எனக்கு அதிகமாக தொல்லை கொடுத்த ஒன்று இதுதான்! இன்னும் முழுமையாய் கற்ற பாடில்லை!)
நான் அடிப்படையில் சில விதிகளை மட்டும் மனத்தில் கொண்டிருக்கிறேன் (இவை விதிவிலக்கில்லாதவை, எனவே எளிமையானவை, சில வல்லின விதிகள் பொருள் வேறுபாட்டால் வருபவை, கொஞ்சம் கடினம்!)
இரண்டாம் நான்காம் வேற்றுமை உருபுகளுக்குப் பிறகு வல்லினம் வந்தால் மிகும். அதாவது ‘ஐ’ (2ம் வேற்றுமை) மற்றும் ‘கு’ (4ம் வேற்றுமை) பின் க்/ச்/த்/ப் வந்தால் அவை இரட்டிக்கும்: அவனை”க்” கண்டேன், அவனுக்கு”க்” கொடுத்தேன். (வல்லினமான டகரமும் றகரமும் சொல்லின் முதலில் வராது!)
அகர இகர ஈற்று வினையெச்சங்களுக்குப் பிறகு வல்லினம் மிகும்: சொல்ல’ச்’ சொன்னான், கூட்டி’ச்’ சென்றான்.
உகர ஈற்று வினையெச்சமாக இருந்தால், அது வன்தொடர் குற்றியலுகரமாக இருந்தால் வல்லினம் மிகும், இல்லையேல் மிகாது: எடுத்து’க்’ கொடுத்தான் (எடுத்து என்பது உகரவீற்று வினையெச்சம், இதில் ‘து’ என்ற குற்றியலுகரத்திற்கு முன் ‘த்’ என்ற வல்லெழுத்து உள்ளது, இது வன்தொடர் குற்றியலுகரம், எனவே வல்லினம் மிகும்!)
கொண்டு சென்றான் (இது மெந்தொடர் குற்றியலுகர உகரவீற்று வினையெச்சம். ‘டு’ என்ற குற்றியலுகரத்திற்கு முன்னால் ‘ண்’ என்ற மெல்லினம் உள்ளது! எனவே வல்லினம் மிகாது!)
இதெல்லாம் வேணானுதான ஒரு மென்பொருள் கேட்கிறேன்... மறுபடி இதேவே :-) உங்க ‘மைண்ட் வாய்ஸ்’ கேக்குது நண்பா, இருந்தாலும் ஒரு கணினி சொல்லி நாம் தெரிஞ்சுக்குறதவிட நாமளே தெரிஞ்சுக்குறது சிறந்ததுங்கறது என் பணிவான எண்ணம்... தொடங்கிட்டா ஆழமா போறது எளிது :-
இந்த தளம் ஓரளவுக்கு உதவும்... "dev dot neechalkaran dot com / naavi dot html" ('dot' என்பதற்கு ‘.’ இட்டுக்கொள்ளவும்)
இதில் முக்கியமாக வல்லினமிகுதி, மரபுப் பிழைகளைக் கண்டறியலாம்
--------- விஜய் நரசிம்மன்.
==========================================================
வலிமிகுதல் அல்லது வலி மிகும் இடங்கள்
---------------------------------------------------
வல்லினம் என்பது பழந்தமிழ் இலக்கணங்களின் அடிப்படையில், தமிழில் உள்ள மெய்யெழுத்துக்களின் மூன்று வகுப்புக்களுள் ஒன்று. க், ச், ட், த், ப், ற் எனும் ஆறு எழுத்துக்களையும் வல்லின எழுத்துக்கள் என்கின்றனர். இவை வலிய ஓசை உடையவையாதலால் இப்பெயர் பெற்றன. இவற்றை வலி, வன்மை, வன்கணம் என்னும் பெயர்களாலும் அழைப்பது உண்டு.
தமிழைப் பிழையின்றி எழுத விரும்புபவர்கள், வல்லின எழுத்துக்கள் மிகும், மிகா இடங்களை அறிந்து கொள்ள வேண்டும். வல்லின எழுத்து மிகுந்து வருவதையே இலக்கணத்தில் "வலிமிகுதல்' எனப்படும். இரண்டு சொற்கள் இணையும்போது, இடையில் க், ச், த், ப் ஆகிய ஒற்றெழுத்து வந்து இரு சொற்களையும் ஒன்று சேர்த்தால் அதற்கு "வலி மிகுதல்' என்று பெயர்.
வலி மிகுவதால், சொற்களில் பொருள் வேறுபாடு தெரிவதற்கும், பொருளைச் சரியாக உணர்வதற்கும், உச்சரிக்கும் போது தமிழ்மொழிக்கு உரிய இனிய ஓசையை வெளிப்படுத்துவதற்கும் உதவுகிறது.
சில ஊடகங்கள், அனைத்துத் தொலைக்காட்சிகளின் அறிவிப்புகள், செய்திகள், சில செய்தி நாளிதழ்கள், விளம்பரப் பலகைகள், ரயில் நிலைய அறிவிப்புப் பலகைகள் எனப் பல இடங்களில் வலி மிக வேண்டிய இடத்தில் வலி மிகாமலும், வலி மிகாத இடத்தில் வலி மிகுத்தும் இருப்பது (ஒற்றுப்பிழைகள்) மிகவும் வருந்தற்குரியது.
நம் எழுத்து தளத்தில் உள்ள சிலரும் ஒற்றுப் பிழைகளுடன் எழுதுகின்றனர். கருத்திற்க்கு - வல்லின 'ற்' றை அடுத்து க், ப் போன்ற ஒற்றெழுத்துகள் வராது. அர்ப்பணிக்கிறேன் என்ற சொல்லை அற்ப்பனிக்கிறேன் என்று எழுதுகிறார். ஒரு சொல்லில் மூன்று தவறுகள். கவனக் குறைவுதான் காரணம். கேட்டால் எனக்கு நன்றாகத் தமிழ் வராது என்றோ, மொபைல் போனில் டைப் செய்கிறேன் என்றோ சொல்லக் கேட்கிறேன்.
இலக்கணம் படிக்காதவர்களும் மிக எளிதாக வல்லெழுத்து மிகுதலை அறிந்துகொள்ள கீழே தரப்பட்டுள்ள சில விதிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அ, இ, எ,
அந்த, இந்த, எந்த,
ஆங்கு, ஈங்கு, யாங்கு,
அப்படி, இப்படி, எப்படி
ஆண்டு (இடம்), ஈண்டு, யாண்டு,
அவ்வகை, இவ்வகை, எவ்வகை,
அத்துணை, இத்துணை, எத்துணை,
இனி, தனி, அன்றி, இன்றி
மற்ற, மற்றை, நடு பொது,
அணு, முழு, புது, திரு
அரை, பாதி, எட்டு, பத்து,
முன்னர், பின்னர்.
ஆகிய இவை நிலை மொழியாக (முதலில் நிற்கும் சொல்) இருந்து, க, ச, த, ப என்ற வல்லின எழுத்துகளுள் எது வருமொழி முதலாக வந்தாலும் வல்லின எழுத்தானது கட்டாயம் மிகும்.
க என்றால், க முதல் கௌ வரையிலுள்ள எழுத்துகளாகும். இவ்வாறே,
ச (ச முதல் சௌ வரை), த (த முதல் தௌ வரை), ப (ப முதல் பௌ வரை)
என்னும் எழுத்துகளுக்கும் பொருந்தும்.
அதாவது, அடுத்து வரும் சொல்லின் முதலில் க, ச, த, ப வர்க்கம் வந்தால்தான் வல்லெழுத்து மிகும். க, ச, த, ப வர்க்கம் தவிர வேறு எழுத்துகள் வந்தால் மிகாது.
அங்கு, இங்கு, எங்கு என்னும் சொற்களுக்குப் பின் கட்டாயம் வல்லெழுத்து மிகும். சில எடுத்துக்காட்டுகள்:
அ - அப்பக்கம், இ - இச்செடி, எ - எப்பக்கம்,
அந்தச் செடி, இந்தக் குழந்தை, எந்தப் பாடம்?,
அங்குச் சென்றான், எங்குக் கேட்டாய்?, எங்குச் சென்றாய்?, ஆங்குச் சென்றான்,
அப்படிப் பேசு, இப்படிச் சொல், எப்படித் தந்தாய்?,
அவ்வகைச் செடி, இவ்வகைப் பூக்கள், எவ்வகைக் கொடி?,
அத்துணைப் பெரிய, இத்துணைச் சிறிய, எத்துணைப் பாடல்கள்,
அங்குப் போனார், இங்குச் சென்றார்,
இனிப் பேசமாட்டேன், தனிக் குடித்தனம்,
காக்காக் கதை, அம்மாக் கவிதை,
அம்மாச் செல்லம், அப்பாச் செல்லம்,
மற்றப் பிள்ளைகள், நடுக்கடல், பொதுக்கூட்டம்,
முழுப்பக்கம், புதுப்பொருள், புதுத்துணி, அரைப்பக்கம்,
பாதித்துணி, எட்டுக் குழந்தைகள், பத்துச் செடிகள்,
முன்னர்க் கண்டேன், பின்னர்ப் பேசுவேன்.
(தொடரும்) -
தொடர்ச்சி.
வலிமிகுதல் அல்லது வலி மிகும் இடங்கள் பகுதி 2
-----------------------------------------------------------
வல்லினம் என்பது பழந்தமிழ் இலக்கணங்களின் அடிப்படையில், தமிழில் உள்ள மெய்யெழுத்துக்களின் மூன்று வகுப்புக்களுள் ஒன்று. க், ச், ட், த், ப், ற் எனும் ஆறு எழுத்துக்களையும் வல்லின எழுத்துக்கள் என்கின்றனர். இவை வலிய ஓசை உடையவையாதலால் இப்பெயர் பெற்றன. இவற்றை வலி, வன்மை, வன்கணம் என்னும் பெயர்களாலும் அழைப்பது உண்டு.
தமிழைப் பிழையின்றி எழுத விரும்புபவர்கள், வல்லின எழுத்துக்கள் மிகும் - மிகா இடங்களை அறிந்து கொள்ள வேண்டும். வல்லின எழுத்து மிகுந்து வருவதையே இலக்கணத்தில் "வலிமிகுதல்' எனப்படும். இரண்டு சொற்கள் இணையும்போது, இடையில் க், ச், த், ப் ஆகிய ஒற்றெழுத்து வந்து இரு சொற்களையும் ஒன்று சேர்த்தால் அதற்கு "வலி மிகுதல்' என்று பெயர்.
வலி மிகுவதால், சொற்களில் பொருள் வேறுபாடு தெரிவதற்கும், பொருளைச் சரியாக உணர்வதற்கும், உச்சரிக்கும் போது தமிழ்மொழிக்கு உரிய இனிய ஓசையை வெளிப்படுத்துவதற்கும் உதவுகிறது.
இலக்கணம் படிக்காதவர்களும் மிக எளிதாக வல்லெழுத்து மிகுதலை அறிந்துகொள்ள கீழே தரப்பட்டுள்ள சில விதிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஓரெழுத்து ஒருமொழிக்குப் பின் வலி மிகும்.
உதாரணம்:
பூ+பறித்தான் = பூப்பறித்தான்
தீ+பிடித்தது = தீப்பிடித்தது
கை+குழந்தை = கைக்குழந்தை
பூ+பந்தல் = பூப்பந்தல்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வலி மிகும்.
உதாரணம்:
அறியா+பிள்ளை = அறியாப்பிள்ளை
காணா+காட்சி = காணாக்காட்சி
சொல்லா+சொல் = சொல்லாச்சொல்
நிலையா+பொருள் = நிலையாப்பொருள்
தீரா+துன்பம் = தீராத்துன்பம்
சொற்கள் க்கு, ச்சு, த்து, ட்டு, ப்பு, ற்று என முடிந்திருந்தால், அச்சொற்களை வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் என்பர்.
மக்கு, தச்சு, செத்து,
விட்டு, உப்பு, கற்று
ஆகிய சொற்கள் வன்தொடர் குற்றியலுகரச் சொற்கள் ஆகும்.
இத்தகைய சொற்கள் நிலைமொழியாக இருந்து வருமொழி முதலில் க, ச, த, ப என்னும் எழுத்துகள் வந்தால், கட்டாயம் வல்லெழுத்து மிகும்.
உதாரணம்:
மக்குப்பையன், தச்சுத்தொழில், செத்துப்பிழைத்தான்,
விட்டுச்சென்றார், உப்புக்கடை, கற்றுக் கொடுத்தார்,
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, எதிர்த்துப் பேசினார், விற்றுச்சென்றான்.
அகர ஈற்று வினையெச்சத்தின் பின்னும்,
இகர ஈற்று வினையெச்சத்தின் பின்னும்,
ஆய், போய் என்னும் வினையெச்சங்களின் பின்னும் வல்லெழுத்து மிகும்.
அகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லெழுத்து மிகும்.
உதாரணம்:
வரக்கூறினார், தேடப்போனார்.
இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லெழுத்து மிகும்.
உதாரணம்:
கூறிச்சென்றார், வாடிப்போயிற்று.
ஆய் - என்னும் வினையெச்சத்தின் பின் வல்லெழுத்து மிகும்.
உதாரணம்:
சொன்னதாய்ச் சொல், வந்ததாய்க் கூறு.
போய் - என்னும் வினையெச்சத்தின் பின் வல்லெழுத்து மிகும்.
உதாரணம்:
போய்ச் சொன்னார், போய்த் தேடினார்.
ஈரொற்று வரும் வழி:
பதினெட்டு மெய்யெழுத்துகளில் ய, ர, ழ என்னும் மூன்று மெய்யெழுத்துகளின் பின் இன்னொரு மெய் (வலி) மிகும்.
உதாரணம்:
காய் காய்க்கும், ஊர்க்குப் போ, நல்வாழ்க்கை.
(முற்றும்)
Dr.V.K.Kanniappan • நேற்று 9:23 am
அன்புள்ள திரு T.N.முரளி,
'ர' 'ற' உள்ள இலக்கணத்தை விளக்கும்படி கேட்டிருக்கிறீர்கள். கேட்டிருக்கிரீற்க்கள் என்று நான் எழுதினால் சரியாகுமா? தவறான தமிழ் எழுத்துக்களின் பயன்பாடு என்று அறிவீர்கள்..
ஈரொற்று வரும் வழி: ஈரொற்று என்றால் அனைவர்க்கும் தெரியுமென்று நம்புகிறேன். சொற்களில் மெய்யெழுத்து ஒற்றெழுத்தாய் வருவதை அறிவோம். இரண்டு ஒற்றெழுத்துகள் (ஈரொற்று) ய, ர, ழ என்னும் மூன்று மெய்யெழுத்துகளின் பின் இன்னொரு மெய்யெழுத்து (வலி) மிகும்.
பதினெட்டு மெய்யெழுத்துகளில் ய, ர, ழ என்னும் மூன்று மெய்யெழுத்துகளின் பின் இன்னொரு மெய்யெழுத்து (வலி) மிகும்.
உதாரணம்:
காய் காய்க்கும், ஊர்க்குப் போ, நல்வாழ்க்கை.
நல்ல வாய்ப்பு, அனைவர்க்கும் கொடு, சீழ்க்கை தா, காழ்ப்பு உணர்ச்சி
கற்பகம், அற்புதம், பற்பல, நற்பணி, அதற்கு என்ற சொற்களில் கற்ப்பகம், அற்ப்புதம், பற்ப்பல, நற்ப்பணி, அதற்க்கு, சொற்க்களில் என்று வராது.
அரம், அறம், முரசு, முறம், பரவை, பறவை, கரவு, கறவை, இரவு, துறவு, மரம், மறம் என்ற சொற்களில் ர, ற என்ற எழுத்துகள் மாறும் பொழுது பொருளும் மாறுபடும். (மாரும் பொழுது பொறு(லு)ளும் மாருபடும் என்(ரு)று எ(லு)ழு(ளு)தினால் தவ(ர)றல்ல(ளழ)வா? .
அன்புடன்,
வ.க.கன்னியப்பன்