உங்கள் பேரன் பேத்திகளுக்கு இந்தமாதிரி நீதிக்கதைகளைக் கூறுவீர்களா ?...
உங்கள் பேரன் பேத்திகளுக்கு இந்தமாதிரி நீதிக்கதைகளைக் கூறுவீர்களா ?
நல்ல மனம் வாழ்க !!
ஒரு மன்னர் தினமும் நகர்வலம் வருவதுண்டு.
வழியில் சந்தனக் கட்டைகள் வணிகம் செய்யும் ஒரு வியாபாரி கடையைவிட்டு இறங்கி வந்து மன்னனை வணங்குவார். மன்னரும் பதிலுக்கு வணக்கம் செலுத்திவிட்டுச் செல்வார்.
ஒருநாள், அப்படி வணிகர் வணக்கம் கூறியபோது, மன்னருக்கு அவர்மீது அளவிலா வெறுப்பு தோன்றி பதில் வணக்கம் செய்யாது சென்றார். மறுநாளும், அதேபோல் வியாபாரி வணக்கம் கூறிய போது, அவரைக் கொன்றுவிட வேண்டும் என்று மன்னருக்குத் தோன்றியது. மன்னருக்கே அதற்கான காரணம் புரியவில்லை. மன்னர் அரண்மனையிலிருந்த ஞானி ஒருவரிடம், இதைக் கூறி காரணம் கேட்டார். அவர் மூன்று நாட்கள் கொடுக்கும்படி வேண்டிக்கொண்டார்.
அடுத்த இரண்டு நாட்களும் மன்னர் வர்த்தகரிடம் இதே போல் நடந்து கொண்டார். மூன்றாம் நாள் மன்னர் சென்றபோது, வழக்கம்போல் வியாபாரி இறங்கி வந்து வணக்கம் தெரிவித்தார், அன்று மன்னரும் வெறுப்பேதுமின்றி பதில் வணக்கம் செய்துவிட்டுச் சென்றார்.
அரண்மனை திரும்பியவுடன், ஞானியை அழைத்து என்ன நடந்தது என்று வினவினார். அவரும், “மன்னா, அந்த வியாபாரி ஏராளமான சந்தனக் கட்டைகளை வாங்கிக் குவித்திருந்தார். விற்கவில்லை. எனவே மன்னர் வீட்டில், மரணம் ஒன்று சம்பவித்தால், அவ்வளவு சந்தனக் கட்டைகளையும் அரண்மனைக்கு விற்றுவிடலாமே என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றியிருந்தது. அதைப் புரிந்துகொண்ட தங்கள் உள்மனசு அவரை வெறுத்தது” என்றார்.
“பின் இன்று என் மனசு எப்படி மாறியது” என்று மன்னர் வினவினார். “அது ஒன்றுமில்லை மன்னா..அவ்வளவு சந்தனக் கட்டைகளையும் நேற்று நான் விலை கொடுத்து வாங்கிவிட்டேன் அதுதான் அவருக்கு இன்று அந்த தீய எண்ணம் இல்லை. தங்கள் மனமும் ஏற்றுக் கொண்டது” என்றார்.
நமக்கு மனசு நல்லா இருந்தா, மத்தவங்களோட கெட்ட எண்ணம் ஏதோ ஒருவகையில் நமக்கு புலப்படும் !!