ஆசை உயர்வுக்கு வழிவகுக்கும்... பேராசை பேரிழப்புக்கு இட்டுச்செல்லும்... சென்ற...
ஆசை உயர்வுக்கு வழிவகுக்கும்... பேராசை பேரிழப்புக்கு இட்டுச்செல்லும்...
சென்ற நிதி ஆண்டின்(2014-2015) கடைசியில் வெளியிடப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் வரவு செலவு திட்டத்தில் நம் அரசுகளின் கடன் சுமை சிறிது அச்சத்தை தந்தது. அது அரசின் கடனல்ல நமது கடனே. இதை தவிர நாம் ஒவ்வொருவரும் நிதமும் கடனாளியாக மாறிக்கொண்டே இருக்கிறோம். இன்று பெருகிவரும் இணைய வர்த்தகத்தின் மூலம் இது சாத்தியமாகி கொண்டிருக்கிறது. இதற்கான உதாரணங்கள் நம்முன் பல உண்டு. எங்கள் அறையில் உள்ள நால்வரில் இருவருக்கு வாரம் தவறாமல் ஏதேனும் ஒரு பொருள் இணையம் மூலம் வீடு தேடி வந்து விடும்.
இணைய வர்த்தகம் நம்மை சோம்பல் மனிதனாக்கவில்லை. கடனாளியாக்குகிறது.
இணைய வர்த்தகத்துக்கு எதிரானதல்ல இந்த பதிவு.. பொருள் மயக்கம் கொண்டு கடன்படுவோர்க்கான விழிப்புணர்வு.
“கடன் கொண்டார் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் இலங்கை வேந்தன்” ; உணர்வுமிக்க இந்த வரி இன்று உயிருடன் இல்லை. கடன் வாங்குவது என்பதை சாப்பிடுவதற்கு அத்தியாவசியமான அரிசி, பருப்பு வாங்குவது போல் வாங்கி கொண்டே இருக்கிறோம்.
“பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்று சொன்னவர் வள்ளுவர். அறமுணர்ந்த அவரே “வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை” என்றும் கூறியுள்ளார்.
2012-ஆம் ஆண்டு ஒரு தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் ஒரு பொருளாதார நிபுணர் கூறிய வரிகள் .
“ பொருளாதார நெருக்கடியில் உலக வல்லரசுகள் பல தவித்த போது, இந்தியா நிலைகுலையாமல் நின்றது. அதில் நம் முன்னாள் பிரதமருக்கும், ரிசர்வ் வங்கி கவர்னர்க்கும் பெரும்பங்கு இருந்த போதும், நம் வீட்டு பெண்களுக்கு அதில் மறைமுக பங்கு உண்டு. அவர்கள் கடுகு டப்பாவில் சேகரித்து வைக்கும் சிறு சேமிப்பே கடும் நெருக்கடியின் போது நம்மை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.” என்று கூறினார்.
சேமிப்பின் அவசியத்தை பள்ளி பயின்ற காலம் முதல் நன்றாக உணர்ந்தவர்கள் நாம்.
சிந்திப்போம் ! சேமிப்போம் !! செயல்படுவோம் !!!
அனைவருக்கும் இந்நிதி ஆண்டின் (2015-2016) புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
பணத்தினை பெருக்குவோம் ! பகுத்துண்டு வாழ்வோம் !!